Published:Updated:

புதுக்கோட்டை: டி.எஸ்.பி பெயரில் போலி முகநூல் கணக்கு! - பணம் பறிக்க முயன்ற கும்பலுக்கு வலைவீச்சு

போலி முகநூல் கணக்கு
போலி முகநூல் கணக்கு

`எனது பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்தி போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயல்கின்றனர். அதை யாரும் நம்பி ஏமாற வேண்டாம்’ என்று தன்னுடைய முகநூல் கணக்கில் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.

புதுக்கோட்டை நகர் டி.எஸ்.பி-யாக இருப்பவர் செந்தில்குமார். இவர் ஏற்கெனவே முசிறி, பொன்னமராவதி பகுதிகளில் டி.எஸ்.பி-யாகப் பணிபுரிந்திருக்கிறார். செந்தில்குமார் என்ற பெயரில் முகநூலில் கணக்கு வைத்திருக்கும் இவர், முகநூலில் 900 பேரை நண்பர்களாகக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், டி.எஸ்.பி பெயரும், புகைப்படமும் கொண்ட ஒரு முகநூல் கணக்கிலிருந்து பலருக்கும் நண்பராக்கிக்கொள்வதற்கான அழைப்பு வந்திருக்கிறது.

அதை ஏற்றுக்கொண்ட பலருக்கும் அடுத்த சில நிமிடங்களிலேயே மெசெஞ்சரில் ஒரு மெசேஜ் வந்து விழுந்திருக்கிறது. அதில், `எனக்கு அவசரமாக ரூ. 30,000 தேவைப்படுகிறது’ எனவும், `பணத்தை உடனே 8260989683 என்ற எண்ணுடைய கூகுள் பே கணக்கில் செலுத்துங்கள்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.

டி.எஸ்.பி பெயரில் போலி முகநூல் கணக்கு
டி.எஸ்.பி பெயரில் போலி முகநூல் கணக்கு

இதைப் பார்த்த நண்பர்கள் சிலர் டி.எஸ்.பி-யை நேரடியாக போனில் தொடர்பு கொண்டு இது பற்றிக் கூறி விளக்கம் கேட்டிருக்கிறார்கள். அதிர்ச்சியடைந்த டி.எஸ்.பி., தான் அப்படி ஏதும் மெசேஜ் அனுப்பவில்லை என்று கூறியிருக்கிறார்.

அப்போதுதான், மர்ம நபர்கள் சிலர் டி.எஸ்.பி-யின் பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி போலியாக முகநூல் கணக்கு தொடங்கியிருப்பதும், பலரிடம் பணம் பறிக்க முயன்றிருப்பதும் தெரியவந்தது. உடனே டி.எஸ்.பி செந்தில்குமார், `எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயல்கின்றனர்.

அதை யாரும் நம்பி ஏமாற வேண்டாம்’ என்று தன்னுடைய முகநூல் கணக்கில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதோடு, இது பற்றி சைபர் க்ரைம் போலீஸாரிடமும் புகாரளித்திருக்கிறார். இதையடுத்து, உடனே அந்த போலி முகநூல் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. போலீஸார் விசாரணையில், ``ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்திருக்கிறது. இது குறித்து திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். போலீஸாரின் பெயரைவைத்து மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

செந்தில்குமார்
செந்தில்குமார்

இது பற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``போலீஸ் அதிகாரியின் கணக்கிலிருந்து பணம் கேட்டால், அவர்கள் மீதான நம்பிக்கையில் எந்தவிதக் கேள்வியுமின்றி உடனே பணத்தை அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்துத்தான் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் மூலம் நடைபெறும் குற்றங்கள், மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் நட்புகளை ஏற்பது, பணம் அனுப்புவது, புகைப்படம், வீடியோக்களை அனுப்புவதில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு