Published:Updated:

சென்னை: அலறும் வாக்கி டாக்கி; அதிகாரப் பேச்சு! - நிஐ போலீஸிடம் போலி எஸ்.ஐ சிக்கியது எப்படி?

போலி எஸ்.ஐ சிவா
News
போலி எஸ்.ஐ சிவா

சென்னை அடையாறு பகுதியிலுள்ள வாட்ச் கடைக்குச் சென்றவர், தன்னை போலீஸ் எஸ்.ஐ என அறிமுகப்படுத்தியிருக்கிறார். பின்னர் இரண்டு வாட்ச்களை வாங்கிய அவர், பணம் கொடுக்காமல் தப்பிச் சென்றபோது நிஜ போலீஸாரிடம் சிக்கிக்கொண்டார்.

சென்னை திருவான்மியூர் எல்.பி.சாலையில் வாட்ச் கடை ஒன்று உள்ளது. கடந்த 2-ம் தேதி இந்தக் கடைக்கு வந்தவர், தன்னை போலீஸ் எஸ்.ஐ எனக் கடை ஊழியர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டார். அப்போது வாக்கி டாக்கி சத்தம் போலீஸ் எஸ்.ஐ-யின் பேன்ட் பாக்கெட்டிலிருந்து கேட்டுக்கொண்டே இருந்தது. பின்னர் கடையிலிருந்த வாட்ச்களின் மாடல்களை போலீஸ் எஸ்.ஐ பார்த்துவிட்டு 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டு வாட்ச்களை வாங்கினார். பின்னர் அதற்குரிய பணத்தைச் செலுத்தச் சென்ற போலீஸ் எஸ்.ஐ., ``பர்சை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன். என்னுடைய வீடு பக்கத்தில்தான் இருக்கிறது. கடையிலிருந்து ஒருவரை என்னோடு அனுப்பி வையுங்கள், பணத்தைக் கொடுத்து அனுப்புகிறேன்’’ என்று போலீஸ் அதிகாரத்தில் கூறினார்.

போலீஸ்
போலீஸ்

போலீஸ் எஸ்.ஐ எனக் கூறியதால் அவர் சொல்வதைக் கடை ஊழியர்கள் நம்பினர். இதையடுத்து கடையிலிருந்து வெளியில் வந்த போலீஸ் எஸ்.ஐ, வாட்ச்களை பைக்கில் வைத்தார். அதன்பிறகு கடை ஊழியர் ஒருவரைத் தன்னுடைய பைக்கில் அழைத்துச் சென்றார். இந்திராநகர் அருகே சென்றபோது திடீரென கடை ஊழியரை பைக்கிலிருந்து கீழே இறங்கும்படி போலீஸ் எஸ்.ஐ கூறியிருக்கிறார். அதனால் வீடு வந்துவிட்டது என்று நம்பிய கடை ஊழியரும் கீழே இறங்கியிருக்கிறார். இந்தச் சமயத்தில் பைக்கில் போலீஸ் எஸ்.ஐ வேகமாகச் சென்றுவிட்டார். அதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர் நடந்த சம்பவத்தை கடை உரிமையாளரிடம் தெரிவித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பின்னர் இந்தச் சம்பவம் குறித்து கடை உரிமையாளர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பைக்கின் பதிவு நம்பர், சிசிடிவி-யில் பதிவான உருவம் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரித்தபோது போலீஸ் எஸ்.ஐ எனக் கூறி வாங்கிய வாட்ச்களுக்குப் பணம் கொடுக்காமல் ஏமாற்றியது சென்னை வடபழனி, பகவன்காலனியைச் சேர்ந்த சிவா (40) என்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சிசிடிவி பதிவு
சிசிடிவி பதிவு

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட சிவா மீது அசோக்நகர், வடபழனி, சங்கர்நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் பொருள்களை வாங்கக் கடைகளுக்குச் செல்வார். அங்கு தன்னை போலீஸ் எனக் கூறி பொருள்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிவந்திருக்கிறார். ஏற்கெனவே சிவகுமார், ஜோஸ்வா என்ற பெயரில் போலீஸ் எஸ்.ஐ சீருடையில் சென்று கடைக்கார்களை ஏமாற்றியிருக்கிறார். போலீஸ் என கடைக்காரர்கள் தன்னை நம்ப அவர் தன்னுடைய செல்போனில் வாக்கி டாக்கியின் சத்தத்தைப் பதிவு செய்துவைத்திருக்கிறார். கடைக்குச் செல்வதற்கு முன்பு அந்த ஆடியோவை அவர் ஆன் செய்துவிடுவார். அதனால் கடைக்காரர்களும் சிவாவை போலீஸ் என்றே நம்பிவந்திருக்கின்றனர். அவரிடமிருந்து வாட்ச்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து சிவாவிடம் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.