Published:Updated:

`அரசு துணைச் செயலர்; வேலை வாங்கித் தருவதாக மோசடி!’ - போலீஸில் சிக்கிய போலி அரசு அதிகாரி

போலி அதிகாரி நாவப்பன்
போலி அதிகாரி நாவப்பன் ( உ.பாண்டி )

பல்வேறு துறை அரசு அதிகாரிகளுக்கு நாவப்பன் கொடுத்த வேலைக்கான போலி நியமன கடிதங்களை உண்மையான கடிதம் போலவே இருப்பதும் தெரியவந்தது.

அரசு வேலை வாங்கித் தருவதாகத் தமிழகத்தில் பலரை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவர் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக அரசு துணைச் செயலாளர் பதவி வகிப்பதாகக் கூறிக்கொண்ட போலி அதிகாரியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடி செய்து சிக்கிக்கொண்ட போலி அதிகாரி நாவப்பன்
மோசடி செய்து சிக்கிக்கொண்ட போலி அதிகாரி நாவப்பன்
உ.பாண்டி

ராமநாதபுரம் புளிக்காரத்தெருவைச் சேர்ந்த டெய்ஸி என்பவர் தன் மருமகனுக்கு அரசுப் பணி தேடி வந்தார். இந்நிலையில் டெய்ஸிக்கு, ஜார்ஜ் பிலிப் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் தன் மருமகன் அரசுப் பணிக்கு முயல்வது குறித்து டெய்ஸி தெரிவித்துள்ளார். இதையடுத்து தன் நண்பர் ஒருவர் அரசு துணைச் செயலராக டி.என்.பி.எஸ்சி-யில் பதவி வகிப்பதாகவும், அவரிடம், பதவிக்கேற்ப பணம் கொடுத்தால் அரசுப் பணி கிடக்கும் வாய்ப்புள்ளது என ஜார்ஜ் பிலிப் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதையடுத்து டெய்ஸியின் மருமகன் மற்றும் உறவினர்கள் என 3 பேருக்கு அரசுப் பணி வாங்கித் தருவதற்காக பேரம் பேசி ரூ.15 லட்சத்தை டெய்ஸியிடம் இருந்து ஜார்ஜ் பிலிப் வாங்கியுள்ளார். பணத்தை வாங்கிய பின் அரசு வேலை வாங்கித் தராமல் ஜார்ஜ் பிலிப் தாமதித்து வந்துள்ளார். இது குறித்து டெய்ஸி கேட்டபோது, தான் வாங்கிய பணத்தை சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் (எ) நாவப்பனிடம் கொடுத்துவிட்டதாக அலட்சியமாகக் கூறியுள்ளார் ஜார்ஜ்.

போலி கடிதங்கள்
போலி கடிதங்கள்
உ.பாண்டி

இதனால் சந்தேகமடைந்த டெய்ஸி, இது குறித்து ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரிடம் புகார் அளித்தார். எஸ்.பி உத்தரவுப்படி, சென்னையைச் சேர்ந்த ஜார்ஜ் பிலிப், பிரகாஷ் (எ) நாவப்பன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்த விசாரணையில் அரசுப் பணிக்கு பலரிடம் தனது புரோக்கர்கள் மூலம் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட பிரகாஷ், டி.என்.பி.எஸ்.சி அரசு துணைச் செயலர் என்ற பெயரிலும், நாவப்பன் எரிசக்தி துறையில் அரசு துணை செயலர் என மற்றொரு பெயரிலும் தமிழக அரசு முத்திரையுடன் கூடிய லெட்டர் பேடு தயாரித்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும், பல்வேறு துறை அரசு அதிகாரிகளுக்கு நாவப்பன் கொடுத்த வேலைக்கான போலி நியமன கடிதங்களை உண்மையான கடிதம் போலவே இருப்பதும் தெரியவந்தது. சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் இது போல் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. மேலும், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்களுடன் நாவப்பன் நெருக்கமாக இருக்கும் போட்டோ ஆதாரங்கள் தனிப்படையினரிடம் சிக்கிய நிலையில் நாவப்பனை ராமநாதபுரம் போலீஸார் கைது செய்தனர்.

வருண்குமார் எஸ்.பி
வருண்குமார் எஸ்.பி
உ.பாண்டி

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கூறுகையில், ``அரசு வேலைக்கு பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த நபர் கொடுத்த புகாரின் கீழ் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினோம். விசாரணையில் ஏற்கெனவே இதுபோன்ற அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக நாவப்பனை சென்னை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்த நாவப்பன், இரண்டு மாதம் கழித்து மீண்டும் தனது ஏமாற்று வேலையில் ஈடுபட்ட நாவப்பனை புகாரின் அடிப்படையில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு