Published:Updated:

சென்னை: முகநூல் நட்பு; காதலித்து 2-ம் திருமணம்; பெண்ணுக்கு அதிர்ச்சி தந்த கணவரின் சுயரூபம்

 முகநூல்
முகநூல்

முகநூல் மூலம் அறிமுகமானவரை நம்பி சென்னை வந்த பெண்ணைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றவரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

டெல்டா பகுதியைச் சேர்ந்தவர் கல்பனா (38). இவர், சென்னை அடையார் சாஸ்திரி நகரிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக கணவர், குழந்தைகளைப் பிரிந்து தனியாக கல்பனா வசித்துவந்தார். தஞ்சாவூரிலுள்ள வங்கியில் கிரெடிட் கார்டு பிரிவில் கல்பனா பணியாற்றியபோது, முகநூல் மூலம் சென்னை ஆவடி அண்ணாநகரைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் (35) என்பவர் அறிமுகமானார். இருவரும் ஆரம்பத்தில் நட்பாகப் பழகினர். பின்னர் இருவரும் காதலித்தனர். இதையடுத்து தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு கல்பனா வந்தார்.

திருமணம்
திருமணம்
representational image

இதையடுத்து 16.1.2021-ல் திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில்வைத்து கல்பனாவை பிரசன்ன வெங்கடேஷ் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு இருவரும் ஆவடி பருத்திப்பட்டு பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தனர். அந்த வீட்டுக்கு பிரசன்ன வெங்டேஷ், தன்னுடைய அம்மா விஜயா (51), அப்பா ரங்கசாமி (66), தங்கை புவனேஸ்வரி (30) ஆகியோரை அழைத்து வந்தார். அதன் பிறகு அனைவரும் ஒரே வீட்டில் குடியிருந்தனர்.

இந்தச் சமயத்தில் 30.1.2021-ல் கல்பனாவை பிரசன்ன வெங்கடேஷ் ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்போவதாகக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்த கல்பனா அதற்கு மறுத்ததால், ஆபாசப் படத்தை இணையதளத்தில் பதிவு செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். கல்பனா சம்மதம் தெரிவிக்காததால் அவரை பிரசன்ன வெங்கடேஷ் குடும்பத்தினர் அடித்து உதைத்திருக்கின்றனர். மேலும், கல்பனாவிடமிருந்த ஐந்து சவரன் தங்க நகைகள், 3 லட்சம் ரூபாயையும் பிரசன்னா குடும்பத்தினர் பறித்துக்கொண்டனர். வீட்டைவிட்டு வெளியில் செல்ல கல்பனாவை பிரசன்ன வெங்கடேஷ் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. அதனால் அறைக்குள் கல்பனா சிக்கிக்கொண்டார்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

ஒரு வழியாக சந்தர்ப்பம் பார்த்து, பிரசன்ன வெங்கடேஷ் குடும்பத்தினரிடமிருந்து தப்பிய கல்பனா, ஆவடி காவல் நிலையத்துக்கு வந்தார். அங்கு தனக்கு நடந்த கொடுமைகளை புகாராக எழுதிக் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பிரசன்ன வெங்கடேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு பிரசன்ன வெங்கடேஷ், அவரின் அப்பா ரங்கசாமி, அம்மா விஜயா, தங்கை புவனேஸ்வரி ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்து, அவர்களைக் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.

'கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட பெண்ணுக்குப் பாலியல் தொல்லை!' -சென்னையில் கொடூரம்!

இது குறித்து ஆவடி போலீஸார் கூறுகையில், ``கல்பனாவைத் திருமணம் செய்த பிரசன்ன வெங்கடேஷ், கூட்டுக் குடும்பமாக வசித்துவந்திருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு பிரசன்ன வெங்கடேஷின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்திருக்கிறது. அதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவர் வேலை பார்க்கும் நிறுவனத்துக்குச் சென்று கல்பனா விசாரித்திருக்கிறார். அப்போதுதான் பிரசன்ன வெங்கடேஷின் சுயரூபம் கல்பனாவுக்கு தெரியவந்திருக்கிறது. பிரசன்ன வெங்கடேஷ், சில பெண்களுடன் நட்பாகப் பழகுவதையறிந்த கல்பனா, அது தொடர்பாகக் கேட்டிருக்கிறார்.

Representational Image
Representational Image

அதனால் ஆத்திரமடைந்த பிரசன்ன வெங்கடேஷ், கல்பனாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதோடு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துப்போவதாகவும் கூறியிருக்கிறார். நகைகள், பணத்தை கல்பனாவிடமிருந்து பிரசன்ன வெங்கடேஷ் குடும்பத்தினர் பறித்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பிரசன்ன வெங்கடேஷ், அவரின் குடும்பத்தினரைக் கைதுசெய்திருக்கிறோம். பிரசன்ன வெங்கடேஷின் அப்பா ரங்கசாமி ஆவடியில் செயல்படும் ஹெச்.வி.எஃப்-பில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு