Published:Updated:

`ஐஏஎஸ் ஆக சென்னை சென்றார்; சடலமாக வீடு திரும்பினார்' - செல்போனால் இன்ஜினீயருக்கு நேர்ந்த சோகம்

எஸ்.மகேஷ்

சென்னை அண்ணாநகரில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த இன்ஜினீயர் 2வது மாடியிலிருந்து கீழே விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

cell phone
cell phone

சென்னை அண்ணாநகர், சாந்தி காலனி, 4 வது அவென்யூ பகுதியில் உள்ள வீட்டில் குடியிருந்தவர் ரவிபட்டிபனிந்தா (22). இவர் இன்ஜினீயரிங் படித்துவிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என சென்னை வந்தார். சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபலமான ஐ.ஏ.எஸ் அகாடமியில் சேர்ந்து படித்தார்.

` 16 மாநிலங்கள், 600 பெண்கள்!' - 2,000 நிர்வாணப் படங்களோடு கைதான சென்னை இன்ஜினீயர்

நண்பர்களுடன் அண்ணாநகரில் தங்கியிருந்த இவர், ஐ.ஏ.எஸ் ஆக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவந்தார். எந்நேரமும் படிப்பு, ஐ.ஏ.எஸ் தேர்வு குறித்தே விவாதித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2-ம் தேதி குடியிருக்கும் வீட்டிலிருந்து அருகில் கட்டுமான பணிகள் நடந்துவரும் இடத்துக்குச் சென்றார். பிறகு, அங்கு 2-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் ஓடிவந்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் ரவிபட்டிபனிந்தா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரின் அருகில் செல்போனும் கிடந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் சேர்த்தனர். இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் செல்போன் பேசிக் கொண்டிருந்தபோது ரவிபட்டிபனிந்தா கீழே விழுந்துள்ளார். இதில் அவரின் தலை மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

IAS
IAS

ரவிபட்டிபனிந்தா கீழே விழுந்த தகவல் சென்னையில் உள்ள அவரின் சகோதரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரவிபட்டிபனிந்தாவை மேல் சிகிச்சைக்காக ஆந்திராவுக்கு அவர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் இறந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ரவிபட்டிபனிந்தாவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மேற்குக் கோதாவரி மாவட்டம், சகுலமண்டல், தாரவரம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணாவின் மகன் ரவிபட்டிபனிந்தா. சிறுவயது முதல் கலெக்டராக வேண்டும் என்ற லட்சியத்தோடு ரவிபட்டி பனிந்தா படித்துள்ளார். நன்றாகப் படித்த அவருக்கு இன்ஜினீயரிங் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இன்ஜினீயரிங் படித்து முடித்ததும் சென்னை வந்து ஐ.ஏ.எஸ் அகாடமியில் சேர்ந்துள்ளார். தங்கியிருந்த வீட்டிலிருந்து அருகில் உள்ள கட்டடத்துக்கு ரவிபட்டிபனிந்தா செல்வதுண்டு. கட்டடப் பணிகள் நடப்பதால் அங்கு மாடிக்குச் செல்ல போதிய மாடிப்படிகள் இல்லை. இதனால் தாவி குதித்துதான் ரவிபட்டிபனிந்தா அங்கு சென்றுள்ளார். அப்போது அவர் செல்போனில் பேசியபடி 2வது மாடியில் நடந்தபோதுதான் கீழே விழுந்து இறந்துவிட்டார்'' என்றனர்.

police station
police station

ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதாமலேயே ரவிபட்டிபனிந்தா உயிரிழந்ததைச் சொல்லிச் சொல்லியே உறவினர்கள் கதறி அழுதச் சம்பவம் கல்நெஞ்சையும் கரைக்கும் வகையில் இருந்தது. மாடியிலிருந்து கீழே விழுந்த ரவிபட்டிபனிந்தா, கடைசியாக யாருடன் பேசினார் என்ற விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். கவனமாக இருந்திருந்தால் ரவிபட்டிபனிந்தா, உயிரிழந்திருக்க மாட்டார் என்கின்றனர் போலீஸார்.

ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை சென்ற ரவிபட்டிபனிந்தா, சடலமாக வீடு திரும்பியதைப் பார்த்த அவரின் உறவினர்களும் நண்பர்களும் கண்ணீர்விட்டனர்.