Published:Updated:

கடத்தல் தங்கம் அபகரிப்பதில் மோதல்! - ஏர்வாடி மீனவர் கொலையில் தேடப்பட்டவர் காசியில் தற்கொலை

தற்கொலை செய்துகொண்ட ராமநாதன்
தற்கொலை செய்துகொண்ட ராமநாதன்

கடந்த 9-ம் தேதி சின்ன ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த மீனவர் குமார் என்பவரது உடல் ஏந்தல் கிராமம் அருகே எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

மீனவர் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி காசியில் தற்கொலை செய்துகொண்டார். கடத்தல் தங்கத்தை அபகரிப்பதில் ஏற்பட்ட மோதலில் மீனவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தற்கொலை செய்துகொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார் கைப்பற்றிய நகை, பணம்.
போலீஸார் கைப்பற்றிய நகை, பணம்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர், இலங்கை தலைமன்னார் கடற்பகுதியில் சுமார் 6.5 கிலோ தங்கத்தை வைத்திருப்பதாகவும் அதை வாங்கிவந்து தந்தால், குறிப்பிட்ட தொகை தருவதாகவும் சுந்திரமுடையான் பகுதியைச் சேர்ந்த வேலுசாமி, புலிப்படை கணேசன் ஆகிய இருவரிடமும் கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி தலைமன்னார் கடற்பகுதிக்குச் சென்று 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 6.5 கிலோ தங்கத்தை வாங்கிக்கொண்டு திரும்பியுள்ளனர்.

ஆனால், கரைக்கு வந்த தங்கம், அதை வாங்கிவரச் சொன்ன நபரின் கைகளுக்குப் போகவில்லை. மாறாக உச்சிப்புளி பகுதியைச் சேர்ந்த முனியய்யா என்பவரிடம் அந்தத் தங்கத்தை விற்பனை செய்ய கொடுத்துவிட்டு, தங்கத்தைக் கடத்தி வரும் வழியில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டார்கள் என நாடகமாடி கடத்தி வந்த தங்கத்தை அபகரித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் 189 பவுன் நகைகள், 209 கிராம் வெள்ளி நகைகள், ரொக்கமாக 10,15,500 ரூபாயையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

கொலை செய்யப்பட்ட குமார்
கொலை செய்யப்பட்ட குமார்
உ.பாணடி

இதுதொடர்பாகப் பெருங்குளத்தைச் சேர்ந்த ரஞ்சித், விஜய், காளிராஜ் ஆகியோரைக் கைது செய்த போலீஸார், விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கடந்த 9-ம் தேதி சின்ன ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த மீனவர் குமார் என்பவரது உடல், ஏந்தல் கிராமம் அருகே எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குமாரின் கொலைக்கும் தங்கம் கடத்திய கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தில் 5 கிலோ தங்கத்தை ஏர்வாடி தர்ஹா பகுதியைச் சேர்ந்த கோடாங்கி ராமநாதன் என்பவர், கொலை செய்யப்பட்ட மீனவர் குமார் மூலம் நகைகளாகச் செய்ததும், அதில் 183 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டு வரும் வழியில் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டதும் தெரியவந்தது. இந்நிலையில், குமாரிடம் இருந்த மீதமுள்ள தங்கத்தை அபகரிக்க கூலிப்படை மூலம் குமாரை, கோடாங்கி ராமநாதன் தாக்கியுள்ளார். இதில் குமார் உயிரிழந்துள்ளார்.

ராமநாதன்
ராமநாதன்
உ.பாண்டி

இதைத் தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்த மாசிமகேந்திரன், ராஜேஷ், பொன்சுகில்ராம் ஆகியோரைக் கைது செய்த போலீஸார், ராமநாதன் உள்ளிட்ட மேலும் 15 பேரை தேடி வந்தனர். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ராமநாதன் காசியில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த தகவல் காசி போலீஸார் மூலம் ராமநாதபுரம் போலீஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. தங்கக் கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது ராமநாதபுரம் பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு