Published:Updated:

சென்னை: இன்ஜினீயரின் உயிரைப் பறித்த ஆன்லைன் சூதாட்டம்!

ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்ட குமரேசன்
ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்ட குமரேசன்

சென்னையில் வேலை பார்த்துவந்த இன்ஜினீயர் குமரேசன், ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கினார். பணத்தை இழந்த மனவிரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்கதையாகிவருகிறது. சென்னை பெரம்பூர், சீனிவாசா தெருவில் நண்பர்களுடன் தங்கியிருந்தார் குமரேசன் (26). இன்ஜினீயரிங் படித்த இவரின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம், அதனூர் கிராம். வேலை தேடி சென்னைக்கு வந்த குமரேசனுக்கு வங்கியில் பணம் வசூலிக்கும் வேலை கிடைத்தது. அதில் கிடைத்த வருமானத்தில் குமரேசன் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம் ஆகியவற்றில் ஈடுபடத் தொடங்கினார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர் இழந்தார்.

குமரேசன்
குமரேசன்

அதன் விளைவாக, தனக்குத் தெரிந்தவர்களிடம் கடன் வாங்க ஆரம்பித்தார். இந்தச் சமயத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் குமரேசன், தன்னுடைய சொந்த ஊருக்கு சில மாதங்களுக்கு முன்னர் சென்றார். அவர் பைக்கில் செல்லும்போது விபத்தில் சிக்கினார். அதில் அவரின் காலில் முறிவு ஏற்பட்டது. அதற்குச் சிகிச்சை பெற்ற குமரேசன், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் வேலைக்காகச் சென்னைக்கு வந்தார்.

சென்னைக்கு வந்த குமரேசன், மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடத் தொடங்கினார். இந்தச் சமயத்தில் ஆயுதபூஜைக்காக குமரேசனுடன் தங்கியிருந்தவர்கள், தங்களின் சொந்த ஊருக்குச் சென்றனர். அதனால், குமரேசன் மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். கடன் கொடுத்தவர்கள் குமரேசனிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்திருந்த அவருக்குக் கடன் நெருக்கடி மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

சென்னை: `என்னோட ராட்சஷிக்கு தகவல் சொல்லிடுங்க!' - ஆன்லைன் விளையாட்டால் மாணவன் தற்கொலை
தற்கொலை
தற்கொலை
representational image

வீட்டில் தனிமையிலிருந்த குமரேசன், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் குமரேசனுடன் தங்கியிருந்தவர்கள் வீடு திரும்பினர். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை நீண்டநேரமாகத் தட்டியும் குமரேசன் திறக்கவில்லை. அதனால், ஜன்னல்வழியாக பார்த்தபோது குமரேசன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து அவருடன் தங்கியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து செம்பியம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து குமரேசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில்ல் பணத்தை இழந்த இன்ஜினீயர் குமரேசன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு