Published:Updated:

`நான் இன்ஸ்பெக்டர், நீங்கள் போலீஸ்'- சென்னைப் பெண் ரயில்வே ஊழியரைக் கடத்த ஸ்கெட்ச் போட்ட பெண்கள்

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த பெண்
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த பெண்

நான் இன்ஸ்பெக்டர், நீங்கள் போலீஸ் கான்ஸ்டபுள் எனப் பெண் ரயில்வே ஊழியரைக் கடத்த ஸ்கெட்ச் போட்ட 3 பெண்களை போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சென்னை வேளச்சேரி, வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் சுபாஷினி (42). மாம்பலம் ரயில் நிலையத்தில் ஊழியராகப் பணியாற்றுகிறார். சுபாஷினியை அழைத்துக்கொண்டு அவரின் கணவர் பைக்கில் கிண்டி ரயில் நிலையம் வந்தார். பிறகு கிண்டியிலிருந்து மின்சார ரயில் மூலம் மாம்பலத்துக்குச் செல்ல சுபாஷினி ரயில் நிலைய பிளாட்பாரத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது சுபாஷினியைப் பின்தொடர்ந்து வந்த 2 பெண்கள், `மேடம், உங்களை இன்ஸ்பெக்டர் அழைக்கிறார். நீங்கள் வாருங்கள்' என்று கூறினர்.

போலீஸாக நடித்து சிக்கிய வதனீ, தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி
போலீஸாக நடித்து சிக்கிய வதனீ, தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி

அதற்கு சுபாஷினி, `நீங்கள் யார்?' என்று கேட்டதோடு, `நான், எதற்கு இன்ஸ்பெக்டரைப் பார்க்க வர வேண்டும்?' என்று கேள்வி கேட்டுள்ளார். உடனே முகத்தை சால்வையால் மூடி மறைத்திருந்த அந்தப் பெண்கள், `திருட்டு வழக்கு தொடர்பாக உங்களிடம் விசாரிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளனர். திருட்டு வழக்காக.... என யோசித்த சுபாஷினி, உடனடியாக தன்னுடைய செல்போனிலிருந்து கணவருக்கு போன் செய்துள்ளார். உடனே அருகில் இருந்த இருவரும் சுபாஷினியின் போனைப் பறித்துள்ளனர். இதனால் சுபாஷினி, `திருடி... திருடி' என்று சத்தம் போட்டுள்ளார்.

சுபாஷினியின் சத்தம் கேட்டு கிண்டி ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். அதைப்பார்த்த இருவரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் பொதுமக்களிடம் இருவரும் சிக்கிக் கொண்டார். உடனடியாக கிண்டி காவல் நிலையத்தில் இருவரையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சந்துரு, சுபாஷினியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார். அதைத் தொடர்ந்து சுபாஷினியிடமிருந்து செல்போனைப் பறித்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

`நீ போலீஸ் என்றால் நாங்கள் யாரு?' - பெல்ட், வாக்கி டாக்கியோடு வசூல்செய்த போலி போலீஸ்

விசாரணையில் சுபாஷினியக் கடத்த வியாசர்பாடியைச் சேர்ந்த வதனீ என்பவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக கொளத்தூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி, ஆவடியைச் சேர்ந்த முத்துலட்சுமி ஆகியோர் வதனீக்கு உதவி செய்துள்ளனர். முத்துலட்சுமி, தமிழ்ச்செல்வி ஆகியோர் அளித்த தகவலின்படி வதனீயையும் போலீஸார் பிடித்தனர். மூன்று பெண்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,``சென்னை ராயபுரத்தில் உள்ள ரயில்வே ஊழியர் ஒருவருக்கும் வதனீக்கும் நட்பு உள்ளது. இந்தச் சமயத்தில் ராயபுரத்தைச் சேர்ந்த ஊழியருடன் சுபாஷினி பழகியுள்ளார். இது வதனீக்குப்பிடிக்கவில்லை. இதனால்தான் சுபாஷினியை எச்சரிக்க வதனீ திட்டமிட்டுள்ளார். இந்தக் கடத்தல் சம்பவத்தில் வதனீக்கு சிலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் யார் என்று வதனீயிடம் விசாரித்துவருகிறோம். ரயில்வே ஊழியர் சுபாஷினியைக் கடத்த முயன்ற வழக்கில் இன்ஸ்பெக்டராக நடித்த வதனீ, கான்ஸ்டபிளாக நடித்த தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி ஆகியோரைக் கைது செய்துள்ளோம். வதனீ குறித்த விவரங்களைச் சேகரித்துவருகிறோம்" என்றார்.

கைது செய்யப்பட்ட வதனீ, தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி
கைது செய்யப்பட்ட வதனீ, தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி

வதனீயிடம் போலீஸார் விசாரித்தபோது,``சுபாஷினியைக் கடத்தவே நான் இன்ஸ்பெக்டராக நடித்தேன். எனக்கு உதவி செய்த முத்துலட்சுமி, தமிழ்ச்செல்வியை போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்க போலீஸ் சீருடையை வாங்கிக் கொடுத்தேன்'' என்று மட்டும் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். அதன்பேரில் தொடர்ந்து மூன்று பேரிடமும் விசாரணை நடந்துவருகிறது. இந்த வழக்கில் இன்னும் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர்.

வதனீ, தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி ஆகியோரிடம் போலீஸ் சீருடை எப்படி கிடைத்தது என்று போலீஸார் விசாரித்தபோது நாடகத்தில் நடிக்க வாங்கியதாக அவர்கள் கூறியுள்ளனர். ஒரிஜினல் இன்ஸ்பெக்டரின் சீருடையில் தோள் பகுதியில் மூன்று ஸ்டார்கள் இருக்கும். ஆனால் வதனீ அணிந்த காக்கி உடையில் ஒரிஜினல் போலீஸார்போல எந்த அடையாளங்களும் இல்லை என்கின்றனர் போலீஸார். அதை வைத்தே இவர்கள் காமெடி போலீஸ் என்பது தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் ரயில்வே ஊழியர் சுபாஷினியைக் கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு