Published:Updated:

``மெசேஜை எனக்கு அனுப்புங்க" - போலீஸை ஏமாற்றிய போலி Call Centre பெண்ணின் காந்தக் குரல்

போலி call centre
போலி call centre

``நான்கூட இந்தப் போலி call centre மோசடிக் கும்பலால் பணத்தை ஏமாந்துள்ளேன். மீட்டிங்கில் இருக்கும் போது வந்த மெசேஜை என்ன என்றுகூட பார்க்காமல் அனுப்பியதால் பணத்தை இழந்துவிட்டேன்" என்று ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ராஜேஷின் புகாரைப் படித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அவரின் செல்போனிலிருந்த ஆடியோவை ஆதாரமாக வாங்கிக் கொண்டனர். அதில் ராஜேஷ் மற்றும் ரம்யா, லீமா, ஹேமந்த் ஆகியோர் பேசியதை போலீஸார் கேட்டனர். அப்போதுதான் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்குப் பொறி தட்டியது. ராஜேஷைப் போல ஏற்கெனவே பலர் புகாரளித்திருந்தனர். ஆனால் அந்தப் புகார்களில் எல்லாம் எந்தவித ஆதாரங்களும் சிக்கவில்லை. மேலும், புகாரளித்தவர்கள் கொடுத்த செல்போன் நம்பர்கள் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன. அந்த செல்போன் நம்பர்களின் முகவரிகளும் வடமாநிலத்தைச் சேர்ந்தவை. இந்தச் சமயத்தில் ராஜேஷ் அளித்த புகார் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், உயரதிகாரிகளுடன் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்தனர்.

``ஹலோ நான்தான் பேசுறேன்!'' - போலி Call Centre-களின் கண்ணீர்க் கதைகள்
போலி கால் சென்டர் வழக்கை விசாரித்த போலீஸ் டீம்
போலி கால் சென்டர் வழக்கை விசாரித்த போலீஸ் டீம்

சென்னை மத்திய குற்றப்பிரிவில் இணை கமிஷனராக இருந்த அன்பு தலைமையில் துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் பிரபாகரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த மீட்டிங்கில் போன் அழைப்பு மூலம் பணத்தை இழந்தவர்களின் புகார்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் எப்படி இந்த மோசடி நடக்கிறது என்பதை விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய மீனா பிரியா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், அசோக் தாமஸ்துரை, வீராசாமி, ஜான்ரோஸ், வின்சென்ட் மோகன், பாலசுப்பிரமணியன், வனிதா, எஸ்.எஸ்.ஐ மோகன் மற்றும் காவலர் சாந்தி, சரண்மணி ஆகியோர் கொண்ட டீம் அமைக்கப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதனுக்குத் தகவல் தெரிந்ததும் இன்ஸ்பெக்டர் மீனா பிரியாவை நேரில் அழைத்து வழக்கு தொடர்பாகப் பேசினார்.

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு வந்த போன் அழைப்பு மூலம் பணத்தை இழந்தவர்களின் புகார்கள் ஒவ்வொன்றையும் பார்த்த போலீஸ் டீமுக்கு ஒரே ஒரு தகவல் மட்டும் தெளிவாகப் புரிந்தது. புகார் கொடுத்த எல்லோரிடமும் லோன் வேண்டுமா, இன்ஷூரன்ஸ் எடுங்க என்று ஒரே ஸ்டைலில் ஏமாற்றியிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி பிரிவு போலீஸார், மோசடிக் கும்பல் குறித்த விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினர்.

இந்தச் சமயத்தில்தான் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு வந்த ஒரு புகாரும் தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு வந்த புகார்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக பொருளதாரக் குற்றப்பிரிவிலிருந்த ஃபைல்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், சென்னையைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் மீது மோசடி புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த வழக்கில் கோபிகிருஷ்ணன் (31), பணத்தை நூதன முறையில் ஆசையைத் தூண்டி ஏமாற்றியதை சென்னை மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி பிரிவு போலீஸார் கண்டறிந்தனர். அதன்பிறகு, போலீஸாரின் சந்தேகப் பார்வை கோபி கிருஷ்ணன் மீது விழுந்தது. யார் இந்த கோபிகிருஷ்ணன் என்று விசாரித்தபோதுதான் திடுக்கிடும் தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்தன.

