Published:Updated:

`ஆடி கார்; துணை நடிகை; தினமும் ஒரு லட்சம்'- போலி ஏ.டி.எம். கார்டு மன்னனின் அதிர்ச்சி வாக்குமூலம்

எஸ்.மகேஷ்

``போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் கைநிறைய பணம் கிடைத்ததால் என் விருப்பப்படி வாழ்ந்தேன்'' என்று போலி ஏ.டி.எம். கார்டுகளைத் தயாரித்த பட்டதாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

Representational image
Representational image

சென்னை மத்திய குற்றப்பிரிவில் கொடுக்கப்பட்ட புகார்களில், ``அயனாவரத்தில் உள்ள குறிப்பிட்ட ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தோம். பின்னர் எங்களின் வங்கி அக்கவுன்டிலிருந்த பணத்தை யாரோ எடுத்துவிட்டார்கள்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்மின் வங்கியைத் தொடர்பு கொண்டு சில தகவல்களை பெற்றனர். அப்போது புகார் கொடுத்தவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து எடுக்கப்பட்ட பணம், சென்னையில் உள்ள இரண்டு நிறுவனங்களின் அக்கவுன்ட்களுக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரித்தபோது ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர்ஸ் கருவிகளையும் ரகசிய கேமராக்களையும் பொருத்தி போலி கார்டுகளைத் தயாரித்த நெட்வொர்க் குறித்த தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொளத்தூரைச் சேர்ந்த இர்ஃபான், ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அல்லா பக்கஷ், மாங்காடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹாதி ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Representational image
Representational image

இதுகுறித்து நம்மிடம் பேசிய சென்னை மத்திய குற்றப்பிரிவின் உயரதிகாரி ஒருவர், ``எங்களுக்கு வந்த 10க்கும் மேற்பட்ட புகார்களின் பேரில் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்-க்குச் சென்று ஆய்வு நடத்தினோம். அப்போது அந்த ஏ.டி.எம்.மில் ஸ்கிம்மர்ஸ் கருவியும், ஏ.டி.எம். இயந்திரத்தின் கீ போர்டின் மேல் பகுதியில் ரகசிய கேமராவும் இருந்ததைக் கண்டறிந்தோம். அதை வைத்தவர்கள் யாரென்று விசாரணை நடத்தினோம். இதற்காக சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம்.

இந்தநிலையில் புகார் கொடுத்தவர்களின் பணம் எந்த அக்கவுன்ட்களுக்குச் சென்றது என்று விசாரித்தோம். அப்போது ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அல்லா பக்கஷ், மாங்காடு பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹாதி ஆகியோர் நடத்தும் நிறுவனங்களுக்கு அந்தப் பணம் சென்றது தெரியவந்தது. இதனால் அவர்களிடம் விசாரித்தோம். அப்போது அவர்கள் பயன்படுத்தும் பிஓஎஸ் இயந்திரத்தில் பணத்தைப் பறிக்கொடுத்தவர்களின் கார்டுகள் ஸ்வைப் செய்யப்பட்டது தெரியவந்தது. ஆனால், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது நாங்கள் ஸ்வைப் செய்யவில்லை என்று தெரிவித்தனர்.

Representational image
Representational image

இதையடுத்து மீண்டும் அல்லா பக்கஷ், அப்துல் ஹாதி ஆகியோரிடம் விசாரித்தபோது அவர்கள் கூறிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொளத்தூரைச் சேர்ந்த இர்ஃபான், சில மாதங்களுக்கு முன் தங்களைச் சந்தித்தார். அப்போது அவருடன் நாங்கள் பிசினஸ் டீலிங் ஒன்றை செய்துகொண்டோம். அவர் கொடுக்கும் கார்டுகள் மூலம் பணத்தை ஸ்வைப் செய்தால் 30 சதவிகிதம் எங்களுக்கு கமிஷனாகக் கொடுப்பார். பணத்துக்கு ஆசைப்பட்டு தப்பு செய்துவிட்டோம் என்று கூறினர்.

இதையடுத்து இர்ஃபானை மடக்கிப்பிடித்தோம். அவரிடம் விசாரித்தபோது சொகுசு வாழ்க்கைக்காக ஸ்கிம்மர்ஸ் கருவி, ரகசிய கேமரா மூலம் போலி கார்டுகளைத் தயாரித்து பணம் கொள்ளையடித்ததை இர்ஃபான் ஒத்துக் கொண்டார். அவரிடமிருந்து போலி ஏ.டி.எம் கார்டுகள், ஸ்கிம்மர்ஸ் கருவிகள், ஆடி கார், லேப்டாப்கள், செல்போன்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இந்த வழக்கில் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றார்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்.

போலீஸாரிடம் இர்ஃபான் அளித்த வாக்குமூலத்தில், ``சிறு வயது முதலே ஆடம்பரமாக வாழ விரும்பினேன். ஆனால், நான் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு வேலை தேடினேன். கிடைத்த வேலையிலும் போதிய வருமானம் கிடைக்கவில்லை. சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றியபோதுதான் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் மோசடி செய்யலாம் என்ற ஐடியா கிடைத்தது.

இந்தச் சமயத்தில்தான் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டேன். அதன்படி தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே பணக்காரனாக முடிவு செய்தேன். ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர்ஸ் கருவியை வைத்து அதன்மூலம் கார்டுகளின் விவரங்களை திருடி போலி ஏ.டி.எம். கார்டுகளை தயாரிப்பது தொடர்பான தகவல்களைச் சேகரித்தேன்.

காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம்.களை நோட்டமிட்டு அங்கு ஸ்கிம்மர்ஸ் கருவிகளை வைத்தேன். ரகசிய நம்பர்களைக் கண்டறிய ஏ.டி.எம். கீ போர்டு பகுதியில் ரகசிய கேமராவைப் பொருத்தினேன். அதன்மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் போலி ஏடி.எம். கார்டுகளைத் தயாரித்தேன். அதன்பிறகு என் வாழ்க்கை ஸ்டைலே மாறிவிட்டது. இந்தச் சமயத்தில் புதுச்சேரி போலீஸார், என்னைப் பிடித்துவிட்டனர். இந்த வழக்கில் சிறையிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம்தான் வெளியில் வந்தேன். அதன்பிறகு கடந்த மே, ஜூன் மாதம் கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டேன். சென்னையிலும் காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர்ஸ், ரகசிய கேமராக்களை பொருத்தி போலி கார்டுகளைத் தயாரித்தேன்.

விசாரணையின் போது இர்ஃபான்
விசாரணையின் போது இர்ஃபான்

பிறகு போலி ஏ.டி.எம். கார்டுகளைத் தயாரித்து பணத்தைக் கொள்ளையடித்தேன். குறிப்பாக அயனாவரத்தில் உள்ள ஏ.டி.எம்.மை பயன்படுத்தியவர்களின் கார்டு விவரங்கள் அடிப்படையில் போலி கார்டுகளை தயாரித்தேன். அதன்மூலம் எனக்குத் தேவையான பணத்தை எடுத்தேன். ஆடி கார் ஒன்றை வாங்கி பிசினஸ் மேக்னெட் போல வலம் வந்தேன். டிப் டாப் உடை, ஆடம்பர வாழ்க்கை என சந்தோஷமாக இருந்தேன். ஆனால் அயனாவரத்தில் வைத்திருந்த ஸ்கிம்மர்ஸ் கருவி, ரகசிய கேமராவால் சிக்கிக் கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் எடுத்த பணத்தை என்ன செய்தீர்கள்? என்று இர்ஃபானிடம் போலீஸார் கேட்டதற்கு, அளவுக்கு அதிகமாக பணம் இருந்ததால் என் விருப்பப்படி வாழ்ந்தேன். துணை நடிகைகளின் அறிமுகமும் எனக்கு கிடைத்தது என்று கூறியுள்ளார். மேலும், இரவு 11 மணி முதல் தொடங்கி அதிகாலை வரைதான் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் பணத்தை எடுப்போம் என்றும் தினமும் ஒரு லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்றும் இந்த வழக்கில் கைதானவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இர்ஃபானை போலி ஏ.டி.எம். கார்டுகளைத் தயாரிக்கும் மன்னன் என்றே அவரின் கூட்டாளிகள் அழைத்துவந்துள்ளனர்.