Published:Updated:

``ஹலோ நான்தான் பேசுறேன்!'' - போலி Call Centre-களின் கண்ணீர்க் கதைகள்

ஹலோ நான்தான் ரம்யா பேசுகிறேன், உங்களிடம் 2 நிமிஷம் பேசலாமா என்ற காந்தக்குரலுக்கு மயங்கிய ராஜேஷ், பணத்தை இழந்ததோடு மனநிம்மதியையும் பறிக்கொடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காந்தப் படுக்கை, டேட்டா என்ட்ரி, ஈமு கோழி, பிட் காயின் என ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது மோசடிகள் தமிழகத்தில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. `குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாவது எப்படி... ஆறே நாளில் ஆடி காரில் பறப்பது எப்படி?' என வகுப்பெடுப்பதற்கென்றே இந்த மோசடி நிறுவனங்கள், பேச்சாளர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஒரே ஒருவரைக் காட்டிக்கொண்டே, மொத்தக் கூட்டத்தையும் மொட்டை அடிப்பதில் எம்.எல்.எம் நிறுவனங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், இளைஞர்கள் என மோசடி வலையில் சிக்கிப் பணம் கொடுத்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். அந்த வரிசையில் புதிதாக முளைத்திருக்கிறது கால் சென்டர் மோசடி. புதிதாக ஓர் அலுவலகத்தைத் தொடங்கி எப்படியெல்லாம் கோடிகளைச் சேர்க்கிறார்கள் என்பதை விரிவாக அலசுகிறது இந்தத் தொடர்

சென்னை அண்ணாசாலையில் செயல்பட்ட போலி கால்சென்டர்
சென்னை அண்ணாசாலையில் செயல்பட்ட போலி கால்சென்டர்

சென்னை தேனாம்பேட்டையில் சிக்னலுக்காக பைக்கில் காத்திருந்த ராஜேஷின் செல்போனுக்குத் தொடர்ந்து 2 தடவை அழைப்பு வந்திருந்தது. சிக்னல் டென்ஷன் ஒருபுறம் இருக்க, போனை ஹெல்மெட்டுக்குள் நுழைத்தபடியே, ஹலோ என்றார். எதிர்முனையில், `ஹலோ சார்' எனப் பெண் குரல் கேட்டது.

`சொல்லுங்க மேடம்?'

`சார் நான் ரம்யா, பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசறேன். உங்களுக்கு லோன் வேணுமா?'

`மேடம் நான் சிக்னலில் நிற்கிறேன். பிறகு பேசுங்கள்' எனக் கூறியபடியே இணைப்பைத் துண்டித்தார்.

ராஜேஷுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இன்னும் திருமணமாகவில்லை. அன்றைய வேலையை முடித்துவிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள மேன்சனுக்குள் நுழையவும் செல்போன் ஒலித்தது. மீண்டும் காலையில் பேசிய அதே ரம்யா...

`சார், ஞாபகம் இருக்கா... நான்தான் ரம்யா!'

`என்ன மேடம்?'

போலி கால் சென்டர் நடந்த பென்ஸ் கிளப்
போலி கால் சென்டர் நடந்த பென்ஸ் கிளப்

`எங்கள் கம்பெனியில் குறைந்த வட்டிக்கு லோன் கொடுக்கிறோம். உங்களுக்கு வேணுமா?'

`ஆமாம் வேணும்' என விளையாட்டாகச் சொன்னார் ராஜேஷ்.

`நீங்க எங்கே வேலை பார்க்கிறீங்க... எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க... ஆதார்கார்டு, பான் கார்டு, அட்ரஸ் புரூஃப்' எனப் பட்டியலிட்டுக்கொண்டே போனார். ரம்யாவின் ஒவ்வொரு கேள்விக்கும் ராஜேஷ் பதிலளித்தார். லோனைப் பற்றிய விவரங்களைக் கேட்பதைவிட ரம்யா குறித்த தகவல்களை அறிந்துகொள்ளவே முனைப்பைக் காட்டினார் ராஜேஷ். ரம்யாவும் பிடிகொடுக்காமல் ராஜேஷின் முழு பயோடேட்டாவையும் சேகரித்துவிட்டு,

`ஓ.கே ராஜேஷ், எங்க டீம் லீடர் லீமா உங்ககிட்ட பேசுவாங்க. பாய்...' என்றபடியே இணைப்பைத் துண்டித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்த நாள் ராஜேஷின் இணைப்புக்கு வந்தார் லீமா.

`சார், உங்களப் பத்தி ரம்யா சொன்னாங்க. உங்களுடைய சிபில் ஸ்கோர் நல்லா இருக்கு. அதனால உடனே லோன் அப்ரூவல் பண்ணிடலாம். உங்களுக்கு எவ்வளவு அமவுன்ட் தேவைப்படும்.'

உண்மையிலேயே ராஜேஷின் தங்கைக்கு அடுத்த மாதம் திருமணம். அதற்காக அம்மா பணம் கேட்டிருந்தார். இதை மனதில் வைத்து, ` 5 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது' என்றார் ராஜேஷ்.