`பெண்ணின் காந்தக் குரல்; கால் சென்டர் ஹைடெக் மோசடி!' - வி.சி.க பிரமுகரால் சிக்கிய பென்ஸ் சரவணன்
கால் சென்டரின் மாஸ்டர் மைண்ட் கோபிகிருஷ்ணன்
கால் சென்டரின் மாஸ்டர் மைண்ட் கோபிகிருஷ்ணன்

போலீஸாரின் விசாரணையில் பொதுமக்களை போனில் பேசி பணத்தைப் பறிக்கும் கும்பலின் தலைவன் கோபிகிருஷ்ணன் எனத் தெரிந்தது. கோபிகிருஷ்ணனைப் பிடிக்க போலீஸார் வலை விரித்த சமயத்தில்தான், போலீஸாரையே அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. வடமாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் டிஜிபி ஒருவரின் மகனின் வங்கிக் கணக்கிலிருந்து சில லட்சம் ரூபாய் மோசடிக் கும்பலால் எடுக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அந்த ஐபிஎஸ் அதிகாரி தரப்பில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் கொடுக்கப்பட்ட புகாரில், ``எனது மகன் முக்கியமான மீட்டிங் ஒன்றில் இருந்தபோது போனை சைலன்ட் மோடில் வைத்திருந்துள்ளான். அப்போது, அவனுடைய செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அடுத்த சில நிமிடத்தில் காந்தக்குரலில் பேசிய பெண் ஒருவர், சார் நான், நீங்கள் அக்கவுன்ட் வைத்திருக்கும் வங்கியின் மேனேஜர் ரீமா பேசுகிறேன்.

உங்களுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கும். அதை இந்த நம்பருக்கு உடனே பார்வேர்டு செய்யுங்கள் என்று கூறியுள்ளார். மீட்டிங்கில் இருந்ததால் என் மகனால் அந்தப் பெண்ணிடம் விவரங்கள் எதுவும் கேட்க முடியவில்லை. உடனடியாக அது என்ன மெசேஜ் என்றுகூட பார்க்காமல் அந்த மெசேஜை அனுப்பியுள்ளான். அடுத்த சில நொடியில் வங்கியிலிருந்து இன்னொரு மெசேஜ் வந்தது. அதில் வங்கி அக்கவுன்ட்டிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்து அவன் அதிர்ச்சியடைந்துள்ளான்.

பின்னர் மீட்டிங் முடிந்ததும் அந்த செல்போன் நம்பருக்கு போன் செய்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. விசாரித்தபோது அந்த சிம்கார்டு வடமாநில முகவரியில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்த போலீஸ் டிஜிபி ஓய்வு பெற்றுவிட்டார். புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (வங்கி மோசடி) போலீஸார் விசாரித்தனர். போலீஸ் டிஜிபியின் மகனிடமிருந்து பணத்தை நூதன முறையில் ஏமாற்றியது போலி கால் சென்டர் கும்பல் என்பதை போலீஸார் கண்டறிந்தனர். போலி கால் சென்டர்கள் தமிழகம் முழுவதும் ரகசியமாக செயல்படுவதை மோப்பம் பிடித்த போலீஸார் அது தொடர்பான விசாரணையில் களமிறங்கினர்.

கோபி கிருஷ்ணனின் கூட்டாளிகள்
கோபி கிருஷ்ணனின் கூட்டாளிகள்

சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்கு, வடபழனி, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆவடி, ஆலந்தூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் போலி கால் சென்டர்கள் ரகசியமாக செயல்பட்டதை போலீஸார் கண்டுபிடித்து அங்கு அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போதுதான் கால் சென்டர்களில் பணியாற்றியவர்களுக்கு இந்த மோசடி குறித்த தகவல்கள் தெரியவந்தன. வடபழனி கால் சென்டரில் போலீஸாரின் அதிரடி சோதனையில் இன்ஜீனியரிங் படித்த சென்னை கொண்டிந்தோப்பைச் சேர்ந்த வெங்கடேஷ் சிக்கினார். இவர்தான் கோபிகிருஷ்ணனுக்கு வலதுகரம். இவரின் வங்கிக் கணக்கிற்குதான் பணம் அனுப்பப்பட்டதை ஆதாரத்துடன் போலீஸார் கண்டுபிடித்தனர்.

