திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள ஆலங்காயம் வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சோழன் என்கிற ராமமூர்த்தி, வயது 62. விவசாயியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவருக்கும் இடையே அருகேயுள்ள நன்னேரி பகுதியிலிருக்கும் 3.6 ஏக்கர் நிலம் தொடர்பாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பகை’ இருந்துவந்தது. இது தொடர்பாக, நீதிமன்றத்தையும் அணுகியிருக்கிறார்கள். இந்த வழக்கில், சமீபத்தில் ராமமூர்த்திக்கு சாதகமாகத் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால், எதிர்த்தரப்பினர் மேலும் கோபமடைந்தனர். கடந்த 9-ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, ராமமூர்த்தியை அவர்கள் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள்.

இது தொடர்பான வீடியோ காட்சிகளுடன், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எதிர்த்தரப்பைச் சேர்ந்த வெங்கடாசலம் உட்பட ஐந்து நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆலங்காயம் காவல் நிலையத்தில் ராமமூர்த்தி புகார் மனு ஒன்றையும் கொடுத்திருந்தார். இதனால், கோபத்தின் உச்சிக்கே சென்ற எதிர்த்தரப்பைச் சேர்ந்த கும்பல், நேற்றைய தினம் விவசாயி ராமமூர்த்தியைக் கொடூரமாக வெட்டிச் சாய்த்திருக்கிறது. முகம், தலை, கழுத்து, காது, கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி கால்நூற்றாண்டு வஞ்சத்தை தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். பின்னர் இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக, கொலையாளிகளில் ஒருவரான மகேந்திரன் என்பவர், தன்னுடைய 17 வயது மகனை மட்டும் திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் சரணடையச் செய்திருக்கிறார்.
‘சிறார்’ என்பதால் வெகு சீக்கரம் கொலை வழக்கிலிருந்து தப்பித்துவிடலாம்; தண்டனையும் குறைவு எனத் திட்டம் தீட்டியிருக்கிறது அந்தக் கும்பல். அதன்படி, அந்த 17 வயது சிறுவன், ரத்தக்கறை படிந்த கத்தியுடன் திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்தில் சரணடைந்தான். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், ராமமூர்த்தியின் உடலை மீட்க முயன்றபோது, அங்கு திரண்ட ராமமூர்த்தியின் உறவினர்கள் திடீரென எதிர்ப்பு காட்டினர். குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் எனக் கோபத்தில் கொந்தளித்தனர். போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே சடலத்தை ஒப்படைக்க உறவினர்கள் முன்வந்தனர்.

இதற்கிடையே, 17 வயது சிறுவனையும், அவனுடைய தந்தை மகேந்திரனையும் கைதுசெய்த போலீஸார், கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக ராமமூர்த்தி கொடுத்திருந்த புகார் மனுவின் அடிப்படையில், முக்கியல் குற்றவாளிகளாகக் கருதப்படக்கூடிய வெங்கடாசலம், அவரின் மகன்கள் முரளி, மூர்த்தி, பாரி, ஏற்கெனவே கைதுசெய்யப்பட்ட மகேந்திரனின் அண்ணன் லோகநாதன், பிரபு ஆகிய ஆறு பேர்மீதும் நான்கு பிரிவுகளின்கீழ் ஆலங்காயம் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். இவர்களில் 8-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பாரி, தி.மு.க பிரமுகர். இவரின் மனைவி சங்கீதா என்பவர்தான் ஆலங்காயம் ஒன்றியக்குழுத் தலைவராக இருக்கிறார். இதற்கிடையே, இன்றைய தினம் பாரியின் சகோதரர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இந்த வழக்கு தொடர்பாக போலீஸாரும் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.