Published:Updated:

``என்னால் மட்டும்தான் எல்லாம் முடியும்” பலரிடம் மோசடி செய்த போலிச் சாமியார் கைது!

கைதுசெய்யப்பட்ட முனீஸ்வரன்
கைதுசெய்யப்பட்ட முனீஸ்வரன்

தூத்துக்குடியில் குறி சொல்வதாகச் சொல்லி வீட்டை இடிக்கவைத்து பெண்ணிடம் தங்கத் தாலியும் பணமும் பறித்த போலிச் சாமியாரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். விசாரணையில், இதுபோல பலரிடம் பரிகாரம் என்ற பெயரில் பணம், நகையைப் பெற்று மோசடிசெய்தது தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவர், விளாத்திக்குளம்- நாகலாபுரம் சாலையில் ‘சக்தி வாராகி’ என்ற பெயரில் ஜோதிட நிலையம் நடத்திவருகிறார். காவி உடையணிந்து பலவித பூஜைகள் நடத்தி, வட்ட வடிவில் கோடுகள் போட்டு அதற்கு மத்தியில் பெரிய அண்டாவில் தண்ணீர்வைத்து அதில் அமர்ந்துகொண்டு தியானம் செய்வார். பொதுமக்கள் மத்தியில் தன்னை சக்தி வாய்ந்த ஒரு சாமியார்போலக் காண்பித்துக்கொண்டு ’என்னால் மட்டும்தான் எல்லாம் முடியும்’ எனச் சொல்லி ஜோதிடமும், குறி பார்க்கும் தொழிலும் செய்துவந்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட முனீஸ்வரன்
கைதுசெய்யப்பட்ட முனீஸ்வரன்

விளத்திகுளம் அருகிலுள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்த தங்கபேச்சியம்மாள் என்பவர், இவரது ஜோதிட நிலையத்துக்குச் சென்று குறி கேட்டிருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணிடம், ``இறந்துபோன உன் கணவரின் ஆன்மா சாந்தியடையவில்லை. உன்னுடைய வீட்டை இடித்து, நான் சொல்லும்படி மாற்றியமைத்தால்தான் அவரது ஆன்மா சாந்தியடையும். உனது குடும்பப் பிரச்னையும் தீரும்" என்று கூறியுள்ளார்.

``வீட்டை இடித்து மாற்றியமைக்க என்னிடம் பணம் இல்லை சாமி" என அந்தப் பெண் கூற, அந்தப் பெண்ணிடமிருந்து இரண்டரை சவரன் தங்கச் சங்கிலியைப் பெற்றுக்கொண்டு ரூ.30,000 கொடுத்து வீட்டை இடிக்கச் சொல்லியிருக்கிறார். அந்தப் பெண்ணும் அவர் கூறியவாறே வீட்டை இடித்திருக்கிறார். ஆனால், அதன் பின்னரும் குடும்பப் பிரச்னைகள் தீரவில்லை என அந்தப் பெண் மீண்டும் அந்த போலிச் சாமியாரிடம் சென்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர், `உனது தாலி, மோதிரம் ஆகியவற்றை உருக்கித் தங்கமாகவும், பணம் ரூ.3,500-ம் கொண்டு வா. அதில் நான் தாயத்து செய்து, அதை பூஜையில் வைத்துத் தருகிறேன். உனது பிரச்னைகள் தீர்ந்துவிடும்’ என்று கூறியுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட முனீஸ்வரன்
கைதுசெய்யப்பட்ட முனீஸ்வரன்
சென்னை: திருமணப் பரிகார பூஜை; தாலி செயினோடு தலைமறைவான போலிச் சாமியார்கள்!

அதை நம்பி அந்தப் பெண்ணும், ஏழு கிராம் தங்கத்தை உருக்கி அவரிடம் தங்கமாகவும், அவர் கேட்ட ரூ.3,500-யும் கொடுத்திருக்கிறார். ஆனால், இதுவரை அந்த போலிச் சாமியார் தாயத்தும் கொடுக்கவில்லை. ஏழு கிராம் தங்கம், பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அதைக் கேட்ட அந்தப் பெண்ணிடம், ``உனக்கு செய்வினை வைத்து, கை கால்களை விளங்காமல் செய்துவிடுவேன்" என்று கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தப் பெண் இது குறித்து விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலிச் சாமியார் முனீஸ்வரனை போலீஸார் கைதுசெய்தனர். மேலும் இது போன்று எத்தனை பேரை மோசடி செய்து ஏமாற்றியிருக்கிறார் எனவும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், ``கைதுசெய்யப்பட்டுள்ள போலிச் சாமியார் ஏற்கெனவே இது போன்ற பிரச்னையில் சிக்கியிருக்கிறார். விவரம் அறியாத பெண்களை ஜோதிடம் என்ற பெயரில் ஏமாற்றியிருக்கிறார்; பெண்களை வசியம் செய்து தருகிறேன் என்ற பெயரில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆயிரக்கணக்கான பணத்தைக் கறந்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட முனீஸ்வரன்
கைதுசெய்யப்பட்ட முனீஸ்வரன்

இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் பலரும் இதை வெளியே சொன்னால் தங்களுக்குத்தான் அசிங்கம் என நினைத்து புகார் கொடுக்க முன்வருவதில்லை. ஊர் மக்களிடம் தனது பெயர் சக்தி எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவரது உண்மையான பெயர் முனீஸ்வரன். இது போன்று போலிச் சாமியார்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் போலிச் சாமியார் சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாகப் புகார் கொடுக்க முன்வரலாம். புகார் கொடுத்தால் அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு