Published:Updated:

`நீங்கள் சொல்லித்தான் என்கவுன்டர் நடந்ததே தெரியும்!'-போலீஸ் நடவடிக்கையால் கலங்கும் நால்வர் குடும்பம்

கேசவலு, சிவா, நவீன், முகமது பாஷா என்ற ஆரீப்
கேசவலு, சிவா, நவீன், முகமது பாஷா என்ற ஆரீப் ( twitter )

`குற்றவாளிகளுக்கு இப்படிப்பட்ட தண்டனைதான் கொடுக்க வேண்டும்' எனக் கூறி சைபராபாத் போலீஸார் மீது மலர்தூவி கொண்டாடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலத்தில் திஷா கொல்லப்பட்ட வழக்கில் கைதான நான்கு பேரும் இன்று அதிகாலை போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். திஷா கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நடித்துக் காட்டியபோது, நான்கு பேரும் தப்பி ஓட முயன்றதால் போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றுள்ளதாகக் கூறப்படுகிறது. நான்கு பேரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மக்களிடம் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

ஒருபுறம் குற்றவாளிகளுக்கு இப்படிப்பட்ட தண்டனைதான் கொடுக்க வேண்டும் எனக்கூறி சைபராபாத் போலீஸார் மலர்தூவி கொண்டாடி வருகின்றனர், மறுபுறம் என்கவுன்டர் ஒரு தீர்வாகாது என்றும் பேசப்பட்டு வருகிறது.

என்கவுன்டர் நடந்த இடம்
என்கவுன்டர் நடந்த இடம்

இதற்கிடையே, என்கவுன்டரில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து அவர்களின் குடும்பங்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை thequint ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நால்வரில் ஒருவரான சென்னகேசவலுக்கு 6 மாதம் முன்புதான் திருமணம் நடந்துள்ளது. அவரின் மனைவி இந்த என்கவுன்டர் தொடர்பாக பேசுகையில், ``நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன். எங்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம்கூட ஆகவில்லை. தயவுசெய்து என் கணவரை அழைத்துச் சென்றவர்களையும் கொல்லுங்கள்.

நான் வாழ்வேன் என்று நினைக்கவில்லை. அவரை அழைத்துச் சென்றபோது மீண்டும் அழைத்து வருவதாக அவர்கள் சொன்னார்கள். நான் நிச்சயமாக இறந்துவிடுவேன். என் கணவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது" எனக் கூறியுள்ளார். கணவரின் இறப்புச் செய்தி தெரிந்தவுடன் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

12 மணி முதல் விசாரணை; 6 மணிக்கு தப்பி ஓட்டம்! - எப்படி நடந்தது ஹைதராபாத் என்கவுன்டர்? #DishaCase

என்கவுன்டர் செய்யப்பட்ட நால்வரில் முக்கியமானவரான ஆரீஃப்பின் தந்தை, ``போலீஸார் அவரைக் கொன்றதாக சொல்கிறார்கள். அவர் ஒரு என்கவுன்டரில் கொல்லப்பட்டார் என்று சொல்கிறார்கள். இன்று காலைதான் எங்களுக்குத் தெரியவந்தது'' என தொலைபேசியில் அழுதுகொண்டே கூறியுள்ளார். என்கவுன்டர் சம்பவத்தை அறிந்த பிறகு ஆரீஃப்பின் குடும்பம் உடைந்துள்ளது என்றும் குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆரீஃப்பின் பக்கத்துவீட்டுக்காரர் இதுதொடர்பாக பேசுகையில், ``இது தவறு. அனைத்தும் திட்டமிடப்பட்டுள்ளன. அவர்கள் நான்கு பேரையும் காவல்துறை எப்படி கொலை செய்ய முடியும். இது ஒரு என்கவுன்டர் என்று நாங்கள் நம்பவில்லை. இது ஒரு திட்டமிடப்பட்ட படுகொலை என்றே நாங்கள் நினைக்கிறோம்" என்றார்.

சென்னகேசவலு மனைவி
சென்னகேசவலு மனைவி

சுட்டுக்கொல்லப்பட்ட மற்ற இருவரான சிவா, நவீன் இருவரும் உறவினர்கள். இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது ஊடகத்தினர் தெரிவிக்கும் முன்புவரை அவர்கள் குடும்பத்தினருக்கு யாருக்கும் தெரியவில்லை. இதுதொடர்பாக பேசிய சிவாவின் தந்தை, ``என்கவுன்டர் நடந்தது எங்களுக்குத் தெரியாது. நீங்கள் பேசிய பின்னரே, காவல்துறையினர் அவர்களை சுட்டுக் கொன்றதை நாங்கள் அறிந்தோம்.

போலீஸ் இப்போது செய்தது சரிதான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதுவரை, பல கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏன் போலீஸ் இத்தகைய நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோன்று குற்றத்தைச் செய்த மற்ற நபர்கள் மீது ஏன் போலீஸ் இதுபோன்ற நடவடிக்கையை எடுக்கவில்லை?" எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

`என்ன செய்யணுமோ செய்யுங்கள்!’- கமிஷனருக்கு கிரீன் சிக்னல் கொடுத்த சந்திரசேகர ராவ் #DishaCase
அடுத்த கட்டுரைக்கு