Published:Updated:

`அக்கா சென்டிமென்ட்; கூலிப்படைக்கு ஸ்கெட்ச்!' - கொலை வழக்கில் சிக்கிய ஈரோடு ஏட்டு

போலீஸ் ஏட்டு பிரபாகரன்
போலீஸ் ஏட்டு பிரபாகரன்

கூலிப்படையினர் ஈரோட்டிற்கு வந்து சம்பவத்தை முடிக்கும் வரை பல ஸ்கெட்ச்களை போலீஸ் ஏட்டு போட்டுக் கொடுத்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள சங்கராபாளையம் ஊஞ்சக்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்தவர் சின்னத்தங்கம் என்கிற ராதாகிருஷ்ணன். அ.தி.மு.க பிரமுகரான இவர், சங்கராபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். கடந்த 3-ம் தேதி காலை அந்தியூர் அருகே பைக் ரிப்பேர் செய்ய வந்த ராதாகிருஷ்ணனை, மெக்கானிக் ஷாப் வாசலிலேயே வைத்து கூலிப்படைக் கும்பல் ஒன்று, சரமாரியாக வெட்டிக் கொன்றது. தப்பிச் சென்ற கொலையாளிகள் 5 பேரையும் சினிமா பாணியில் போலீஸார் காரில் விரட்டிப் பிடித்தனர். `சங்கராபாளையத்தில் 2013-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட சேகரின் கொலைக்குப் பழிவாங்கவே இந்தச் சம்பவத்தைச் செய்தோம். தந்தையின் இழப்பிற்குப் பழிவாங்கவே அவருடைய மகன் அரவிந்த் பணம் கொடுத்து ராதாகிருஷ்ணன் கதையை முடிக்கச் சொன்னார்’ எனக் கூலிப்படையினர் கொடுத்த வாக்குமூலத்தில் போலீஸாரே ஆடிப்போயினர்.

கொலை செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன்
கொலை செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன்

போலீஸ் நெருங்கியதை உணர்ந்த அரவிந்த், கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை பவானி 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்திய வெள்ளித்திருப்பூர் போலீஸார், 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, `இந்தக் கொலைக்கு என்னுடைய மாமா பிரபாகரன் என்பவர்தான் முழு உதவி செய்தார். அவர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை ஏட்டாகப் பணியாற்றி வருகிறார்’ எனச் சொல்ல போலீஸார் அதிர்ந்து போயிருக்கின்றனர். அதையடுத்து அரவிந்த் மற்றும் போலீஸ் ஏட்டு பிரபாகரன் போன் அழைப்புகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்தியிருக்கின்றனர். உடனே இதுகுறித்து ஈரோடு எஸ்.பி சக்தி கணேசனுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கொலைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தலைமை ஏட்டு பிரபாகரனைப் பணியிடை நீக்கம் செய்ததோடு, அவரைக் கைது செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார்.

`பெண் குரலில் காதல் வலை; சிக்கிய ஈரோடு இளைஞர்!' -மாஸ்டர் பிளான் போட்ட பட்டதாரிகளுக்கு நேர்ந்த சோகம்

2013-ல் கொலையான சேகரின் மனைவியான ஹேமலதாவின் தம்பிதான் இந்த போலீஸ் ஏட்டு பிரபாகரன். அக்காவுடைய கணவர் இறப்பிற்குக் காரணமாக இருந்தவர்களை, மருமகனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்ட திட்டம் போட்டிருக்கிறார். கூலிப்படையினர் ஈரோட்டுக்கு வந்தது முதல், அவர்கள் தங்குவதற்கான இடம், உணவு, கொலை செய்துவிட்டு தப்பிப்பதற்கான வழிகள் எனப் பலவற்றிற்கும் போலீஸ் ஏட்டான பிரபாகரன்தான் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.

கைது செய்யப்பட்ட கூலிப்படையினர்
கைது செய்யப்பட்ட கூலிப்படையினர்

போலீஸ் ஒருவரே கொலைச் சம்பவத்திற்கு உதவியாக இருந்தது அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொலை விவகாரம் குறித்து வெள்ளித்திருப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு