Published:Updated:

`அதிக பணத்துக்கு ஆசை கொண்டவர்கள்தான் டார்கெட்!' - நெல்லையில் சிக்கிய மோசடி நபர்கள்

கறுப்பு தாள்
கறுப்பு தாள்

பண ஆசை கொண்டவர்களை முதலில் கண்டறிந்து அவர்களின் ஆசையைத் தூண்டி நூதன முறையில் மோசடியில் ஈடுபடுவதே இந்தக் கும்பலின் டெக்னிக் என்கிறார்கள் போலீஸார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசதி படைத்தவர்களைக் குறிவைத்துச் செயல்படும் கும்பலொன்று, கள்ள நோட்டுகளைக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

பணம்
பணம்
Representational Image

அதனால் அந்தக் கும்பல் குறித்து விழிப்புடன் இருந்து மக்களைப் பாதுகாக்குமாறு மாவட்ட காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், நெல்லையில் உள்ள `திட்டமிட்ட குற்றங்களைக் கண்டறிந்து தடுக்கும் புலனாய்வுப் பிரிவு’ போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள்.

நெல்லை பேருந்து நிலையத்தில் இருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் கையில் பையுடன் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த ரகசியப் பிரிவு போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் அடைந்து இருவரையும் பெருமாள்புரம் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் விசாரித்தனர்.

காவல் நிலையம்
காவல் நிலையம்

அப்போது பிடிபட்ட இருவருக்கும் விருதுநகர் மாவட்டம் என்பது தெரியவந்தது. அவர்களுடைய குழுவில் மேலும் பலர் இருப்பதும், இந்தக் கும்பல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று வசதியானவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

அதிக பணத்துக்கு ஆசைப்படுபவர்களைத் தேடிப்பிடித்து அவர்களிடம் கறுப்புத் தாளையும் அதில் தடவுவதற்கான ரசாயனத்தையும் கொடுப்பார்கள். அந்த ரசாயனத்தைத் தடவியதும் கறுப்பு நோட்டானது ரூ.2000, ரூ.500 பணமாக மாறிவிடும் எனத் தெரிவிப்பார்கள். அதை நம்பி பலரிடம் பணத்தைப் பறித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

பணம்
பணம்
Representational Image

நெல்லை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், குமரி மாவட்டங்களிலும் இந்தக் கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. குமரி மாவட்டத்தில் ஒருவரிடம் 10 லட்சம் பணத்தை மோசடி செய்யச் சென்றபோது இருவர் சிக்கியுள்ளனர். இந்தக் கும்பலைச் சேர்த்து அனைவரையும் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதனால் பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

பின் செல்ல