Published:Updated:

`கையில் வாக்கி டாக்கி, சப்-இன்ஸ்பெக்டர் சீருடை, வசூல் வேட்டை!' - பதறவைத்த போலி எஸ்.ஐ

எம்.திலீபன்

கையில் வாக்கி டாக்கியுடன் உலா வந்த டூப்ளிகேட் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், ஒரு லட்சத்து 60 ஆயிரம் வசூல் செய்துள்ளார். இந்தப் போலி எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது.

இன்ஸ்பெக்டர் சீருடையுடன் சசிகுமார்
இன்ஸ்பெக்டர் சீருடையுடன் சசிகுமார்

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்தவர், சசிகுமார். இவர், பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் காவலர்களின் நண்பனாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் வந்த சசிகுமார், அங்குள்ள பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அப்போது, போலீஸ் சீருடையில் சென்ற சசிகுமார், தான் ஒரு க்ரைம் சப்-இன்ஸ்பெக்டர் என்றும் குற்றவாளியைப் பிடிக்க வந்துள்ளதாகவும் தன்னை அறிமுகம்செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட போலி எஸ்ஐ
கைது செய்யப்பட்ட போலி எஸ்ஐ

கையில் வாக்கி டாக்கியுடன் சென்றதால், அப்பகுதி மக்களும் சப்-இன்ஸ்பெக்டர் என நம்பியுள்ளனர். அப்போது, தனது அண்ணன் சுங்கவரித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றிவருவதாக அந்தப் பகுதி மக்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, குறைந்த விலையில் வீட்டுக்குத் தேவையான டிவி, வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருள்களை வாங்கித் தருவதாகக் கூறி, மூன்று பேரிடம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பணம் வசூல் செய்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த சிலர், கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரைக் கைதுசெய்தனர். அவனிடமிருந்து காவல்துறையின் சீருடை, தொப்பி, வாக்கிடாக்கி உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல்செய்து விசாரித்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர் சிலர் நம்மிடம் பேசினார்கள். "ஒரு மாவட்டத்தில் போலீஸ் உடையைப் போட்டுக்கொண்டு மக்களிடம் எளிதாக ஒருவர் ஏமாற்றுகிறார்கள் என்றால், மாவட்டத்தில் போலீஸாரின் நிலைமை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

போலி எஸ்ஐ
போலி எஸ்ஐ

அதோடு, கீழப்பழுவூர் ஸ்டேஷனில் நான் க்ரைம் பிராஞ்ச் சப்- இன்ஸ்பெக்டர் எனச் சொல்லி, ஒரு சில போலீஸாரோடு வழக்கை விசாரிக்கச் சென்றிருக்கிறார். ஒரு போலீஸ், உடையை மாற்றிக்கொண்டு 1,60,000 ருபாய் பணத்தை ஏமாற்றுகிறார் என்றால், இதில் பல காவலர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்று சந்தேகம் எழுகிறது. இந்த வழக்கை சாதாரணமாகக் கையாளாமல் முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்றனர்.