Published:Updated:

நெல்லையை அதிரவைத்த இரட்டைக் கொலை - சிறுவன் கண் முன்பாக தாத்தா, தாய் கொல்லப்பட்ட கொடூரம்!

கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு

நிலத்தகாராறில் இரு உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளன. நிலம் தொடர்பான வழக்கில் தங்களுக்குப் பாதகமாகத் தீர்ப்பு வந்திருப்பதால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த மூவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளனர்.

நெல்லை மேலப்பாளையம் வேடுவர் காலனியைச் சேர்ந்தவர், தங்கமுத்து. பிராஞ்சேரியைச் சேர்ந்த அவர் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் 17 வருடங்களாகக் குடியிருந்து வருகிறார். அவருக்கு சூரியசந்திரமதி என்ற மனைவியும் மூன்று மகள்களும் இரு மகன்களும் உள்ளனர். மகள்களுக்குத் திருமணமாகி விட்டது.

கொல்லப்பட்ட தங்கமுத்து
கொல்லப்பட்ட தங்கமுத்து

தங்கமுத்து மதுரை விளக்குத்தூண் பகுதியில் டீக்கடையுடன் கூடிய உணவகம் நடத்தி வருகிறார். அவருடைய மகன் உடனிருந்து கடையைக் கவனித்து வருகிறார். மற்றொரு மகன் மனநலக் குறைவுடன் மேலப்பாளையம் வீட்டில் தாய் சூரியசந்திரமதியுடன் உள்ளார்.

தங்கமுத்துவின் பக்கத்து வீட்டில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே காம்பவுண்ட் சுவர் தொடர்பாக பிரச்னை இருந்து வந்திருக்கிறது. இது தொடர்பாக இருவரும் காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள். அங்கு பிரச்னை தீராததால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

கொலையான சுமதி
கொலையான சுமதி

நிலம் தொடர்பான வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வெளிவந்திருக்கிறது. அந்தத் தீர்ப்பு, தங்கமுத்துவுக்குச் சாதகமாக இருந்துள்ளது. அதனால் பக்கத்து வீட்டுக்காரரான ஜெயராஜ் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.

பொங்கல் பண்டிகைக்காக மதுரையில் இருந்து வந்திருந்த தங்கமுத்து, வீட்டைச் சுத்தப்படுத்தி வெள்ளையடிக்கும் பணியைச் செய்திருக்கிறார். அவருக்கு உதவியாக மூத்த மகள் சுமதி தன் 12 வயது மகன் ஜெகதீஷுடன் வந்துள்ளார்.

கொலை நடந்த தெரு
கொலை நடந்த தெரு

வெள்ளையடிக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டுக்காரரான ஜெயராஜும் அவருடைய இரு மகன்களான அந்தோணி, ராஜா ஆகியோரும் அங்கு வந்து வெள்ளையடித்துக் கொண்டிருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் ஆத்திரம் அடைந்த மூவரும் சுமதியின் தலை மீது சுண்ணாம்பு கரைசலைக் கொட்டியிருக்கிறார்கள்.

மகள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து ஓடி வந்த தங்கமுத்துவை மூவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டியும் செங்கலால் கொடூரமாகத் தாக்கியும் கொலை செய்துள்ளனர். சுண்ணாம்பு கரைசல் கண்களில் விழுந்ததால் துடித்துக் கொண்டிருந்த சுமதியையும் அவருடைய 12 வயது மகன் கண் முன்பாகவே கற்களால் அடித்தே கொன்றிருக்கிறார்கள்.

சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை
சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை

இது பற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த மேலப்பாளையம் காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லை காவல்துறை துணை ஆணையர் சரவணன், உதவி ஆணையர் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டதுடன் தடயவியல் வல்லுநர்களும் வந்து சோதனை நடத்தினார்கள்.

இந்தச் சம்பவம் பற்றிப் பேசிய துணை ஆணையர் சரவணன், ``நிலப் பிரச்னை தொடர்பாக இந்தக் கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவிலேயே குற்றவாளிகளைக் கைது செய்து தண்டனை பெற்றுக் கொடுப்போம்’’ என்றார்.

துணை ஆணையர் சரவணன்
துணை ