Published:Updated:

`போலி டேட்டிங் இணையதளம்... ரூ.18 லட்சத்தைப் பறிகொடுத்த இளைஞர்'- அதிரடி காட்டிய சைபர் க்ரைம்!

போலி டேட்டிங் இணையதளம் மூலம் ரூ.18 லட்சம் இழந்ததாக இளைஞர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கொல்கத்தாவை சேர்ந்த கும்பலை ஆந்திரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Dating
Dating

ஆந்திராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் டேட்டிங் இணையதளத்தில் 18 லட்ச ரூபாயை இழந்ததாக விசாகப்பட்டினத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த இளைஞரின் புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் டேட்டிங் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவரது மொபைல் எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது.

 Love
Love

இளம்பெண் குறித்த விவரங்களைத் தெரிவித்த நபர் 4 லட்சம் ரூபாயை முதலில் டெபாசிட் செய்ய வேண்டும். இது டெபாசிட் தொகைதான், திருப்பித் தரப்படும். இந்தத் தொகையை செலுத்தினால்தான் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து அவரும் 4 லட்ச ரூபாய் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். தொடர்ந்து இதேபோல் பேசியே அந்த இளைஞரிடமிருந்து 18 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதையடுத்து விசாகப்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

சைபர் க்ரைம் போலீஸார் இந்த வழக்கை கையில் எடுத்தனர். அவர்களது விசாரணையில் கொல்கத்தாவில் இயங்கிக்கொண்டிருந்த கும்பல் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. அந்தக் கும்பல் இதற்காக பெண்களை பணியில் அமர்த்தி கால்சென்டர்கள் என்ற போர்வையில் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளிலும் இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதையடுத்து கொல்கத்தா மாநில காவல்துறையினர் உதவியுடன் இந்தக் கும்பலை ஆந்திர போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக 26 பேரை கைது செய்தனர். அதில் 23 பேர் பெண்கள். இந்தக் கும்பலிடமிருந்து 3 லேப்டாப், 50 மொபைல் போன்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும், அவர்கள் பயன்படுத்தி வந்த 48 வங்கிக் கணக்குகளை போலீஸார் முடக்கியுள்ளனர்.

Arrest
Arrest

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், “இந்த மோசடி கும்பல் இதற்காகப் பெண்களை பணியில் அமர்த்தியுள்ளனர். இந்தக் கும்பல் கொல்கத்தாவில் பல்வேறு இடங்களில் கிளைகளை வைத்துள்ளது. இவர்கள் உருவாக்கிய போலியான டேட்டிங் இணையதளத்தில் பதிவு செய்யும் ஆண்களிடம் இந்தக் கும்பலைச் சேர்ந்த ஆண்கள் முதலில் பேசுவார்கள். அதன் பின்னர் வாட்ஸ் அப் மூலம் பெண்கள் பேசுவார்கள். போலியான புகைப்படம் போலி ஐ.டி-க்கள் மூலம் பேசிவந்துள்ளனர். இந்த இணையத்தில் ஆயிரங்களிலிருந்து லட்சம் ரூபாய் வரை பேக்கேஜ்களை வைத்துள்ளனர். இவர்களின் வலையில் விழும் ஆண்களிடமிருந்து முடிந்த வரை பணம் பறிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளனர். யாருடனும் நேரடியான சந்திப்புகளை ஏற்படுத்தவில்லை. முடிந்த வரை லட்சங்களை கறந்துவிட்டு தொடர்பைத் துண்டித்து வந்துள்ளனர். விசாரணைக்குப் பின்னரே முழுத் தகவலும் தெரிய வரும்” எனத் தெரிவித்துள்ளனர்.