Election bannerElection banner
Published:Updated:

`போலி ஆவணங்கள்; கூட்டுறவு வங்கியில் ரூ. 1 கோடி மோசடி!’ - தென்காசியில் முன்னாள் துணைச் செயலாளர் கைது

co-operative bank
co-operative bank

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நல்லூர் வேளாண்மை கூட்டுறவு வங்கியில், வாடிக்கையாளர்களின் 1 கோடி ரூபாய் வைப்பு நிதியை மோசடி செய்த வங்கியின் முன்னாள் துணைச் செயலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சொர்ணராஜ்.  ஆலங்குளம் நல்லூரில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் துணைச் செயலாளராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் இந்த வங்கியில் வைப்பு நிதியாக வைத்த வாடிக்கையாளர்களின் பணத்தை இவர் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. 

மோசடிக்காக கைது செய்யப்பட்ட சொர்ணராஜ்
மோசடிக்காக கைது செய்யப்பட்ட சொர்ணராஜ்

வாடிக்கையாளர்களின் வைப்பு நிதித் தொகையில் இருந்து அவர்கள் கடன் கேட்பதுபோல பொய்யான ஆவணங்களைத் தாக்கல் செய்து வைப்பு நிதியிலிருந்து கடன் எடுத்துள்ளார். இது போன்று பல வாடிக்கையாளர்களிடமிருந்து கடன் தொகையாக ரூ.98,54,000 மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

தங்களின் வைப்பு நிதியிலிருந்து, தங்களுக்குத் தெரியாமல் கடன் தொகையைச் சுருட்டியதை அறிந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனால் இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட சொர்ணராஜ் மீது நடவடிக்கை எடுத்து, தங்கள் பணத்தை மீட்டுக் கொடுக்குமாறு வாடிக்கையாளர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்கள்.   

Vikatan

அதனால் சொர்ணராஜ் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அத்துடன், தென்காசி  கூட்டுறவு துணைப் பதிவாளரான முத்துசாமி, இந்த மோசடி தொடர்பாக சென்னையில் உள்ள வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி-யான விமலாவிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து நெல்லை வணிக குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி. தர்மலிங்கம், இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்றது.

கூட்டுறவு வங்கியின் ஆவணங்கள் அனைத்தையும் குற்றப் புலனாய்வுத் துறையினர் ஆய்வு செய்தனர். அதில், வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் அவர்களின் வைப்பு நிதியில் இருந்து சொர்ணராஜ் பணத்தை மோசடியாக எடுத்தது தெரியவந்தது. 

மோசடி நடைபெற்ற கூட்டுறவு வங்கி
மோசடி நடைபெற்ற கூட்டுறவு வங்கி

அதனால் சொர்ணராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகப் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதைத் தொடர்ந்து நெல்லை புதுப்பேட்டைத் தெருவில் வசித்து வந்த சொர்ணராஜை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு