Published:Updated:

ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்க சிலை... தஞ்சையில் மீட்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்!

ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்க சிலை

பச்சை நிற மரகத லிங்கம் குறித்து போலீஸார் விசாரித்திருக்கின்றனர். மரகத லிங்கம் வீட்டில் இல்லை என்றும், வங்கி லாக்கரில் இருப்பதாகவும் அருணபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்க சிலை... தஞ்சையில் மீட்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார்!

பச்சை நிற மரகத லிங்கம் குறித்து போலீஸார் விசாரித்திருக்கின்றனர். மரகத லிங்கம் வீட்டில் இல்லை என்றும், வங்கி லாக்கரில் இருப்பதாகவும் அருணபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்க சிலை

தஞ்சாவூரில் அரசு உதவிபெறும் பள்ளியின் உரிமையாளர் ஒருவரிடமிருந்து உரிய ஆவணங்கள் இல்லாததால், வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்க சிலையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிலைவைத்திருந்த சாமியப்பா வசிக்கும் அப்பார்ட்மென்ட்
சிலைவைத்திருந்த சாமியப்பா வசிக்கும் அப்பார்ட்மென்ட்

தஞ்சாவூர் அருளானந்த நகரிலுள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் வசிப்பவர் சாமியப்பா. இவர் மகன் அருணபாஸ்கர் அதே பிளாட்டில் வசித்துவருகிறார். தஞ்சாவூர் மேலவீதி அருகேயுள்ள பிரபல அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றை நடத்திவருகிறார் சாமியப்பா. இவர் பல்வேறு தொழில்கள் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நாகை மாவட்டம், திருக்குவளையிலுள்ள கோயிலிலிருந்த பழைமையான மரகத லிங்க சிலை ஒன்று காணாமல் போனது. அந்தச் சிலை குறித்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்த நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சாமியப்பாவிடம் பழைமையான சிலைகள் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து அது தொடர்பான விசாரணையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ரகசியமாகத் தொடங்கினார்கள்.

சாமியப்பா பிளாட்
சாமியப்பா பிளாட்

இதையடுத்து நேற்று முன்தினம், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்ட போலீஸார் தஞ்சாவூரிலுள்ள சாமியப்பா பிளாட்டுக்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது சாமியப்பாவிடமும், அவர் மகன் அருணபாஸ்கரிடமும் விசாரித்ததாகத் தெரிகிறது. பின்னர் பச்சை நிற மரகத லிங்கம் குறித்து போலீஸார் விசாரித்திருக்கின்றனர். மரகத லிங்கம் வீட்டில் இல்லையென்றும், வங்கி லாக்கரில் இருப்பதாகவும் அருணபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

அதன் பின்னர், நேற்றைய தினம் வங்கி லாக்கரிலிருந்த மரகத லிங்க சிலையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்டனர். இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``2016-ல் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கோயிலில் இருந்த பழைமையான மரகத லிங்க சிலை திருட்டுப்போனதாக ஆதீனத்தின் கண்காணிப்பாளர் சவுரி ராஜன் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது.

தஞ்சாவூரைச் சேர்ந்த சாமியப்பாவிடமிருந்து பச்சை நிற மரகத லிங்க சிலையை மீட்டிருக்கிறோம். சிலையை மீட்பதற்காகச் சென்ற போலீஸாரிடம் குறிப்பிட்ட மரகத லிங்க சிலை பாரம்பர்யமாக நாங்கள் வைத்திருக்கிறோம். இது எங்களுடைய சிலை என தெரிவித்தனர். அப்படியானால் சிலைக்கான ஆவணத்தைக் காட்டுங்கள் எனக் கேட்டோம்.

மீட்கப்பட்ட மரகத லிங்கம்
மீட்கப்பட்ட மரகத லிங்கம்

ஆனால், அதற்கான ஆவணம் எதுவும் இல்லை. அப்போது சிலை உங்களுடையதுதான் என்பதற்கான ஆவணம் இருந்தால் வரும் 5-ம் தேதிக்குள் எடுத்து சமர்ப்பியுங்கள் என்று கூறினோம்.

அதைத் தொடர்ந்து, வங்கி லாக்கரிலிருந்த சிலை மீட்கப்பட்டு சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. ஜெம்மாலஜிட் மூலம் இது மரகதச் சிலைதான் என்பதை உறுதி செய்திருக்கிறோம். அதன் மதிப்பு ரூ.500 கோடி இருக்கும் எனவும் தெரிகிறது. மீட்கப்பட்ட சிலை திருக்குவளை கோயிலில் காணாமல் போனதா என்றும், மரகத லிங்க சிலை காணாமல் போனதற்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை செய்துவருகிறோம். அதன் முடிவிலேயே முழு விவரமும் தெரியவரும்" என்றனர்.