Published:Updated:

மதுரை: கடன் சுமை... 3 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை! - அதிர்ச்சிச் சம்பவம்

சரவணன்- ஸ்ரீநிதி
சரவணன்- ஸ்ரீநிதி

இளம் தம்பதியர் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த மரணத்தில் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்று காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள்.

கடன் பிரச்னையால் மூன்று குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரவணன்
சரவணன்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பஜாரில் நகைப்பட்டறை வைத்து தொழில் செய்துவருகிறார் சரவணன். இவர் மனைவி ஸ்ரீநிதி. இந்தத் தம்பதியருக்கு மகாலட்சுமி, அபிராமி, அமுதன் என மூன்று குழந்தைகள்.

நேற்று காலை சரவணன் வீட்டு வாசல் திறக்கப்பட்டு தண்ணீர் தெளித்து கோலமிட்டுள்ளனர். பின்னர் அவர் மகள் பக்கத்திலிருக்கும் கடைக்கு வந்து பால் பாக்கெட் வாங்கிச் சென்றிருக்கிறார். அதன் பிறகு 11 மணி வரை வீடு பூட்டப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நீண்டநேரம் வீடு திறக்கப்படாமல் இருந்ததால், அருகில் வசிப்பவர்கள் சந்தேகமடைந்து கதவைத் தட்டியுள்ளனர். திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

சரவணன்- ஸ்ரீநிதி
சரவணன்- ஸ்ரீநிதி

அங்கே அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரவணன், அவர் மனைவி ஸ்ரீநிதி, மகள்கள் மகாலட்சுமி, அபிராமி, மகன் அமுதன் ஐந்து பேரும் இறந்தநிலையில் கிடந்தனர். உடனே உறவினர்களுக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

உசிலம்பட்டி காவல்துறையினர் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தியதில் சரவணன், நகை செய்யப் பயன்படுத்தும் ரசாயனத்தைக் குடித்து மரணமடைந்தது தெரியவந்தது. சரவணன் எழுதிவைத்திருந்த கடிதத்தில், 'எங்கள் மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. குடும்பத்தினர் என்னைக் கடனாளியாக்கிவிட்டனர்' என்று எழுதியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

தற்கொலை
தற்கொலை

இது குறித்து நாம் விசாரித்தபோது, `உசிலம்பட்டியில் தந்தை நடத்திய நகைப்பட்டறையைத்தான் சரவணன் நடத்திவந்திருக்கிறார். தொழிலுக்காகப் பலரிடமும் வட்டிக்குப் பணம் வாங்கியிருக்கிறார். கடந்த ஆண்டு முதல் கொரோனா ஊரடங்கால் தொழில் பாதிப்படைந்திருக்கிறது. இதனால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட ரொம்ப சிரமப்பட்டுள்ளார்.

தந்தை அய்யாவு பெயரில் கோடிக்கணக்கில் சொத்துகள் இருந்தும், அவற்றை விற்பனை செய்ய முடியாத வகையில் உயில் எழுதிவைத்துவிட்டு அவர் மரணமடைந்திருக்கிறார்.

இதனால், கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் அதன் மூலம் கடனை அடைக்க முடியவில்லையே என்று மன அழுத்தத்துக்கு சரவணன் ஆளாகியுள்ளார். அது மட்டுமல்லாமல் குடும்பத்திலும் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

சரவணன்- ஸ்ரீநிதி
சரவணன்- ஸ்ரீநிதி

இந்தநிலையில்தான் கடன் பிரச்னை நெருக்க, நேற்று காலை மனைவி, குழந்தைகளுக்கு விஷத்தைக் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்’ என்று சொல்லப்பட்டது.

இளம் தம்பதியர் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த மரணத்தில் வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பதை காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு