Published:Updated:

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை! - கொள்ளை முயற்சியில் கொடூரம்?

கிட்டி குமாரமங்கலம்
கிட்டி குமாரமங்கலம்

மத்திய அமைச்சராகப் பதவியில் இருக்கும்போதே 2000-ம் ஆண்டு ரத்தப் புற்றுநோய் காரணமாக ரங்கராஜன் குமாரமங்கலம் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் (67) டெல்லியில் தனியாக வசித்துவந்தார்.

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் பிறந்து, காங்கிரஸ் கட்சியில் முழு நேர அரசியலில் ஈடுபட்ட ரங்கராஜன் குமாரமங்கலம், சேலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், திருச்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவிவகித்திருக்கிறார். அதேபோல், ரங்கராஜன் குமாரமங்கலம் 1991-1992 காலகட்டத்தில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகப் பதவிவகித்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸிலிருந்து வெளியேறி, பாஜக-வில் இணைந்த அவர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் 1998-2000 வரை அங்கம் வகித்தார்.

மத்திய அமைச்சராகப் பதவியில் இருக்கும்போதே 2000-ம் ஆண்டு ரத்தப் புற்றுநோய் காரணமாக ரங்கராஜன் குமாரமங்கலம் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவரின் மனைவி கிட்டி குமாரமங்கலம் (67) டெல்லியில் தனியாக வசித்துவந்தார். அவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும்கூட. இவர்களின் மகன் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் காங்கிரஸ் கட்சியில் பதவியில் இருக்கிறார். சேலத்தைச் சேர்ந்த அவர், தற்போது தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பெங்கலூரில் வசித்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் தனியாக வசித்துக்கொண்டிருந்த கிட்டி குமாரமங்கலத்தின் வீட்டில் நேற்று நடந்த கொள்ளைச் சம்பவம் ஒன்றில் அவர் தலையணையால் அழுத்திக் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம்
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம்

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரித்துவரும் டெல்லி போலீஸார், கிட்டியின் வீட்டில் வேலை செய்துவரும் பணிப்பெண் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒருவரைக் கைதுசெய்து தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.

கொலைச் சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறுகையில், ``நேற்றிரவு சுமார் 9:00 மணியளவில் கிட்டி குமாரமங்கலம் அவரது வீட்டில் தனியாக இருந்தபோது வழக்கமாகத் துணி சலவை செய்யும் நபர் ஒருவர் இரண்டு நபர்களுடன் சேர்ந்து கதவைத் தட்டியிருக்கிறார். அப்போது பணிப்பெண் மஞ்சு என்பவர் கதவைத் திறந்திருக்கிறார்.

கொள்ளையர்கள் அவரைத் தாக்கி உள்ளே தள்ளிவிட்டுவிட்டு, கொள்ளை அடிக்கும் நோக்கில் கதவை உட்பக்கமாகத் தாழிட்டுக, அவரை அடித்து ஓர் அறையில் கட்டிப்போட்டுவிட்டு, கிட்டி குமாரமங்கலத்தின் அறைக்கு சென்றிருக்கின்றனர். அங்கு உறங்கிக்கொண்டிருந்த அவரைத் தாக்கி, படுக்கையறையில் தள்ளிவிட்டு தலையணையால் அழுத்திக் கொலை செய்துவிட்டு, அவரது வீட்டிலிருந்த பணம், நகை மற்றும் உடைமைகளைக் கொள்ளையடித்துக்கொண்டு சென்றிருக்கின்றனர். சம்பவம் நடந்து சில மணி நேரம் கழித்துச் சரியாக 11:00 மணிக்குத்தான் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, விரைந்து வந்த நாங்கள், கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்திருந்த பணிப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். பணிப்பெண் அளித்த தகவல்களின் பேரில் முக்கியக் குற்றவாளி ஒருவரைப் பிடித்துவிட்டோம். அவருடன் இருந்த இரண்டு நபர்களைத் தீவிரமாகத் தேடிவருகிறோம்" என்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவியும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு