Published:Updated:

கடலூர்: காட்டிக்கொடுத்த ஆடியோ; உதவிய ஈரோடு பெண்! - இளம்பெண் மரணத்தில் சிக்கிய கணவன்

கடலூர் பெண் தற்கொலை
கடலூர் பெண் தற்கொலை

கடலூர், விருத்தாசலத்தில் கணவர், அவரின் பெற்றோரது தூண்டுதலால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண் ஷோபனா, தனது மெயிலில் விட்டுச்சென்ற முக்கிய ஆதாரங்களால் வழக்கு வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்திருக்கும் எருமனூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (24) என்பவரின் மனைவி ஷோபனா (21) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலை முடிவுக்கு தன் கணவரும் அவரின் பெற்றோரும்தான் காரணம் என்று அவரே பேசிய உருக்கமான வீடியோக்களைத் தன் அம்மாவின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பியிருந்தார். அதையடுத்து உடனே ஷோபனாவின் அம்மா அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அவர் எடுக்காததால் உறவினர்களிடம் தகவலைக் கூறியிருக்கிறார். அவர்கள் சென்று பார்த்தபோது உயிரற்ற சடலமாகத் தொங்கியிருக்கிறார் ஷோபனா.

ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணுடன் விஜயகுமார்
ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணுடன் விஜயகுமார்

அதையடுத்து ஷோபனாவின் தாய் ஜெயக்கொடி அளித்த புகாரின் அடிப்படையில் விஜயகுமார், அவரின் தந்தை அன்பழகன், தாய் அன்னபூரணி ஆகியோர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த விருத்தாசலம் போலீஸார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர். திருமணமாகி 2 வருடங்களிலேயே ஷோபனா தற்கொலை செய்துகொண்டதால் விருத்தாசலத்தின் சார் ஆட்சியர் பிரவீன்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கெனவே ஷோபனா பேசியிருந்த மரண வாக்குமூல வீடியோவில், ``என்னோட ஜிமெயில் அக்கவுன்ட்ல இம்பார்ட்டன்னு எனக்கு நானே அனுப்பிக்கிட்ட ஒரு மெயில் இருக்கும். அதுல போட்டோஸும் ஆடியோவும் இருக்கும். அதை எடுத்துக்கங்க. அப்போ தெரியும் இவங்க எனக்கு எவ்ளோ துரோகம் பண்ணியிருக்காங்கனு. எதனால இப்படியான பிரச்னைலாம் வருதுனு. எப்படியும் அந்தப் பொண்ணுதான் (கணவரின் காதலி என்று கூறப்படும் பெண்) இங்க வரும்னு எனக்கு நல்லாத் தெரியும். அதுக்குதான் இவங்க எல்லாம் பிளான் பண்ணிக்கிட்டுருக்காங்க” என்று குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் ஷோபனாவின் உறவினர்கள் அந்த மெயிலைத் திறந்து பார்த்தனர். அதில் ஷோபனாவின் கணவர் விஜயகுமார் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள், அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட உரையாடல்கள், ஷோபனாவிடம் அந்தப் பெண் பேசும் 41 நிமிட ஆடியோவும் இருந்தன. சில தினங்களுக்கு முன்பு விஜயகுமாரின் செல்போனுக்கு வந்த ஒரு அழைப்பை ஷோபனா எடுத்திருக்கிறார். அப்போது எதிர்முனையில் பேசிய பெண் ஒருவர் தான் ஈரோட்டைச் சேர்ந்தவர் என்றும், விஜயகுமாரின் காதலி என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து அவர் பேசிய உரையாடலில் விஜயகுமாருக்கும் தனக்குமான காதல் விவகாரங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

மனைவி ஷோபனாவுடன் விஜயகுமார்
மனைவி ஷோபனாவுடன் விஜயகுமார்

அந்த ஆடியோவில் பேசும் அந்த ஈரோட்டுப் பெண், ``உன்னைக் கெட்டவளாக்கி என்கிட்ட பேசறது. உங்ககிட்ட என்னை கெட்டவளா காட்டுறது. இப்போ இந்தப் போட்டோக்களுக்கு என்ன பதில் சொல்லப் போறாரு. உன் மாமனார் மாமியாருக்கும் நாங்கள் பழகுனது எல்லாருக்குமே தெரியும். கல்யாணம்லாலே ஆயிரம் பொய் சொல்றதுதான். எல்லாருமே நல்லவங்க கிடையாது ஷோபனா. எல்லாருமே வாழ்க்கையில பெரிய தப்பு பண்ணிருக்காங்க. இத ஒரு பெரிய விஷயமாக்க வேணாம் விட்ருங்க” என்கிறார். அப்போது பேசும் ஷோபனா, ``கல்யாணத்துக்கு முன்னாடினா இருந்ததைப் பத்தி எனக்கு பிரச்னை இல்லை. ஆனால், இப்போதும் தொடர்பில் இருக்கிறார்னு நினைக்கும்போதுதான்” என்கிறார்.

