சமீபகாலமாகவே அரசு உயரதிகாரிகள், உயர் பொறுப்பிலுள்ள நபர்களின் படங்களை வாட்ஸ்அப்பில் வைத்து, அவர்களோடு பணிபுரியும் அலுவலர்களைத் தொடர்புகொண்டு, அவர்களிடம் பணம் பறிப்பதில் ஒரு கும்பல் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. அந்த வகையில்தான் தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிபுரியும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களைக் குறிவைத்து, அவர்கள் பெயரில் போலிக் கணக்குத் தொடங்கி, அலுவலகம் தொடர்புடைய அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப்பில் மேசேஜ் அனுப்பி பணப் பறிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த அலுவலர் சுதாரித்து, சம்பந்தப்பட்டவரிடம் தெரிவிக்கும் வரையிலும் கிடைக்கும் பணத்தை வாரிச் சுருட்டிக்கொள்கின்றனர்.

அந்தவகையில், தற்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியின் பெயரில் போலிக் கணக்கு தொடங்கிய மர்ம நபர்கள், ஆட்சியரின் விவசாயத்துறை நேரடி உதவியாளர் சர்மிளா தேவியை வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் தொடர்புகொண்டு, அமேசானிலிருந்து கிஃப்ட் கார்டு வந்திருக்கிறது. அதைக் குறிப்பிட்ட பணம் செலுத்தி வாங்கி அனுப்புமாறு கூறி, அதற்கான லிங்க்கையும் அனுப்பிவைத்திருக்கின்றனர். ஆட்சியர்தான் கேட்கிறார் என்று நினைத்த சர்மிளா, அந்த லிங்க்குக்குள் உள்ளே சென்றபோது, அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10,000 டெபிட் ஆகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதே போன்று அடுத்தடுத்த மெசேஜ்கள் இவருக்கு வந்திருக்கின்றன. மொத்தமாக 30 முறை, ரூ.3 லட்சம் வரையிலும் சர்மிளாவின் வங்கிக் கணக்கிலிருந்து சென்றிருக்கிறது. இதையடுத்து, சந்தேகமடைந்து, அலுவலகத்திலுள்ள சக பணியாளர்களிடம் சிலரிடம் கேட்டபோது, அவர்களுக்கும் இது போன்ற மெசேஜ்கள் வந்ததாகவும், இது உண்மை இல்லை, போலியாக கணக்கு தொடங்கி நம்மை ஏமாற்ற முயல்கின்றனர் என்று கூறியுள்ளனர். இதையடுத்து, சிவகங்கை சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகாரளித்தார். புகாரின்பேரில், வழக்கு பதிவுசெய்த போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் அந்த போலி வாட்ஸ்அப் கணக்கு பீகார் மாநிலத்திலிருந்து செயல்படுவது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து, இது குறித்து விசாரித்துவருகின்றனர்.

இது குறித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் கேட்டபோது,
"பிகார், மகராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் என வெளி மாநிலங்களைச் சேர்ந்த கும்பல், உயரதிகாரிகளைக் குறிவைத்து, அவர்கள்போலப் பேசினால், நிச்சயம் பணம் கிடைக்கும் என்ற கோணத்தில் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, கடந்த சில தினங்களில் புதுக்கோட்டை, தூத்துக்குடி, விழுப்புரம், திருப்பூர் எனப் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களின் பெயரில் போலிக் கணக்கு ஆரம்பித்து மோசடியை அரங்கேற்றிவருகின்றனர்.
குறிப்பாக, அரசு அலுவலக ஊழியர்களையே குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது. பொதுமக்கள் குறிப்பாக, அலுவலர்கள் தங்களுக்குத் தெரிந்த அதிகாரியின் புகைப்படுத்துடன் தெரியாத மொபைல் எண்ணிலிருந்து வரும் வாட்ஸ்அப் மெசேஜ்களையோ, ஃபேஸ்புக் மெசெஞ்சர் மெசேஜ்களையோ, மெயில்களையோ நம்பி பணமோ, கிஃப்ட் கார்டோ அனுப்ப வேண்டாம். தொடர்ந்து, அந்த நெட்வொர்க்கைப் பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது" என்றனர்.