Published:Updated:

`கந்துவட்டிக் கொடுமை’ - நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டிக் கொடுமையால் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீக்குளிக்க முயன்ற அருள்தாஸ் குடும்பத்தினர்
தீக்குளிக்க முயன்ற அருள்தாஸ் குடும்பத்தினர்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகில் உள்ள காசிதர்மத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, சுப்புலெட்சுமி தம்பதியினர், மதிசரண்யா, அட்சயா பரணி ஆகிய 2 குழந்தைகளுடன் 2017, அக்டோபர் 23-ம் தேதி, மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில், திடீரென கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயைத் தன் மீதும் மனைவி, குழந்தைகள் மீதும் ஊற்றி தீ வைத்தனர். இதைக் கண்டு பதறிப்போன அருகில் இருந்தவர்கள், தீயை அணைத்தனர்.

குழந்தைகளுடன் மாரியம்மாள்
குழந்தைகளுடன் மாரியம்மாள்

இதில் படுகாயமடைந்த நான்கு பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கந்துவட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் காவல்துறையின் உதவியுடன் மிரட்டல் விடுத்ததாகவும், கந்துவட்டிக் கொடுமை குறித்து 6 முறை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் கூறினார் இசக்கிமுத்து.

இச்சம்பவத்துக்குப் பிறகு, நெல்லை ஆட்சியர் அலுவலகத்தின் 6 வாயில்களில் 2 வாயில்களைத் தவிர மற்ற வாயில்கள் நிரந்தரமாக மூட்பட்டன. ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வருபவர்கள் அனைவரும் போலீஸாரின் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக மற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் போலீஸாரின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இருப்பினும், பாதுகாப்பை மீறி, இதுபோன்று ஒன்றிரண்டு சம்பவம் நடந்து வருகின்றன.

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

இந்நிலையில், அதே நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மீண்டும் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலகருவூலத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ். இவரின் மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு இசக்கிராஜா, சூரியபிரகாஷ், தனலட்சுமி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனைவி, குழந்தைகளுடன் வந்த அருள்தாஸ் பையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயைத் தானும் ஊற்றிக்கொண்டு, மனைவி, குழந்தைகள் மீதும் ஊற்றினார். இதைப் பார்த்து பதறிய போலீஸார் உடனே அவர்கள் மீது தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றினர். அருள்தாஸ் மண்ணெண்ணெயைக் குடித்ததால் ஆம்புலன்ஸில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விசாரணையில் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து அருள்தாஸ் கூறுகையில், “எங்க ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் 5 வருஷத்துக்கு முன்னால, எனக்குச் சொந்தமான காலி மனைப் பத்திரத்தை அடமானமா வச்சு ரூ 50,000 கடன் வாங்கினேன்.

குழந்தைகளுடன் மாரியம்மாள்
குழந்தைகளுடன் மாரியம்மாள்

இதற்கு வட்டியாக மாதந்தோறும் ரூ.5,000 கொடுத்துட்டு வந்தேன். இதுவரைக்கும் ரூ.2,40,000 வரை வட்டி பணம் கொடுத்திருக்கேன். கடந்த ஆறு மாசமா தொழில் சரியாக இல்லாததால் வட்டி கட்ட முடியலை. இந்த நிலைமையில, வாங்கிய கடன் 50,000-மும் அதோடு வட்டி, ஒரு லட்சமும் கட்ட வேண்டும் எனச் சொல்லி அடிக்கடி தொந்தரவு செய்த கிருஷ்ணன், இன்று காலையில் வீட்டுக்கு வந்து என்னைக் கட்டையால் அடித்து துன்புறுத்தினார்.

பணத்தைக் கொடுக்கலேன்னா, ’உன்னைக் குடும்பத்தோட கொலை செய்திடுவேன்’னு கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால நானும் மனைவியும் ரொம்ப மனசு உடைஞ்சுட்டோம். என்ன செய்யுறதுன்னு தெரியலை. அதனாலதான், மனைவி, குழந்தைகளுடன் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன்” என்றார். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் விதமாகத் தொடங்கப்பட்ட சிறப்புப் பிரிவு இருந்தும் இது போன்ற சம்பவங்கள் தொடர்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீக்குளிக்க முயன்ற அருள்தாஸ் குடும்பத்தினர்
தீக்குளிக்க முயன்ற அருள்தாஸ் குடும்பத்தினர்

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையில் பேசியபோது, ``இந்தச் சம்பவம் நடைபெற்றபோது மாவட்ட ஆட்சியர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக்காகத் தூத்துக்குடி சென்றிருந்தார். இந்த விஷயம் அவரது கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். அவர் குறிப்பிட்ட குடும்பத்தை சந்தித்து விசாரணை நடத்துவார். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் அறிவித்திருந்தார். ஆனால், அதையும் தாண்டி ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் தற்கொலை முயற்சி தொடர்கதையாகி வருகிறது. குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தன் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.