Published:Updated:

மிரட்டிப் பணம் பறிப்பு: 5 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஆஜர்!

ஐந்து மாதங்களாக தலைமறைவாக இருந்த மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மும்பையில் விசாரணைக்கு ஆஜரானார்.

மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் போலீஸ் அதிகாரிகளிடம் மும்பையிலிருக்கும் பார், ஹோட்டல்களில் ஒவ்வொரு மாதமும் 100 கோடி அளவுக்கு மாமூல் வசூலித்துக் கொடுக்கும்படி நிர்ப்பந்தம் செய்ததாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் குற்றம்சாட்டி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். பரம்பீர் சிங்கின் புகாரைத் தொடர்ந்து இது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. தற்போது பண மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அனில் தேஷ்முக்கைக் கைதுசெய்துள்ளனர். அதேசமயம் அனில் தேஷ்முக் மீது புகார் கொடுத்த பிறகு பரம்பீர் சிங் சரியாகப் பணிக்கு வரவில்லை. கடந்த ஜூன் மாதத்திலிருந்து தலைமறைவாக இருந்துவந்தார். பரம்பீர் சிங் மீது பில்டர்கள் சிலர், மிரட்டிப் பணம் பறித்ததாக போலீஸில் புகார் செய்தனர்.

பரம்பீர் சிங்
பரம்பீர் சிங்

அதன் அடிப்படையில் பரம்பீர் சிங் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணைக்கு ஆஜராகும்படி பரம்பீர் சிங்குக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் சம்மனுக்கு ஆஜராகாமல் பரம்பீர் சிங் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து தேடப்படும் குற்றவாளியாக பரம்பீர்சிங் அறிவிக்கப்பட்டார். அவர் வீட்டிலும் இது தொடர்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த நிலையில், தன்னைக் கைதுசெய்யத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி பரம்பீர் சிங் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பரம்பீர் சிங்கைக் கைதுசெய்ய தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படியும் கேட்டுக்கொண்டது. இதையடுத்து, தான் சண்டிகரில் இருப்பதாகக் கூறிய பரம்பீர் சிங் வியாழக்கிழமை மும்பைக்கு வந்தார். அவர் மும்பை காந்திவலியிலிருக்கும் குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். முன்னதாக, தான் நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக பரம்பீர் சிங் தெரிவித்தார்.

மும்பை: மிரட்டிப் பணம் பறித்த வழக்கு; மாஜி போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்குக்குத் தேடுதல் நோட்டீஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு