Published:Updated:

`பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கனெக்‌ஷன்?’ - நெல்லை அருகே கள்ளநோட்டு புழக்கத்தில் விட்டவர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள்
பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள்

கள்ள நோட்டு வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள நபர் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை வழக்கில் இருந்து விடுதலையான அவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ள நோட்டு புழக்கம் அதிகமாக இருப்பதாகக் காவல்துறைக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாகப் போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் கள்ள நோட்டுப் புழக்கம் குறையாததுடன், அம்பாசமுத்திரம் பகுதியில் அதிகம் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. 

`புது' மெஷினில் கள்ள நோட்டு... தியேட்டரில் செலவு... - நாகர்கோவிலில் பிடிபட்ட கும்பல்!

தொடர்ந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது தெரியவந்தது. அதனால் போலீஸார் அதிரடியாக அவரது வீட்டில் சோதனையிட்டனர்.

போலீஸார் நடத்திய சோதனையில் மகேந்திரன் வீட்டில் இருந்து 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது வீட்டில் இருந்து 65,000 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் சிக்கின.

கைது செய்யப்பட்ட மகேந்திரன்
கைது செய்யப்பட்ட மகேந்திரன்

அந்தக் கள்ள நோட்டுகள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக அச்சிடப்பட்டிருந்தன. கூர்ந்து கவனித்தால் மட்டுமே அவை கள்ள நோட்டுகள் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அதனால் அந்த நோட்டுகள் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் நாடுகளில் அச்சிடப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட மகேந்திரன் பழைய குற்றவாளியாவார். அவர் மீது நர்ஸ் ஒருவரைக் கொலை செய்த வழக்கு இருந்தது. அந்த வழக்கில் இருந்து அவர் சமீபத்தில் விடுதலையானார். அவர் மீது பத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். 

Vikatan

மகேந்திரனிடம் நடத்திய விசாரணையில் எந்த முன்னேற்றமும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் உண்மையைத் தெரிவிக்க மறுப்பதாகவும் போலீஸார் கூறுகிறார்கள். ஆனால், இந்தக் கள்ள நோட்டுகளின் பின்னணியில் பெரிய கும்பல் இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிப்பதால் விசாரணை வளையம் விரிவடைந்திருக்கிறது. அதில் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் எனக் காவல்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு