Published:Updated:

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் விதிமீறல்! - 132 வழக்குகள்... 199 பேர் கைது!

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள் ( உ.பாண்டி )

நீதிமன்ற நிலுவையிலுள்ள 87 வழக்குகளிலும் தண்டனை பெற்றுத்தரும் வகையில் முடிக்க, விசாரணை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டிருக்கிறார்.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் மாவட்ட நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மீது 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீஸாரைப் பணி செய்யவிடாமல் தடுத்த 18 பேர் உட்பட 199 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்திருக்கிறார்.

இமானுவேல் சேகரன் குருபூஜை விதி மீறலில் கைதானவர்கள்.
இமானுவேல் சேகரன் குருபூஜை விதி மீறலில் கைதானவர்கள்.
உ.பாண்டி

பரமக்குடியில், கடந்த மாதம் இமானுவேல் சேகரன் நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது. கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் விதித்திருந்த கட்டுப்பாடுகளை மீறிப் பலர் விதி மீறலில் ஈடுபட்டனர். இதையடுத்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீஸார் வீதி மீறலில் ஈடுபட்ட 13 அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஆறு கிராமங்களைச் சேர்ந்தவர்களைக் கண்டறிந்தனர்.

மாவட்டம் முழுவதும் இது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகள் இருவருக்கு தலா ரூ 11,500 அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிமன்ற நிலுவையிலுள்ள 87 வழக்குகளிலும் தண்டனை பெற்றுத்தரும் வகையில் முடிக்க, விசாரணை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் புலன்விசாரணையில் உள்ள 43 வழக்குகளிலும் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
உ.பாண்டி

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் தடைவிதிக்கப்பட்ட வழித்தடத்தில் அத்துமீறிச் சென்ற மானாமதுரையைச் சேர்ந்த 18 பேர், காவல்துறை வாகனத்தின் மீது ஏறி, போலீஸாரைப் பணி செய்யவிடாமல் தடுத்த பரமக்குடி அருகேயுள்ள நாகநாதபுரத்தைச் சேர்ந்த 18 பேர் உள்ளிட்ட 199 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்திருக்கிறார்ர்.

எஸ்.பி கார்திக்
எஸ்.பி கார்திக்
உ.பாண்டி

மேலும், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் விதிக்கும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் அனைவரும் மதித்து ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், அப்படியின்றிக் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மாவட்ட கண்காணிப்பாளர் எச்சரித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு