திருவண்ணாமலை மாவட்டம், கீழ்செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவபாலன் - ரம்பா தம்பதியினர். இவர்களுக்கு 11-ம் வகுப்பு படிக்கும் சரண்யா என்ற மகளும், 7-ம் வகுப்பு பயிலும் கேசவன் என்ற மகனும் (இரு குழந்தைகளின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்ளனர். சே.கூடலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார் சிவபாலன். இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி இரவு சிவபாலனின் மகள் சரண்யா, வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் மயங்கிக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சரண்யாவின் தாயார், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இதனையடுத்து, சரண்யாவை மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது சரண்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் சரண்யாவின் உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வீட்டிலிருந்து வெளியில் சென்றிருந்த சரண்யாவின் தந்தை சிவபாலன், அதுவரை வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், மாணவியின் உடலை 9-ம் தேதி அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்திருக்கின்றன. அதனால், சிறுமியின் தந்தை சிவபாலனை உறவினர்கள் தேடியிருக்கின்றனர். அப்போது, மணலூர்பேட்டை சாலை அருகே உள்ள காப்புக்காட்டில் இரண்டு கை மணிக்கட்டுகள் மற்றும் கழுத்து பகுதியில் அறுக்கப்பட்ட இரத்த காயங்களுடனும், விஷம் அருந்திய நிலையிலும் உயிரிழந்து கிடந்திருக்கிறார்.

அதையடுத்து, அவர் குடும்பத்தினர் இதுகுறித்து தச்சம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் ஆசிரியர் சிவபாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மகளும், தந்தையும் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்திருக்கும் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இருவரின் மரணம் குறித்தும் தண்டராம்பட்டு மற்றும் தச்சம்பட்டு காவல்துறையினரிடம் பேசியபோது, ``சரண்யா, சிவபாலன் மரணம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிவபாலனின் மனைவி ரம்பா மற்றும் அவர் மகன் கேசவன் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

அதனால் தற்போது அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. உடற்கூறு ஆய்வு முடிவுகளும் இன்னும் வரவில்லை. அந்த முடிவு வந்ததும் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு தகவல் தெரிவிக்கிறோம்" என்றனர்.