Published:Updated:

`அவர்கள் தூங்கும்வரை பொறுமையாக இருந்தேன்!'- ஈரோட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜார்க்கண்ட் இளைஞர்

ஈரோடு தறிப் பட்டறையில், வட மாநில இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட வட மாநில இளைஞர்கள்
கொலை செய்யப்பட்ட வட மாநில இளைஞர்கள்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே, பி.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், சொந்தமாக விசைத்தறிப் பட்டறை ஒன்றை நடத்திவருகிறார். அதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நவீன்குமார் (25), சுகேந்திரகுமார் வர்மா (28), சவுராப் ரஞ்சன் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திரகுமார் ஆகிய நால்வரும் கடந்த இரண்டு வருடங்களாக வேலைசெய்து வந்துள்ளனர்.

இவர்களில், ரவீந்திரகுமாரைத் தவிர மற்ற மூவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள், உறவினர்களும்கூட. இவர்கள் மூவரும் சேர்ந்து, ரவீந்திரகுமாரைக் கிண்டல் கேலி செய்தும், அடிக்கடி வம்பிழுத்தும் வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவும் மதுபோதையில் இவர்களுக்குள் பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் மோப்ப நாயுடன் போலீஸார்
சம்பவ இடத்தில் மோப்ப நாயுடன் போலீஸார்

இந்நிலையில், நேற்று அதிகாலை தறிப்பட்டறைக்குச் சென்ற உரிமையாளர் ரமேஷுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நவீன்குமார், சுகேந்திரகுமார் சர்மா ஆகிய இருவரும் தலையில் பலத்த ரத்தக் காயங்களோடு சடலமாகக் கிடந்துள்ளனர். அதைப் பார்த்து பதறிப்போன ரமேஷ், கவுந்தப்பாடி போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்களுடன் வந்த போலீஸார், இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறனர்.

சமையல் செய்வதில் ஆரம்பித்து அவர்களுடைய வேலையையும் சேர்த்து என்னை செய்யச்சொல்லி துன்புறுத்தினர். நானும் எவ்வளவோ பொறுத்துக்கொண்டேன்.
ரவீந்திரகுமார்

மேலும், கொலை சம்பவத்தின் தடயங்களைச் சேகரித்ததோடு, கொலையாளி யார் என்பது குறித்த தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கினர். தறிப்பட்டையில் வேலை செய்த நால்வரில் இருவர் கொலை செய்யப்பட, மீதமிருந்த இருவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சவுராப் ரஞ்சன் தன் மனைவியுடன் தறிப்பட்டறை அருகே வீடு எடுத்து வசித்து வந்ததால், சம்பவத்தின்போது ரவீந்திரகுமார் மட்டும் உடனிருந்தது உறுதியானது.

இதையடுத்து, ரவீந்திரகுமாரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, ‘அவர்கள் மூன்று பேரும் உறவினர்கள் என்பதால் என்னைத் தொடர்ந்து மட்டுப்படுத்தி வந்தார்கள். சமையல் செய்வதில் ஆரம்பித்து அவர்களுடைய வேலையையும் சேர்த்து என்னை செய்யச்சொல்லி துன்புறுத்தினர். நானும் எவ்வளவோ பொறுத்துக்கொண்டேன். நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு, நவீன்குமாரும் சுகேந்திர குமார் வர்மாவும் என்னிடம் தேவையில்லாமல் பிரச்னை செய்தனர். என்னை அசிங்க அசிங்கமாகப் பேசினார்கள்.

அமைதியாக இருந்த என்னால், ஒருகட்டத்திற்கு மேல் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. போதையில் அவர்கள் நன்கு அசந்து தூங்கும் வரை பொறுமையாக இருந்தேன். தூக்கத்திலேயே அவர்களுடைய கதையை முடித்துவிட வேண்டுமென முடிவு செய்தேன். கீழே படுத்திருந்த சுகேந்திர குமார் சர்மாவை, இரும்பு ராடால் கோபம் தீரும் வரை தலையில் ஓங்கி அடித்தேன். அதனையடுத்து, மேல் மாடியில் இருந்த நவீன்குமாரையும் கொன்றேன்.

கொலையாளி ரவீந்திரகுமார்
கொலையாளி ரவீந்திரகுமார்

இருவரின் சடலங்களையும் ஒரே இடத்தில் துணியால் மூடி மறைத்துவைத்தேன். ஏதாவது ஒரு கட்டுக்கதையை தயார்செய்து சம்பவத்தை மறைத்துவிடலாம் என நினைத்தேன்’ என ரவீந்திரகுமார் கூறியிருக்கிறார்.

விசாரணையில் இருந்த போலீஸாரோ, ‘போதையில் அசந்து தூங்கியபோது கொலை செய்ததால், சத்தம் எதுவும் வெளியே கேட்கவில்லை. சாதாரண சின்னச்சின்ன பிரச்னைகளின் காரணமாகவே ரவீந்திரகுமார் இருவரையும் கொலை செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்டவர்களின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தபிறகுதான், மேலும் என்னென்ன நடந்தது என்பது தெரியவரும்’ என்றனர்.