தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகிலுள்ள தாதன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி, காளியம்மாளின் மகள் மீனா. காளியம்மாள் உடல்நலக் குறைவால் இறந்துவிட, முப்பிடாதி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்திருக்கிறார். இவருக்கு மாயாண்டி என்ற மகன் இருக்கிறார். மீனாவுக்கு கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிப்பாண்டி என்பவருடன் கடந்த ஆறு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது. ஆனால், இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மீனா கணவரையும் மகனையும் பிரிந்தார்.

இந்த நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த முத்து என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், தாதன்குளம் கிராமத்திலுள்ள தன் சித்தி பார்வதியின் வீட்டுக்கு வந்திருக்கிறார். இதையறிந்த சுடலை முத்து, அவர் மனைவி முப்பிடாதி, மகன் மாயாண்டி, உறவினரான வீரம்மாள் ஆகியோர் பார்வதியின் வீட்டுக்கு வந்துள்ளனர். மீனாவிடம் இரண்டாவது திருமணம் செய்ததைப் பற்றிக் கேட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுடலைமுத்துவும் மாயாண்டியும் மீனாவை அரிவாளால் வெட்டினர். இதில் மீனா உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதையடுத்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீஸார், சுடலைமுத்து, முப்பிடாதி, மாயாண்டி, வீரம்மாள் ஆகியோரைக் கைதுசெய்தனர். அவர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், “மீனாவுக்கு எங்களோட உறவுக்காரப் பையனான இசக்கிப்பாண்டியனை கல்யாணம் செஞ்சுவெச்சோம். 4 வயசுல ஒரு ஆண் குழந்தை இருக்கு. ஆனா, கணவரோட சண்டை போட்டு பிரிஞ்சுட்டா. நாங்குநேரியைச் சேர்ந்த முத்துங்கிறவனை ரெண்டாவதா கல்யாணம் செஞ்சுக்கிட்டா. இந்த விவகாரம் எங்களுக்கு தாமதமாத்தான் தெரிஞ்சுது. முதல் கணவரும், ஒரு குழந்தையும் உயிரோட இருக்கும்போது ரெண்டாவது கல்யாணம் செஞ்சுக்கிட்டது எங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துச்சு. இரண்டாவது கணவரோட பல இடங்களுக்கு சுற்றுலாவுக்குப் போயி போட்டோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கா. அதைப் பார்த்ததும் எங்களுக்குக் கோபம் இன்னும் அதிகமாச்சு.

இதற்கிடையில இன்னோர் இளைஞரிடம் பழகி வர்றதையும் கேள்விப்பட்டோம். இன்னும் குடும்பத்தைக் கேவலப்படுத்தப் போறாளான்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்போதான் கோயில் திருவிழாவுக்காக மீனா, கிராமத்துக்கு வந்த தகவல் கிடைச்சுது. ரெண்டாவது கல்யாணம் செஞ்சு முதல் கணவரையும், குழந்தையையும் தனியா விட்டுட்டுப் போயிட்டியேன்னு கேட்டோம். ஆனா, தான் தப்பு செஞ்சுட்டோம்கிறதை உணராம எங்களை அவமானப்படுத்துற மாதிரி பேசினா. ஒரு கட்டத்துல வாக்குவாதம் அதிகமாச்சு. ஆத்திரத்துல அவளை வெட்டிக் கொன்னுட்டோம்” என்றனர். பெற்ற மகளை தந்தை, தாய், தம்பியே சேர்ந்து ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.