`நீங்கள் கேட்ட பணத்துக்கு 11 பெர்சன்ட் இன்ட்ரஸ்ட். ஆனால், நீங்கள் அவ்வளவு கட்ட வேணாம். எங்க கம்பெனியில இன்னொரு ஆப்ஷன் இருக்கு. நீங்க இன்ஷூரன்ஸா ஒரு லட்சம் செலுத்தினால் போதும். 5 பெர்சன்ட் வட்டியில லோன் தந்துடுவோம்' என விவரித்தார் லீமா. இந்தக் கண்டிஷனுக்கு உடன்பட்டார் ராஜேஷ்.

போலி கால் சென்டர்
போலி கால் சென்டர்

இன்ஷூரன்ஸ் தொகையை ஒரே பேமென்ட்டாகவும் கட்டலாம். இல்லைன்னா, உங்களால முடிந்த அமவுன்ட்டாகவும் செலுத்தலாம். உங்க வாட்ஸ்அப் நம்பருக்கு அக்கவுன்ட் விவரத்தை அனுப்பி வைக்கிறேன்' என்றார் லீமா.

லீமாவின் வாட்ஸ்அப் நம்பரிலிருந்து ராஜேஷுக்கு அடுத்த சில நிமிடங்களில் வங்கி அக்கவுன்ட் நம்பர் வந்தது. அந்த நம்பருக்கு 50,000 ரூபாயை ராஜேஷ் அனுப்பி வைத்தார். அதோடு லீமா கேட்ட ஆவணங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு 5 லட்சம் ரூபாய் லோனுக்காகக் காத்திருந்தார். ஆனால், எந்தப் பதிலும் வரவில்லை.

இதனால் சந்தேகப்பட்டு ரம்யாவுக்கும் லீமாவுக்கும் தொடர்ந்து போன் செய்தார் ராஜேஷ்.

`மேடம் லோன் என்னாச்சு... இன்னும் 10 நாளில் தங்கச்சிக்குத் திருமணம். அதற்குள் லோன் கிடைச்சிடுமா?'

`சார், உங்க லோன் ப்ராஸஸ் ஆகிக்கொண்டிருக்கிறது. இன்னும் டூ டேய்ஸ்ல லோன் அமவுன்ட் உங்க அக்கவுன்ட்ல கிரெடிட் ஆகிடும்' எனச் சொல்லி வைத்ததுபோல லீமாவும் ரம்யாவும் பதில் கொடுத்தனர். தங்கையின் திருமணம் முடிந்தும் ராஜேஷின் கைகளுக்கு லோன் வரவில்லை. இதனால் கோபத்துடன், ரம்யாவிடமும் லீமாவிடமும் போனில் பேசினார் ராஜேஷ்.

`சார்... நீங்க எங்க ஹெட்டுகிட்ட பேசுங்க... நான் லைன் கொடுக்கிறேன்' என்றபடியே லைனில் காத்திருக்க வைத்தனர்.

போலி கால் சென்டர்
போலி கால் சென்டர்

`ஹலோ ராஜேஷ், நான் ஹேமந்த்... உங்களுக்கான லோன் ப்ராஸஸிங்கில் இருக்கிறது. நீங்க கொடுத்த அட்ரஸ் புரூஃப்ல கொரி போட்டிருக்காங்க. உங்களுக்காக அதைச் சரி செய்து லோன் அமவுன்ட்டை டூ டேய்ஸ்ல அக்கவுன்ட்டுக்கு வரும்படி பார்த்துக்கொள்கிறேன்' என உறுதி கொடுக்கப்பட்டது. அதன்பிறகும் லோன் தொகை ராஜேஷுக்கு வரவில்லை. இந்தமுறை ரம்யா, லீமாவின் செல்போன் நம்பரைத் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் என்று பதில் வந்தது.

இதனால் அதிர்ந்துபோன ராஜேஷ், உடனே 50,000 ரூபாய் அனுப்பிய வங்கி விவரங்களுடன் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு வந்தார். அங்கு ராஜேஷைப்போல பலர் புகார் கொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களுடன் பேசியபோதுதான், தான் மட்டும் ஏமாற்றப்படவில்லை, தன்னைப்போல பலரையும் திட்டமிட்டு ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவில் ராஜேஷ் கொடுத்த புகாரின் எண் 999.

போலீஸ் கமிஷனர் அலுவலகம்
போலீஸ் கமிஷனர் அலுவலகம்

ஐபிஎஸ் அதிகாரிகள் மீட்டிங்கில் இருந்ததால் சென்னை போலீஸ் அதிகாரி, தன்னுடைய செல்போனை சைலன்ட் மோடில் வைத்திருந்தார்... அவரின் செல்போனுக்கு ஒரு ஓடிபி எண் மெசேஜ் வந்திருந்தது. அடுத்த சில நிமிடத்தில் அவரின் செல்போனில் பேசிய ஒருவர், உங்களுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கும் அதைச் சொல்லுங்கள் என்று கூற, மீட்டிங்கில் இருந்த ஐபிஎஸ் அதிகாரியும் தனக்கு வந்த மெசேஜை போனில் பேசியவருக்கு அனுப்பி வைத்தார். அடுத்த சில நிமிடத்தில் அவரின் வங்கிக் கணக்கிலிருந்து சில ஆயிரங்கள் பிடித்தம் செய்த இன்னொரு மெசேஜ் போனுக்கு வந்தது. அதைப் பார்த்த அந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு ஏசி அறையிலும் வியர்த்துக் கொட்டியது... யார் அந்த ஐபிஎஸ் அதிகாரி, அவரை ஏமாற்றியது யார் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு