Published:Updated:

கத்தி, கயிறு, சிதறிக் கிடந்த பொருள்கள்! - 3 உயிர்களுக்கு நியாயம் கேட்கும் குடும்பத்தினர்

ஹரீஷ் ம
பா.பிரசன்ன வெங்கடேஷ்

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே தாய், 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் குடும்பத்தினர் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

Crime Scene
Crime Scene

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே பாலையூர் சரகத்திற்கு உட்பட்ட வடமட்டம், ஜனைமடத் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஹாரிப். இவர் துபாயில் பொறியாளராகப் பணிபுரிந்துவருகிறார். இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிலோபர் பர்வீன் என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இத்தம்பதிக்கு அப்ரினா (4), அப்ரா (2) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் பணி புரிவதால், நிலோபர் பர்வீன் தனது மாமியார், இரண்டு குழந்தைகளுடன் வடமட்டத்தில் வசித்துவந்தார். இந்நிலையில், தனக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவதால், மருத்துவமனையில் பரிசோதித்த நிலோபர் பர்வீன் தனக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

Crime scene
Crime scene

நோயின் தாக்கம் அதிகமானதால், மனமுடைந்த பர்வீன் தனது இரண்டு குழந்தைகளை அழைத்து வீட்டின் அறைக்குள் சென்று தனது இரு குழந்தைகளுக்கும் விஷத்தைக் கொடுத்து கொன்றுவிட்டு தானும் விஷம் அருந்தி மயக்கமடைந்தார். நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அவரது மாமியார், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்திருக்கிறார். அப்போது, பர்வீனும், இரண்டு குழந்தைகளும் இறந்தநிலையில் சடலமாகக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பர்வீனின் மாமியார் பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து போலீஸார் உடல்களைக் கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நிலோபர் பர்வீனின் பெற்றோர்களுக்கு, தகவல் கொடுத்ததை அடுத்து குடும்பத்தினர் விரைந்து வந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நிலோபர் பர்வீனின் பெற்றோர்கள், சகோதரர்கள் கூறுகையில், ``தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் கிடைத்த உடன் இங்கு வந்து பார்த்தோம்.

 கத்தி, கயிறு, சிதறிக் கிடந்த பொருள்கள்! - 3 உயிர்களுக்கு  நியாயம் கேட்கும் குடும்பத்தினர்

சந்தேகத்தின் அடிப்படையில் கதவை உடைத்து பார்த்தபோது நிலோபர் பர்வீன் விஷம் அருந்தி இறந்து கிடந்ததாகச் சொல்லப்படும் அறைக்குச் சென்றோம். அங்கு விரல்கள், உதடு, கண் எல்லாம் நீல நிறத்தில் மாறி சடலமாகக் கிடந்தார். நிலோபர் பர்வீனின் கால்கள் கயிறு மூலம் கட்டப்பட்டு பின் அவிழ்க்கப்பட்ட அடையாளம் தெரிந்தது. விஷம் அருந்தியதற்கு எந்த ஒரு தடையமும் தென்படவில்லை.

விஷ பாட்டிலோ, ஊசியோ, அதற்கான நாற்றமோ ஏதும் இல்லை. அறையில் கத்தி, கயிறு உள்ளிட்ட பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், கதவை உடைத்து பார்த்தவர்கள் சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்காமல், உறவினர்களுக்கு மட்டுமே தகவல் கொடுத்துள்ளனர்.

Hospital
Hospital

நிலோபர் பர்வீன் தனக்கு உடல் நலம் சரி இல்லை என்றும், ரத்தப் புற்றுநோய் இருப்பதாகவும் இதுவரை எங்களிடம் எதுவும் சொன்னதில்லை. அனைத்தையும் பார்க்கும் போது எங்கள் பெண்ணின் சாவில் மர்மம் இருக்கிறது. எது உண்மை, எது பொய் என்று தெரியாத குழப்பநிலையில் தவித்து வருகிறோம்'' என்றனர். மூன்று உயிர்களுக்கு நீதி கிடைக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தனர். நிலோபர் பர்வீனுக்கு திருமணமாகி ஐந்து வருடங்களே ஆவதால், அவரின் சாவில் மர்மம் இருக்குமோ என்ற அடிப்படையில் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.