Election bannerElection banner
Published:Updated:

தூத்துக்குடி: `மித்ரா மன்னித்து விடு’ ; பேத்திக்காக உருகிய தாத்தா! - கலங்கவைத்த விவசாயியின் தற்கொலை

விவசாயி தற்கொலை
விவசாயி தற்கொலை

தூத்துக்குடியில் 5 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த உளுந்து, மக்காச்சோளப் பயிர்கள் பூச்சித்தாக்குதலால் பாதிக்கப்பட்டதால் மன வேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் விவசாயி நாராயணசாமி.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவருக்கு மகாலெட்சுமி என்ற மனைவியும், அபிராமி என்ற மகளும் இருக்கிறார்கள். அபிராமிக்கு திருமணமாகி கோவில்பட்டியில் வசித்துவருகிறார். நாராயணசாமியும் மகாலெட்சுமியும் தன் மகள் அபிராமி வீட்டில் வசித்துவருகிறார்கள். இவர், இந்த ஆண்டு தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் முதலில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். போதிய மழை இல்லாததால், மக்காசோளத்தை அழித்துவிட்டு உளுந்து பயிரிட்டிருக்கிறார்.

தற்கொலை செய்துகொண்ட நாராயணசாமி
தற்கொலை செய்துகொண்ட நாராயணசாமி

உளுந்துச்செடியில் மஞ்சள் தேமல்நோய் பாதிக்கப்பட்டதால், அதை அழித்து மீண்டும் மக்காச்சோளம் பயிரிட்டிருக்கிறார். ஆனால், மக்காச்சோளத்திலும் அதிக அளவில் படைப்புழுக்கள் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தநிலையில், கடந்த நில நாள்களாகவே நாராயணசாமி, மன வேதனையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், அவரது விவசாய நிலத்தின் அருகிலுள்ள வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி, தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். தற்கொலைக்கு முன்பாக அங்குள்ள சுவரில், கரித்துண்டால், `மித்ரா என்னை மன்னித்துவிடு’ என்று எழுதிவைத்திருக்கிறார்.

``நாராயணசாமி, விருதுநகர் மாவட்டம், ராஜபாளைத்துல இருக்குற தனியார் மில்லுல வேலை பார்த்துட்டிருந்தார். அங்க வேலை பார்த்தாலும், விவசாயத்தையும் பார்த்துட்டிருந்தார். ஓய்வுக்குப் பிறகு முழு நேரமா விவசாயத்துல இறங்கிட்டார். இந்தப் பகுதி முழுசுமே மானாவாரி விவசாயம்தான். மழை பெய்ஞ்சாத்தான் பசுமையைப் பார்க்க முடியும். இந்த வருஷம் ஆரம்பத்துல மழை சரியாப் பெய்யலை. அதனால, மக்காச்சோளம் சரியா வளரலை. அதனால, பெரும்பாலான விவசாயிங்க, மக்காசோளத்தை அழிச்சுட்டு உளுந்து போட்டங்க.

சுவரில் பேத்திக்கு மன்னிப்பு எழுதிய நாராயணசாமி
சுவரில் பேத்திக்கு மன்னிப்பு எழுதிய நாராயணசாமி

நாராயணசாமியும் உளுந்து போட்டார். அடுத்தடுத்து பெய்ஞ்ச மழையால் உளுந்துல மஞ்ச தேமல்நோய் பரவலாப் பரவிடுச்சு. எந்த மருந்துக்கும் கட்டுப்படலை. அதுனால, சில விவசாயிங்க திரும்பவும் மக்காச்சோளம் போட்டாங்க. ஆனா, போன வருசம் மாதிரியே இந்த வருசமும் மக்காச்சோளத்துல படைப்புழுத் தாக்கி ஒண்ணும் இல்லாமப் போயிடுச்சு.

உழவு, விதை, விதைப்பு, களையெடுப்பு, உரம், பூச்சிமருந்துனு கணக்கு பார்க்காம கடன் வாங்கிச் செலவழிச்சோம். ஏதாவது ஒரு வகையில பணம் கிடைச்சுடும். வாங்குன கடனுக்கு வட்டியாவது கட்டிப்புடலாம்னுதான் நினைச்சோம். ஆனா, ஒண்ணுத்துக்கும் வழியில்லாமப் போச்சு. எல்லா விவசாயிங்களும் புலம்பிக்கிட்டுத்தான் இருக்கோம். இருந்தாலும், ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் சொல்லி மனசைத் தேத்திக்கிறோம். நாராயணசாமியும் அப்படித்தான் புலம்பினார்.

பேத்தியுடன் நாராயணசாமி
பேத்தியுடன் நாராயணசாமி

ஆனா, அவரால நஷ்டத்தை தாங்கிக்க முடியலை. தன்னோட ரெண்டு வயசுப் பேத்தி மித்ரா மேல அதிகமான பாசம்வெச்சிருந்தார். அதனால தற்கொலைக்கு முன்னால சுவத்துல கரித்துண்டால `மித்ரா மன்னித்துவிடு’ன்னு எழுதிவெச்சிருக்கார். அரசு தரும் காப்பீட்டுத் தொகை எந்த விதத்திலும் கட்டுபடியாகாது. அரசு, கூடுதலாக நிவாரணம் தரணும்” என்றனர் அந்தப் பகுதி விவசாயிகள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு