Published:Updated:

`இது ஆணவக் கொலை; கடிதமே சாட்சி!'- நாகையில் தாயால் எரித்துக் கொல்லப்பட்ட ஜனனி குறித்து எவிடன்ஸ் கதிர்

nagapattinam government headquarters hospital
nagapattinam government headquarters hospital

தமிழகத்தில் ஆணவக்கொலைகள் கடந்த 5 ஆண்டுகளில் 195 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதில் ஜனனி கொலையும் ஒன்று.

நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே வாழ்மங்கலம் கிராமத்தில் பெற்ற மகளின் காதலை ஏற்றுக்கொள்ளாத தாய், பெண்ணை தீ வைத்து கொன்றுவிட்டு தன்னையும் எரிந்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜனனி கொல்லப்பட்டது சாதி வெறியால்தான் என எவிடன்ஸ் அமைப்பு தற்போது குற்றம்சாட்டியுள்ளது.

nagapattinam government headquarters hospital
nagapattinam government headquarters hospital

நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த வாழ்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளியான கண்ணன் - உமா மகேஸ்வரி தம்பதியின் மகள் ஜனனி. இவர்களுக்கு 16 வயதில் அருண் என்ற மகனும் உள்ளார். இந்த நிலையில், ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்த ஜனனிக்கு அதே ஊரில் வசிக்கும் ராஜ்குமார் என்பவருடன் இரண்டு ஆண்டுகளாய் காதல். இந்தக் காதல் விஷயம் தாய் உமா மகேஸ்வரிக்குப் பிடிக்கவில்லை. மகளைக் கடுமையாக கண்டித்ததுடன் படிப்பையும் நிறுத்திவிட்டார். என்றாலும் காதலில் உறுதியாக இருந்த ஜனனி காதலருடன் தொடர்பில் இருந்தார்.

இந்த நிலையில், ஜனனி காதலனை நேரில் சந்தித்துப் பேசியதைக் கண்ட தாய் உமா மகேஸ்வரி கோபமடைந்தார். கடந்த 19- ம் தேதி விடியற்காலை 4 மணிக்கு உறங்கிக்கொண்டிருந்த மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு, தன்மீதும் ஊற்றிக்கொண்டு எரிந்திருக்கிறார்கள். இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, இருவரையும் நாகை அரசுப் பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி ஜனனி பரிதாபமாக இறந்தார். உமா மகேஸ்வரி பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிவருகிறார்.

 ராஜ்குமார் ஜனனி
ராஜ்குமார் ஜனனி

இதுபற்றி எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர், ``தமிழகத்தில் ஆணவக்கொலைகள் கடந்த 5 ஆண்டுகளில் 195 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இதில் ஜனனி கொலையும் ஒன்று. ராஜ்குமார் பட்டியல் இனத்தைத் சேர்ந்தவர்.

ஜனனிக்கு வயது 17. நவம்பர் 24 -ம் தேதி 18 வயது பூர்த்தியாகிறது. அதன்பின் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். ``நம்ம சாதி என்ன? ராஜ்குமார் சாதி என்ன? நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டால் அதைவிட கேவலம் வேறு எதுவும் இருந்துவிட முடியாது. நம்ம சொந்தக்காரர்கள் நம்மளை சாதியை விட்டே ஒதுக்கி வைத்துவிடுவார்கள். தயவுசெய்து அவனை மறந்துவிடு" என்று ஜனனியிடம் பலமுறை தாயார் உமா மகேஸ்வரி கூறியிருக்கிறார்.

ஒருகட்டத்தில் ஜனனியின் குடும்ப நிலையை உணர்ந்த ராஜ்குமார், ``சாதிதான் நாம் ஒன்றுசேர தடையாக இருக்கிறது. தயவுசெய்து என்னை மறந்துவிடு" என்று கூறிவிட்டு ஜனனியை ஏற்க மறுத்திருக்கிறார். ஆனால் ஜனனியோ, ``நீ ஏன் என்னைச் சந்திக்கவும் பேசவும் மறுக்கிறாய், நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது" என்று கடிதமும் அனுப்பியிருக்கிறார். (கடித நகல் உள்ளது)

இதற்கிடையில், ஜனனியின் தாய்மாமனுக்கு ஜனனியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்யவும் தாயார் தீவிர முயற்சி செய்திருக்கிறார். இதையறிந்த ஜனனி, போலீஸாருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் கொடுக்கவே, ஜனனியை மீட்டு மயிலாடுதுறை காப்பகத்தில் வைத்திருந்திருக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து ஜனனியை காப்பகத்தில் சந்தித்துப் பேசிய அவரின் குடும்பத்தினர் தந்திரமாக அழைத்துவந்து திருநள்ளாறில் உள்ள ஜனனியின் சகோதரியான ஜானகி வீட்டில் 4 மாதங்கள் தங்க வைத்திருந்திருக்கின்றனர். அங்கு அடித்தும் உதைத்தும் உணவு தராமலும் ஜனனியை சித்ரவதை செய்துள்ளனர். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு காதலில் உறுதியாக இருந்த ஜனனியைதான் உறங்கிக் கொண்டிருந்தபோது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்த முயல அப்போதும் ஜனனி எழுந்து கெஞ்சியிருக்கிறார். ``என் மீது மண்ணெண்ணெய் ஊற்றாதே" என்று கதறியிருக்கிறார்.

ஆத்திரம் அடங்காத தாயார் உமாமகேஸ்வரி, ``அவன் கூட போய் எங்கள அவமானப்படுத்த பார்க்கிறாயா" என்று கூறிக்கொண்டே கொளுத்தியிருக்கிறார். அத்துடன் இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அங்கு நீதிபதியிடம் ஜனனி மரண வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதில் தெளிவாக அனைத்து விவரத்தையும் பதிவு செய்துவிட்டு இறந்துபோயுள்ளார். தற்போது ஆபத்தான நிலையில் உமாமகேஸ்வரி சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொலை
கொலை

தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆணவக்கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றமும் `ஆணவக்கொலை தடுப்புக்கு ஏன் தனிச்சட்டம் இயற்றவில்லை' என்று தாமாகவே முன்வந்து வழக்கை எடுத்து விசாரணை செய்தது. ஆயினும் தமிழக அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. ஆகவே, உடனடியாக தமிழகத்தில் ஆணவக்கொலை தடுப்புக்கென்று தனிச் சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்" விரைவில் தேசிய அளவில் ஆணவக்கொலை தடுப்புக்கென்று தனிச்சட்டம் இயற்றப்படும்" என்று கூறியிருந்தது. அதுவும் கிடப்பில் கிடக்கிறது. ஆகவே, மத்திய அரசு இதுகுறித்து தனிச் சட்டம் இயற்றிட சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

பின் செல்ல