Published:Updated:

`நான் தவறு செய்துவிட்டேன்; ஆனால் பாஸுக்கு உண்மையாக இருந்தேன்!’ -போலி call centre-ன் பவர் பாயின்ட்

கைநிறைய பணம் இருந்ததால் இந்த உலகத்தில் உள்ள அனைத்து சந்தோஷத்தையும் கோபி கிருஷ்ணன் அனுபவித்தார் என போலி call centre- ன் பவர் பாயின்ட்டாக செயல்பட்ட இன்ஜினீயர் ஜான்சன் பல தகவல்களைக் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னையில் சிக்கிய போலி கால்சென்டர் கும்பலுக்கு ஆதரவாக விசாரணை அதிகாரிகளிடமே ஒரு டீம் பேரம் பேசிய தகவல் வெளியானது. உடனடியாக இந்தத் தகவலை விசாரணை அதிகாரிகள் தங்களின் உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். அதுதொடர்பாக உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி அதிரடி முடிவை எடுத்தனர். பேரம் பேசிய டீமிடம் உங்களின் டீலுக்கு நான் சம்மதிக்கிறேன் என விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார். அதனால் மகிழ்ச்சியடைந்த போலி கால் சென்டர் டீம், டீலிங் பேசினர். குறிப்பிட்ட தொகையைக் கொடுப்பதாகக் கூறிய போலி கால் சென்டர் டீமைச் சேர்ந்தவர்கள், அட்வான்ஸ் தொகையாக 20 லட்ச ரூபாயை ஒரு வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்தனர்.

``ஹலோ நான்தான் பேசுறேன்!'' - போலி Call Centre-களின் கண்ணீர்க் கதைகள்
போலி கால்சென்டர் நடத்திய கோபியின் வீடு
போலி கால்சென்டர் நடத்திய கோபியின் வீடு

பணம் வந்த தகவலை உறுதிப்படுத்தியதும் அந்தத் தகவலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அதிகாரிகள் கூறிய ஐடியாவின்படி பேரம் பேசிய டீமிடம் மீண்டும் பேசினார் அந்த விசாரணை அதிகாரி. அப்போது `உங்களின் பணம் வந்துவிட்டது. அடுத்து நீங்கள் சொல்வது போல செய்துவிடுகிறேன். அதற்குள் மீதிப் பணத்தையும் அனுப்பிவிடுங்கள்' என்று கூறினார். அதற்கு `ஓகே' என்று கூறிய போலி கால் சென்டர் டீம், பணத்தை ரெடி செய்துவிட்டு பதில் சொல்கிறோம் என்று தெரிவித்தனர். போலி கால் சென்டர் கும்பலுக்கு போலீஸாரின் சீக்ரெட் ஆப்ரேஷன் அப்போது தெரியவில்லை.

சென்னையில் போலி கால் சென்டர் நடத்திய கோபி கிருஷ்ணன் குறித்த முழு தகவல்களையும் ரகசியமாக போலீஸார் சேகரித்தனர். பொதுமக்களுக்கு போன் செய்து இன்ஷூரன்ஸ், லோன் ஆசையைக் காட்டி ஏமாற்றிய கும்பலுடன் யார், யாரெல்லாம் தொடர்பிலிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்த போலீஸார், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர். அதனால் போலீஸாரிடம் பேரம் பேசிய டீமைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலி கால் சென்டரின் மாஸ்டர் மைன்டாகக் கருதப்படும் கோபிகிருஷ்ணன் உஷாரானார். உடனடியாக அவர் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆனார். அந்தத் தகவல் போலீஸாருக்குத் தெரியவில்லை.

போலி கால் சென்டர்
போலி கால் சென்டர்

கோபி கிருஷ்ணனின் பின்னணியில் இருப்பவர்களின் பட்டியலில் வி.வி.ஐ.பி-க்கள் சிலர் இருந்தனர். கட்சி பாகுபாடின்றி அவருக்கு பலர் உதவிக்கரமாக இருந்துவந்தனர். அதனால் போலீஸார், எளிதில் கோபி கிருஷ்ணனைப் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்தனர். தற்போது போலீஸ் விசாரணை அதிகாரியிடமும் போலி கால் சென்டர் கும்பல் உஷாராகவே இருந்தது. அதனால் கோபி கிருஷ்ணன் எங்கு இருக்கிறார் என்ற விவரத்தை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே நேரத்தில் பொதுமக்களிடமிருந்து ஏமாற்றி பெறப்பட்ட பணம், எந்த வங்கிக் கணக்குக்குச் சென்றது என்ற முழு விவரங்களையும் போலீஸார் சேகரித்தனர். அந்தப் பட்டியலில் உள்ளவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு வங்கிக் கணக்கு வழியாக கோபி கிருஷ்ணனுக்கு வலது கரமாக இருந்த ஜான்சன் என்பவரின் வங்கி கணக்குக்குப் பணம் சென்றது தெரிந்தது. இதையடுத்து ஜான்சனை போலீஸார் பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, ஜான்சன் டிப்ளமோ இன்ஜினீயரிங் படித்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன் கோபி கிருஷ்ணனின் கால் சென்டரில் மாதம் 12,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அவர்தான் போலி கால் சென்டர்களின் பவர் பாயின்ட்டாக செயல்பட்டுவந்துள்ளார்.

