Published:Updated:

`ஹலோ.. நான் கமிஷனர் ஆபீஸிலிருந்து பேசுகிறேன்!' - முதல்வர் வீட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞர்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிக்கந்தர்
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிக்கந்தர்

``ஹலோ நான், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக 8-வது மாடியிலிருந்து பேசுகிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன்'' என்று மிரட்டல்விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், தன்னுடைய பெயர் பாஷா என்று கூறியுள்ளார். பின்னர் அவர், ``சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளேன்" என்று கூறினார். அதைக்கேட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் போலீஸார், `நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு, ``நான், சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் 8-வது மாடியிலிருந்து பேசுகிறேன்" என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

போலீஸ் கமிஷனர் அலுவலகம்
போலீஸ் கமிஷனர் அலுவலகம்

இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வெடிகுண்டு நிபுணர்கள், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதனால் போலீஸார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். இதையடுத்து மிரட்டல் விடுத்தவர் யாரென்று கண்டறிய போலீஸார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் நம்பரை ஆய்வு செய்தனர். அப்போது அந்த செல்போன் நம்பர், மடிப்பாக்கம், ராம் நகர் தெரு என சிக்னல் காட்டியது.

இதையடுத்து மடிப்பாக்கம் போலீஸார் அங்கு சென்று விசாரித்தனர். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் சிக்கந்தர் பாஷா(41) எனத் தெரிந்தது. அவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிப்புரிந்து வருகிறார். நேற்று இரவு குடிப்போதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் சிக்கந்தர் பாஷா மிரட்டல் விடுத்துள்ளார். அதனால் போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சிக்கந்தர் பாஷா, மனநலம் பாதிக்கப்பட்ட மாத்திரைகளைச் சாப்பிட்டுவருகிறார். இவர், ஏற்கெனவே முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டவர். மீண்டும் அவர், முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். சிக்கந்தர் பாஷாவுக்கு 2 மனைவிகள் உள்ளனர்" என்றனர்.

சிக்கந்தர் பாஷாவிடம், `எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தீர்கள்?' என்று போலீஸார் கேட்டதற்கு அவர் எந்தவித பதிலையும் சொல்லவில்லையாம்.

அடுத்த கட்டுரைக்கு