அதற்கு, ``நானும் அதான் சொல்வேன். ஆனால் கேக்குறது இல்லை. என்னைக் கெட்ட வார்த்தைல திட்டுறது, ஃபிராடுனு அடிக்கடி சொல்வாரு. ஆனால், திரும்பி அவரே பேசுவாரு. போன், டிரஸ்னு நான் எவ்வளவோ அவருக்கு செலவு பண்ணிருக்கேன் ஷோபனா. இப்போ நான் வேலைக்கும் போறதில்லை. ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால நீதான் 85,000 ரூபாய் சம்பாதிக்கிறியே எங்கிட்ட வாங்குன 4,000 ரூபாயைக் குடுடானு கேட்டேன். குடுக்கறேன்னு சொல்லிட்டு அப்புறம் குடுக்க மாட்டேன்னு சொல்லி என்னைக் கெட்ட வார்த்தையில திட்டினான். எங்கிட்ட பழகும்போதே எனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது விஜய்க்கு நல்லாவே தெரியும். அப்போ நீ யாருகிட்டயும் சொல்லாத நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.

உன் குழந்தையையும் நல்லா வளர்க்கிறேன்னு சொல்லி வச்சிருந்தாரு. அப்புறம் எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிற விஷயம் அவரோட அப்பா, அம்மாவுக்கு தெரிஞ்சிடுச்சி. அதோட நீ என்னை ஈரோடு போனு சொல்லி என்னை கழற்றி விட்டுட்டாரு. அதோட எனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை நான் மறைச்சிட்டேன்னு சொல்லி கதையையும் கட்டிட்டாரு. பணத்துக்காக விஜயகுமாரின் அம்மா உங்களை பிரிச்சாலும் பிரிச்சுடுவாங்க. எங்களை அப்படித்தான் பிரிச்சாங்க. எங்க கல்யாணத்துக்கு தேதியே குறிச்சாங்க. எனக்கும் அவருக்கும் கல்யாணம்னு ஃபேஸ்புக்குல அந்தத் தேதியையே போட்டாரு. ஆனால், அதுக்கப்புறம் உடனே டெலிட் பண்ணிட்டாரு.

`அப்பாவுக்கு பக்கத்திலேயே என்னை புதைச்சிருங்க!' - கடலூரை உலுக்கிய இளம்பெண்ணின் மரணம்

நாங்க ரெண்டு பேரும் ஒரு வருஷமா பழகிட்டு இருக்கோம். அதுலயே ரெண்டு தடவை கலைச்சிருக்கேன். எனக்கு ஹீமோக்ளோபின் கம்மியா இருக்கு. அதனால இனிமே நான் கலைக்கவே மாட்டேன்னு சொல்லிட்டேன். நான் வேணும்னா, என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வீட்டுல பேசு விஜய். இல்லைன்னா என்ன விட்டுடுனு. இனிமேல் என்னால அபார்ஷன்லாம் பண்ண முடியாதுனு சொல்லிட்டேன். என்ன ஒரேயடியா அவன் கழற்றி விடும்போது எனக்கு வயித்துல 5 மாசம்” என்று பேசும்போது குறுக்கிடும் ஷோபனா, ``கல்யாணதுக்கு முன்னாடிலாம் பரவால்ல. கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படியே பேசுறது…” என்று அப்பாவியாகக் கேட்கிறார்.

அதற்கு அந்த ஈரோட்டுப் பெண், ``ஆமாம் கல்யாணத்துக்கு அப்புறமும் அவன்தான் எனக்கு போன் பண்ணி தப்பு தப்பா பேசறான்” என்று நீள்கிறது அந்த ஆடியோ. எதிர் முனையில் பேசும் அந்தப் பெண் விஜயகுமாரை பற்றி ஒவ்வொரு விஷயமாகக் கூறக் கூற கனத்த இதயத்துடன் மௌனமாகும் ஷோபனா, ``நீங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோவ அனுப்புங்க” என்று திரும்பத் திரும்ப கேட்கிறார். அந்தப் போட்டோக்களைத்தான் தனது மெயிலில் ஆவணங்களாக வைத்துவிட்டு உயிரிழந்திருக்கிறார் ஷோபனா.

அடுத்த கட்டுரைக்கு