இன்ஜினீயர் ஜான்சன்
இன்ஜினீயர் ஜான்சன்
``மெசேஜை எனக்கு அனுப்புங்க" - போலீஸை ஏமாற்றிய போலி Call Centre பெண்ணின் காந்தக் குரல்

ஜான்சனின் விசுவாசத்தைப் பார்த்த கோபிகிருஷ்ணனுக்கு அவரை ரொம்பவே பிடித்துள்ளது. அதனால்தான் ஜான்சனை தன்னோடு வைத்துக்கொண்டார். ஜான்சனுக்கு குறைந்த சம்பளம் என்றாலும் இன்சென்டிவ் என்ற பெயரில் கணக்கு பாராமல் பணத்தை அள்ளிக் கொடுத்துள்ளார் கோபிகிருஷ்ணன். அதனால் ஜான்சன், ராஜவாழ்க்கை வாழ்ந்துள்ளார். ஜான்சனின் வங்கிக் கணக்குக்கு லட்சக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனை நடந்ததை போலீஸார் உறுதிப்படுத்தினர். அதுதொடர்பாக ஜான்சனிடம் விசாரித்தபோது, சென்னையில் செயல்பட்ட போலி கால் சென்டர்களிலிருந்து என்னுடைய அக்கவுன்ட்களுக்கு பணம் அனுப்பி வைக்கப்படும். அந்தப் பணத்தை நான்தான் கோபிகிருஷ்ணனுக்குக் கொடுப்பேன். கோபிகிருஷ்ணனுக்கு என்ன தேவை என்றாலும் என்னிடம்தான் சொல்வார். உடனே அதைச் செய்து கொடுப்பதுதான் என்னுடைய முக்கிய வேலை என்று ஜான்சன், போலீஸாரிடம் கூறியதாகச் சொல்கிறார்கள்.

ஜான்சனிடம் விசாரித்தபோதுதான் கோபிகிருஷ்ணனின் சுயரூபம் போலீஸாருக்குத் தெரியவந்தது. ஜான்சன் அளித்த தகவலின்படி கோபிகிருஷ்ணனுக்கு போலீஸார் வலை விரித்தனர். அந்த வலையில் கோபிகிருஷ்ணனின் குடும்பத்தினர் சிக்கினர். போலீஸாரிடம் ஜான்சன், ``நான் தவறுசெய்துவிட்டேன். என்னைக் கடவுள்கூட மன்னிக்க மாட்டார். ஆனால் பாஸுக்கு மட்டும் உண்மையாக இருந்தேன்" என்று கூறியுள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார்.

போலீஸ் விசாரணையின்போது ஜான்சன், இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்துள்ளார். என்னை என்னுடைய பாஸ் கோபிகிருஷ்ணனுக்கு ரொம்பவே பிடிக்கும். அதனால் அவர் என்னிடம் தன்னுடை பெர்ஷனல் தகவல்களைக் கூறுவார். அவர் எங்கு சென்றாலும் என்னை அழைத்துச் செல்வார். அப்போது அவருக்கு நான்தான் பவுன்சஸராக இருப்பேன். கோபிகிருஷ்ணனின் குடும்ப வாழ்க்கையில் சில கசப்பான சம்பவங்கள் நடந்தன. அதனால் அவரின் வாழ்க்கை தடம் மாறியது. கைநிறைய பணம் இருந்ததால் இந்த உலகத்தில் உள்ள அனைத்து சந்தோஷத்தையும் அவர் அனுபவித்தார். கோபிகிருஷ்ணனைச் சந்திக்க நடிகை ஒருவர் அடிக்கடி வருவார். அந்த நடிகை வந்ததும் நான் அங்கிருந்து சென்றுவிடுவேன்" என கூறியுள்ளார். யார் அந்த நடிகை என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு