Published:Updated:

`3 விவகாரங்கள்; ஸ்கெட்ச் போட்ட கும்பல்!’ -ஆற்காடு விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்

விவசாயி ராஜேந்திரன்
விவசாயி ராஜேந்திரன்

ஆற்காடு அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை அடுத்த கலவைப் பரிக்கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (45), விவசாயி. இவருக்கு வாசுகி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக தனது நிலத்துக்கு பைக்கில் சென்றார் ராஜேந்திரன். ஆள்நடமாட்டம் இல்லாத வழித்தடத்தில் மறைந்திருந்த மர்ம நபர்கள் பைக்கை மறித்து ராஜேந்திரனை கொடூரமாகத் தாக்கினர்.

ராஜேந்திரனின் சடலம்
ராஜேந்திரனின் சடலம்

நிலை குலைந்து விழுந்த அவரின் தலையில் கற்களால் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பியது. பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். கொலை குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக கலவை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் சம்பவப் பகுதிக்கு விரைந்துவந்து உடலைப் பார்வையிட்டனர். மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகள் சென்ற வழித்தடத்தையும் கண்டறிந்தனர்.

பின்னர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனின் குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

விசாரணை மேற்கொண்ட போலீஸார்
விசாரணை மேற்கொண்ட போலீஸார்

ராஜேந்திரனின் விவசாய நிலத்தில் வரப்பு தொடர்பான பிரச்னையும் இருந்துள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு காதல் தகராறில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த செய்யாறுப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ராஜேந்திரன் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில், ஏலச்சீட்டு தொடர்பான பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. இந்த 3 விவகாரங்களில் தொடர்புடையவர்களால் திட்டமிடப்பட்டு ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டாரா? என்கிற கோணத்தில் அடுத்த கட்டத்துக்கு விசாரணை நகர்ந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு