கொரோனா ஊரடங்கு நேரத்திலும் மதுரை பழங்காநத்தம் பகுதியில் பிஸியாக வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்த போலி டாக்டரைக் காவல்துறை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தெற்குவாசல் பகுதியில் வசித்து வரும் முரளி கண்ணன், பழங்காநத்தம் மருதுபாண்டி நகரில் ஓம் முருகா கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இப்பகுதியில் முக்கிய டாக்டராக அறியப்பட்டு வந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சமீபத்தில் அவரிடம் சென்ற சில நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்தது. அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவரைப் பற்றி விசாரித்ததில் அவர் எம்.பி.பி.எஸ் படிக்காதவர் என்பதும், போலியான சான்றிதழை வைத்திருப்பதும் தெரியவந்தது.

உடனே இதைப்பற்றி மதுரை கலெக்டரிடம் புகார் கூறப்பட்டது. உடனே மருத்துவ இணை இயக்குநர் சிவகுமார், எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் ஆகியோர் முரளி கண்ணன் மருத்துவமனையில் நேற்று விசாரணை நடத்தினார்கள். முதலில் தன்னை எம்.பி.பி.எஸ், எம்.டி. என்று கூறியவர் அதற்கான சான்றிதழைக் காட்டியுள்ளார். அதிலுள்ள பதிவு எண்ணை ஆய்வு செய்ததில் அது சேலத்தைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரின் சான்றிதழ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன் பின் விசாரணையில், 'தான் பத்தாம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும், மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்த அனுபவத்தில் சிகிச்சை அளிக்க முடிவெடுத்ததாகவும், பிரச்னை வந்தால் காட்டுவதற்குப் போலியான எம்.பி.பி.எஸ். சான்றிதழை தயார் செய்து வைத்திருந்ததாகவும்' கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து மருத்துவமனையை சீல் வைத்து, அவரைக் கைது செய்தனர். சமீப காலமாக கொரோனா வராமல் இருப்பதற்குப் பலபேருக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதனால் இப்பகுதியில் இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.