Published:Updated:

மனைவியின் அந்தரங்க வீடியோ; நண்பர்களுக்கு ஷேரிங்... இன்ஜினீயர் மீது புகார்! - கதறும் ஃபேஷன் டிசைனர்

பாலியல் வழக்கு
பாலியல் வழக்கு

சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணியாற்றும் மதன் மீது அவரின் மனைவி பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டு புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்தவர் சுவேதா (பெயர் மாற்றம்). இவர் ஃபேஷன் டிசைனிங் படித்திருக்கிறார். படிக்கும்போது, சுவேதாவும் ஆவடியில் இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்த மதனும் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாகியிருக்கின்றனர். இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் 2018-ம் ஆண்டு, மார்ச் 4-ம் தேதி திருமணம் செய்திருக்கிறார்கள். இந்தத் தம்பதியருக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சுவேதா, சில தினங்களுக்கு முன் அதிக மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

சுவேதா, மதன்
சுவேதா, மதன்

அதற்கு முன் நான்கு பக்கங்களுக்கு தற்கொலைக்கான காரணத்தைக் கடிதமாக எழுதிவைத்திருக்கிறார். மயங்கிக்கிடந்த சுவேதாவை மீட்ட அவரின் அம்மா, குரோம்பேட்டை அரசு மருத்துவனையில் சேர்த்தார். சிகிச்சைக்குப் பிறகு சுவேதா நலமாக இருக்கிறார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மடிப்பாக்கம் போலீஸார் மதன், அவரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

சுவேதா எழுதிய கடிதத்தில், ``என்னுடைய கணவர், அவரின் குடும்பத்தினரால் மனதளவிலும் உடலளவிலும் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நானும் எனது கணவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். திருமணத்துக்கு முன்பு என் கணவருக்குச் சில பெண்களுடன் நட்பு இருந்திருக்கிறது. அந்தத் தகவல் அவரின் செல்போனை நான் பார்த்தபோதுதான் எனக்குத் தெரிந்தது. மேலும் என் கணவரின் செல்போனில் சில பெண்களின் நிர்வாண போட்டோஸ், வீடியோஸ் இருந்தன. அது குறித்து என் கணவரிடம் கேட்டபோது தன்னை மன்னித்துவிடும்படி கூறினார். அவரின் குடும்பத்தினரும் என்னைச் சமாதானப்படுத்தி, அவருடன் வாழவைத்தனர். குழந்தைக்காக நான் அவரோடு வாழ்ந்துவந்தேன். திருமணமானதும் என் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணையாக சோபா, கட்டில், சில்வர் பாத்திரங்களைக் கேட்டனர். அந்தப் பிரச்னை முடிந்த பிறகு என் கணவரால் எனக்கு வேறு ஒரு சிக்கல் ஏற்பட்டது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational

என்னையும் என் கணவர் நிர்வாணமாக வீடியோ, புகைப்படங்களை எடுத்தார். அவற்றை அவரின் நண்பர்களுக்கு என்னுடைய செல்போனிலிருந்தே அனுப்பிவைத்து என்னைத் தவறான பெண் என்பதுபோல சித்திரித்திருக்கிறார். என்னுடைய தனிப்பட்ட போட்டோ, வீடியோ. ஈரோட்டிலிருக்கும் என் கணவரின் நண்பரான ஜூவல்லரி ஷாப் ஓனர் ஒருவரின் செல்போனுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதைவைத்து என்னை மிரட்டிய ஜூவல்லரி ஓனர், சென்னைக்கு வந்து ஹோட்டலில் தங்கினார். அவரை பிசினஸ் விஷ்யமாகச் சந்திக்க என்னை என் கணவர் அந்த ஹோட்டலுக்கு அனுப்பிவைத்தார். அப்போதுதான் என்னுடைய தனிப்பட்ட போட்டோ, வீடியோக்கள் என் கணவரின் நண்பர்களிடம் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் என்னுடைய குழந்தையையும் என்னைவிட்டுப் பிரித்து கணவர் குடும்பத்தினர் சென்றுவிட்டனர். அதனால்தான் மனமுடைந்த நான் இந்தத் தற்கொலை முடிவை எடுக்கிறேன். எனவே, சம்பந்தப்பட்ட கணவர், அவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுவேதா தற்கொலை செய்வதற்கு முன், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தையை மீட்டுத் தரும்படி புகாரளித்திருக்கிறார். அதன்பேரில் போலீஸார் விசாரித்திருக்கின்றனர். அப்போது சுவேதாவின் நிர்வாண வீடியோக்களை காண்பித்த அவரின் கணவர், இப்படி என்னுடைய ஃப்ரெண்ட்ஸ்களுக்கெல்லாம் அனுப்பினால் எப்படி அவளுடன் குடும்பம் நடத்த முடியும்... அதைப்போல என் மகனுக்கும் அவளால் ஆபத்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்ட போலீஸார் குழந்தைகள் நல ஆணையத்திடம் முறையிட சுவேதாவைக் கூறியிருக்கிறார்கள். குழந்தைகள் நல ஆணையத்திடமும் சுவேதாவின் கணவர் தரப்பு வீடியோக்களைக் காண்பித்திருக்கின்றனர். அதனால், வாரத்தில் ஒரு நாள் சுவேதா, தன்னுடைய குழந்தையைப் பார்க்கலாம் என அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு - `நான் கடவுள்' சிவசங்கரன், சிவசங்கர் பாபாவாக மாறியது எப்படி?
வழக்கறிஞர் மலர்விழி
வழக்கறிஞர் மலர்விழி

செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுவேதா அளித்த புகாருக்குப் பிறகும் குழந்தையுடன் வாழ முடியாததால் மனமுடைந்த அவர், தற்கொலைக்கு முயன்றதாக அவரின் வழக்கறிஞர் மலர்விழி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ``சுவேதாவுக்கு நடந்த கொடுமை வேறு எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. ஆரம்பத்திலிருந்தே சுவேதாவின் நிர்வாண வீடியோ, போட்டோவை வைத்து அவரின் கணவர் மிரட்டிவந்திருக்கிறார். அதற்கு பயந்த சுவேதா, கணவர் கூறியதைப்போலச் செய்திருக்கிறார். ஈரோடு ஜூவல்லரி ஷாப் ஓனர், சுவேதாவின் கணவரின் நெருங்கிய நண்பர்கள், ஏன் அவளுடைய கணவர் குடும்பத்தினரிடமும் அந்தரங்க வீடியோக்கள் இருக்கின்றன. அதனால் ஆளாளுக்கு சுவேதாவை மிரட்டியிருக்கின்றனர்.

கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல்... 4 நாள்களில் விசாரணை! - வேகமெடுக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கு

மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்திருக்கும் எஃப்.ஐ.ஆரில் கூட சுவேதா கூறிய முழுவிவரங்கள் இல்லை. ஆனால் குற்றம்சுமத்தப்பட்டவர்கள் மீது அனுமதியின்றி வீடியோ எடுத்தல், வரதட்சணைக் கொடுமை, கடத்தல், கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் என வலுவான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதனால் சட்டப்படி இந்த வழக்கில் சுவேதாவுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகும் சுவேதாவின் கணவர், குடும்பத்தினரை போலீஸார் விசாரணைக்கு அழைக்கவில்லை" என்றார்.

தற்போது சுவேதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மடிப்பாக்கம் போலீஸார், சுவேதாவின் கணவர், மாமனார் உளட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

சுவேதாவிடம் பேசினோம். ``என்னுடைய கணவர், அவரின் குடும்பத்தினரால் எனக்கு வெளியில் சொல்ல முடியாத கொடுமைகள் நடந்திருக்கின்றன. குறிப்பாக கணவரின் நண்பர்களுடன் என்னை சந்தோஷமாக இருக்கச் சொல்லி அவர் கட்டாயப்படுத்தியிருக்கிறார். அதற்கு நான் சம்மதிக்கவில்லையென்றால் முதலிரவின்போது எடுத்த வீடியோக்களை ஆபாச இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டுகிறார். எனக்கு என் குழந்தை வேண்டும். அதே நேரத்தில் என் கணவர், அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் கண்ணீருடன்.

சுவேதா, மதன்
சுவேதா, மதன்

சுவேதா புகார் குறித்து அவரின் கணவர் மதனின் அப்பாவிடம் கேட்டதற்கு, ``செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், குழந்தைகள் நல ஆணையத்திடமும் எனது மருமகள் அளித்த புகாரின் பேரில் எங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வாரத்தில் ஒரு நாள் குழந்தையைப் பார்க்க சுவேதாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி நாளை குழந்தையை சுவேதாவிடம் காண்பிக்க அழைத்துச் செல்லவிருக்கிறோம். நீங்கள் சொல்லித்தான் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் எங்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது தெரியும். எங்கள் வழக்கறிஞருடன் ஆலோசித்துவிட்டு சுவேதா கூறும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கிறேன்" என்றார்.

மைசூரு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்; தமிழகத்தில் 5 பேரைக் கைதுசெய்த தனிப்படை!
அடுத்த கட்டுரைக்கு