Published:Updated:

`72 மணி நேரம், 980 டாலர், 200 கல்யாண ஆல்பம்!'- ஈரோடு ஸ்டுடியோ உரிமையாளரை மிரளவைத்த சைபர் தாக்குதல்

நாங்கள் முடக்கி வைத்திருக்கும் உங்களுடைய தகவல்களை நீங்கள் மீட்டெடுத்து, மறுபடியும் பயன்படுத்த வேண்டுமானால் 980 டாலர்கள் செலுத்த வேண்டும்.

சைபர் அட்டாக்
சைபர் அட்டாக்

ஈரோடு சூரம்பட்டி பகுதியில் ஸ்டுடியோ கடை நடத்தி வருபவர் கணேசன் (35). இரண்டு நாள்களுக்கு முன்பு கம்ப்யூட்டரை பயன்படுத்திக்கொண்டிருந்தபோது, ஒரு பாப்-அப் மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜைத் தெரியாமல் கணேசன் கிளிக் செய்யவே, அடுத்த நொடியே கம்ப்யூட்டரில் இருந்த அனைத்து டேட்டாக்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு லாக் ஆகிவிட்டன. மெசேஜ் மூலம் கம்ப்யூட்டருக்குள் நுழைந்த வைரஸ்களால்தான் இந்த சைபர் அட்டாக் நடந்திருக்கிறது எனத் தெரிந்தபோது கணேசன் அதிர்ந்து போய்விட்டார்.

சைபர் தாக்குதல்
சைபர் தாக்குதல்

இதற்கிடையே, `நாங்கள் முடக்கி வைத்திருக்கும் உங்களுடைய தகவல்களை நீங்கள் மீட்டெடுத்து, மறுபடியும் பயன்படுத்த வேண்டுமானால் 980 டாலர்களைச் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய 72 மணி நேரத்துக்குள் நாங்கள் அனுப்பும் சாஃப்ட்வேரைக் கொண்டு, முடக்கப்பட்ட டேட்டாக்களை நீங்கள் திரும்ப எடுத்துக்கொள்ளலாம் ’ என இன்னொரு தகவலும் வந்துள்ளது.

கம்ப்யூட்டரில் இருந்த கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட விழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அத்தனையும் முடக்கப்பட்டுவிட்டன. இந்த சைபர் தாக்குதலால் அதிர்ந்து போன கணேசன், இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்த கையோடு, லாக் செய்யப்பட்ட டேட்டாக்களை மீட்டெடுப்பதற்காக சென்னை கிளம்பியிருக்கிறார்.

கணேசனிடம் பேசினோம். ``ரெக்கோ என்னும் மால்வேர் மூலமாக என்னுடைய கம்ப்யூட்டர்ல இருக்கிற டேட்டாவை முடக்கி வச்சிருக்காங்க. முடக்கின அடுத்த நொடியே, 980 டாலர் பணத்தைக் கொடுத்தால்தான் மறுபடியும் டேட்டாவை ரெகவர் பண்ண முடியும்னு மெசேஜ் அனுப்பியிருக்காங்க. 200 கல்யாணத்தோட ஃபுட்டேஜ் அதுல இருக்கு சார். இந்த விஷயம் வெளிய தெரிஞ்சதும் என்னோட கஸ்டமர்ஸ் போன் பண்ணி கேக்குறாங்க. பிரச்னையை சீக்கிரம் சரிபண்ணி முடிச்சு, எடுத்த போட்டோ வீடியோஸை கொடுக்குறேன்னு சொல்லி சமாதானம் பண்ணியிருக்கேன். சாதாரண ஆட்களோட கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாவை அட்டாக் பண்ணா எந்தப் பிரயோஜனமும் இருக்காது.

தகவல் திருட்டு
தகவல் திருட்டு

ஸ்டுடியோ வச்சிருக்கவங்ககிட்ட நிறைய டேட்டாஸ் இருக்கும். எவ்வளவு செலவு செஞ்சாவது அந்த டேட்டாஸை மீட்டு எடுக்கணும்னு நினைப்பாங்கன்னு தெளிவா பிளான் பண்ணி இந்த சைபர் அட்டாக்கைச் செஞ்சிருக்காங்க. அவங்க கேக்குற 980 டாலரை கொடுத்துட்டா, மறுபடியும் பணம் கேட்டு தொந்தரவு பண்ணுவாங்க. எனவே, நண்பர்கள் உதவியுடன் இந்த டேட்டாவை மீட்டெடுக்கும் வேலையில் இருக்கிறேன்” என்றார் வேதனையுடன்.