Published:Updated:

கார் பரிசு கடிதம்; சிறுக சிறுக ரூ.14 லட்சம் சுருட்டல் - ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்த ஈரோடு இளைஞர்

மோசடி

கார் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி இளைஞரிடம் ரூ.14 லட்சம் பறிக்கப்பட்டது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் பரிசு கடிதம்; சிறுக சிறுக ரூ.14 லட்சம் சுருட்டல் - ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்த ஈரோடு இளைஞர்

கார் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி இளைஞரிடம் ரூ.14 லட்சம் பறிக்கப்பட்டது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published:Updated:
மோசடி

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கடத்தூரைச் சேர்ந்தவர் அஜித் குமார் (25). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவரது வீட்டு முகவரிக்கு வந்த கடிதத்தில் ஒரு பரிசுக் கூப்பனும், ஒரு கடிதமும் இருந்தது. அந்தக் கடிதத்தில், ``உங்களுக்கு மகேந்திரா கார் பரிசு விழுந்துள்ளது. இது குறித்து மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள்!" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய அஜித் குமார், கடிதத்தில் குறிப்பிட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர், ``பரிசு கூப்பனை போட்டோ எடுத்து அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புங்கள்" எனக் கூறியிருக்கிறார். சில தினங்கள் கழித்து, அதே நபர் அஜித் குமாரை தொடர்பு கொண்டு, ``உங்களுக்குதான் கார் பரிசு விழுந்துள்ளது. உங்களுக்கு தேவைப்பட்டால் காரை வாங்கிக் கொள்ளலாம். அல்லது காரின் விலையான ரூ.14.8 லட்சத்தை ரொக்கமாக வாங்கிக் கொள்ளலாம்" என ஆசைவார்த்தை கூறியதை அஜித் குமார் உண்மை என நம்பினார்.

online cyber crime
online cyber crime

தனக்கு கார் தேவைப்படுவதால் காரையே வாங்கிக் கொள்ள விரும்புவதாக அஜித் குமார் தெரிவித்தார். காருக்கு பதிவுக் கட்டணம், சாலை வரி, புதிய கணக்கு தொடங்குவதற்கான கட்டணம், ஜி.எஸ்.டி, கமிஷன் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி சிறிது, சிறிதாக ரூ.14 லட்சம் வரையிலும் பணத்தை மோசடி நபர் பெற்றுக் கொண்டாராம். ஒருகட்டத்தில் அந்த மோசடி நபர், செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்த பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை அஜித் குமார் உணர்ந்தார். இதையடுத்து ஈரோடு சைபர் க்ரைம் போலீஸில் அவர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் ஜெயசுதாவிடம் கேட்டபோது, ``இது குறித்து விசாரணை நடந்து வருவதால் வெளிப்படையாக எதையும் கூற முடியாது" என்று முடித்துக் கொண்டார்.