வடபழனி அலுவலகத்தில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக (ஹெச்.ஆர்) நாமக்கலைச் சேர்ந்த பூபதி இருந்துள்ளார். வெங்கடேசனுக்கு அடுத்த இடத்தில் போரூரைச் சேர்ந்த விக்னேஷ் பணியாற்றியுள்ளார். சோளிங்கநல்லூரைச் சேர்ந்த சதீஷ், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் சார்லஸ், திராவிட அரசன் என 100க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றிவந்துள்ளனர். ஆனால், வெங்கடேஷ், பூபதி, விக்னேஷ், சதீஷ், கிருஷ்ணகுமார், சார்லஸ், திராவிடஅரசன் ஆகிய ஏழு பேருக்கு மட்டும்தான் மோசடி குறித்த தகவல் தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது. அதனால் அவர்கள் 7 பேரை மட்டும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடிக்குப் பயன்படுத்திய செல்போன்கள், லேப்டாப்கள், கம்ப்யூட்டர்கள், ஏராளமான ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

போலி கால் சென்டர் அலுவலகம்
போலி கால் சென்டர் அலுவலகம்

கோபிகிருஷ்ணனின் கூட்டாளிகள் சிக்கிய பிறகுதான் போலி கால் சென்டர்கள் சென்னை மற்றும் தமிழகத்தில் பல இடங்களில் ரகசியமாகச் செயல்பட்ட தகவல் மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தெரியவந்தது. இந்தச் செய்தி வெளியானதும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார்கள் குவியத் தொடங்கின. அந்தப் புகார்களோடு சென்னையில் போலீஸ் உதவி கமிஷனர்களாகப் பணியாற்றுபவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் 2 புகார்களைக் கொடுத்திருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது நதியா, கௌசல்யா என்ற பெயரில் பேசிய பெண்கள், குறைந்த வட்டியில் லோன் வேண்டுமா என்று கேட்டனர். அதற்கு 10 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகக் கூறினோம். லோன் வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அந்தப் பெண்களின் பேச்சை நம்பி இன்ஷூரன்ஸ் எடுக்க சம்மதித்தோம்.

உடனடியாக நதியாவும் கௌசல்யாவும் எங்களின் வங்கி விவரங்களைக் கேட்டனர் (ஏடிஎம் கார்டு). அதைக் கூறியதும் ஓடிபி எண் செல்போனுக்கு வந்தது. அந்த நம்பரை நதியாவும் கௌசல்யாவும் கேட்டனர். அதைக் கூறியதும் எங்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது. இன்ஷூரன்ஸிக்குப் பணம் செலுத்திய பிறகும் 10 லட்சம் ரூபாய் லோன் வரவில்லை. அதுகுறித்து நதியா, கௌசல்யாவிடம் கேட்க செல்போனில் கால் செய்தபோது சுவிட்ச் ஆப் என பதில் வந்தது. எங்களின் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணம், வடபழனியில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது என்று கூறினர்.

பறிமுதல் செய்யப்பட்டவை
பறிமுதல் செய்யப்பட்டவை

போலீஸ் உதவி கமிஷனர்களின் குடும்பத்தினர் ஏமாற்றிய கோபிகிருஷ்ணனின் கூட்டாளிகள் பிடிப்பட்டனர். அதோடு போலீஸாரை விடவில்லை இந்த மோசடி கால் சென்டர் கும்பல். போலி கால் சென்டர் வழக்கை விசாரித்த அதிகாரிகளிடம், ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர், ஒரு தகவலைக் பகிர்ந்துள்ளார் அதில், நான்கூட இந்த மோசடிக் கும்பலால் பணத்தை இழந்துள்ளேன். மீட்டிங்கில் இருக்கும் போது வந்த மெசேஜ் என்ன என்றுகூட பார்க்காமல் அனுப்பியதால் பணத்தை இழந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகுதான் போலி கால்சென்டர் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

போலி கால் சென்டர்களின் மோசடி வழக்கில் போலீஸார் எதிர்பார்க்காத இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது. கோபி கிருஷ்ணனின் கூட்டாளிகள் சிக்கியதும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் மற்றும் கோபி கிருஷ்ணனின் வழக்கறிஞர்கள் டீம் எனக்கூறி விசாரணை அதிகாரிகளிடம் பேரம் பேசப்பட்டது. அதற்கு முன்பணமாக 20 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. பல தடைகளை மீறி கோபி கிருஷ்ணனை போலீஸார் கைது செய்தது எப்படி என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்..

- தொடரும்...

அடுத்த கட்டுரைக்கு