Published:Updated:

`ஈக்வடாரா.. ஹெய்ட்டியா?!' - நித்யானந்தா விவகாரத்தில் என்ன சொல்கிறது வெளியுறவுத் துறை?

நித்யானந்தா
நித்யானந்தா

தனித் தீவுக்கு `கைலாசா’ என்று பெயர் சூட்டி தனி நாட்டுக்குக் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்காக தனி இணையதளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் செயலாளராக இருந்த ஜனார்த்தன சர்மா, 'என் இரண்டு மகள்களை, நித்தியானந்தா கடத்திச் சென்றுவிட்டார். அவர்களை மீட்டுத் தர வேண்டும்' என்று கூறி அண்மையில் குஜராத் மாநில காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த விவகாரத்தில் குழந்தைகளைக் கடத்தி சட்டவிரோதமாக அடைத்துவைத்து சித்ரவதை செய்ததாக, நித்யானந்தா மீது குஜராத் போலீஸார் வழக்குப்பதிந்து, அவரைத் தேடிவருகின்றனர். ஆனால், நித்யானந்தாவோ வெளிநாடு தப்பிச்சென்று, ஈக்வடார் நாட்டில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அங்கு தனி நாடு ஒன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் தகவல்கள் வெளியாயின.

நித்யானந்தா
நித்யானந்தா

அதற்கேற்பவே, ``தனித் தீவுக்கு `கைலாசா’ என்று பெயர் சூட்டி தனி நாட்டுக்குக் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்காக தனி இணையதளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. `கைலாஷ் நேஷன்' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த இணையதளத்தில், தனது நாட்டுக்கென நந்தி அருகில் நித்தியானந்தா அமர்ந்திருப்பதுபோல் தனிக்கொடி, தேசியப் பறவை, தேசிய விலங்கு, தேசிய மரம் என ஒரு நாட்டுக்குத் தேவையான அனைத்தையும் அந்த இணையத்தில் பதிவிடப்பட்டிருந்தனர். மேலும், தனிநாட்டுக்கென டிஃபென்ஸ், கல்வித்துறை, சுகாதாரத்துறை என 9 துறைகள் பிரிக்கப்பட்டதுடன் நித்யானந்தா பீடத்துக்குக்கீழே அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது.

`9 டிபார்ட்மென்ட்; இரண்டு கலரில் பாஸ்போர்ட்'- இது நித்யானந்தாவின் `கைலாஷ் நேஷன்'!

அதேபோல், தனி நாட்டுக்குக் குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர்களுக்காக இரண்டு கலரில் பாஸ்போர்ட் வெளியிடப்பட்டு அதற்கான தகுதியும் வெளியிடப்பட்டது. இந்தத் தகவல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நித்யானந்தா ஈக்வடார் நாட்டில் இருக்கிறாரா என்பதுகுறித்து அந்நாட்டு தூதரக அதிகாரி நியூஸ் 18 சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ``தஞ்சம் கோரி ஈக்வடார் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார் நித்யானந்தா. ஆனால் ஈக்வடார் அரசு அவருக்கு அனுமதி மறுத்துவிட்டது. இதனால் நித்யானந்தா ஹெய்ட்டிக்குச் சென்று இருக்கலாம்.

நித்யானந்தா
நித்யானந்தா

கைலாசா என்ற தீவு ஈக்வடார் நாட்டில் இல்லை. ஈக்வடார் நாட்டில் நித்யானந்தா இருக்கிறார் என்ற தகவலும் உண்மையில்லை. அவருக்கு நிலம் வாங்கவோ, தஞ்சம் புகவோ ஈக்வடார் அரசு எந்த உதவியும் வழங்கவில்லை" என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நித்யானந்தாவின் இருப்பிடத்தைக் கண்டறியும் வகையில் அவருக்கு எதிராக `புளூ கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்கும்படி `இன்டர்போல்' போலீஸ் உதவியை குஜராத் காவல்துறை நாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலியன் அசாஞ்சே முதல் நித்யானந்தா வரை... ஈக்வடார் என்னும் பூலோக சொர்க்கத்தின் ஸ்பெஷல் என்ன?

இதற்கிடையே, நித்யானந்தா குறித்து வெளியுறவுத்துறை அதிகாரி ரவீஷ் குமார் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், `` நித்யானந்தா இருக்கும் இடம் குறித்த தகவல் தொடர்பாக, இதுவரை எந்த நிறுவனமும் எங்கள் அமைச்சகத்தை அணுகவில்லை. இதுபோன்ற வழக்குகளில் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கும் ஏஜென்சிகளின் ஆலோசனையின்பேரில் நாங்கள் செயல்படுகிறோம்.

வெளியுறவுத்துறை அமைச்சகம்
வெளியுறவுத்துறை அமைச்சகம்

நாடு கடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சம்பந்தப்பட்ட நபர் இந்த நாட்டில் வசிப்பதாக நம்பப்படுவதாக தெரிவித்தால் நாங்கள் அதில் நடவடிக்கை எடுப்போம். நித்யானந்தா குறித்து இதுபோன்ற எந்தத் தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எனினும் அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் இருக்கும் இடம் பற்றித் தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.

`ஜீவ சமாதிக்கு உயில் எழுதி வைத்துள்ளேன்!'- நித்யானந்தா #Nithyananda #Kailaasa
அடுத்த கட்டுரைக்கு