ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கிளைவ் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். நாடோடி இனத்தைச் சேர்ந்த இவர், காட்டுப் பன்றி வேட்டைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். இதற்காக நாட்டு வெடிகளையும் அவர் தயாரித்ததாகக் கூறப்படுகிறது. இன்றைய தினமும் வேட்டைக்குச் செல்வதற்காக நாட்டு வெடிகளை வீட்டுக்குள் அமர்ந்தபடியே தயாரித்துக்கொண்டிருந்தாராம் முருகன். அப்போது, திடீரென நாட்டு வெடி வெடித்துச் சிதறியதால், முருகனும், அவர் மகன் பகவதியும் பலத்த காயமடைந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஆற்காடு நகரக் காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

இதற்கிடையே, ஆம்புலன்ஸும் வரவழைக்கப்பட்டு, தந்தை, மகன் இருவரும் மீட்கப்பட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால், முருகன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, அவர் மகன் பகவதியும் 70 சதவிகித காயங்களுடன் கவலைக்கிடமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக, ஆற்காடு நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட இந்த விபரீத சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.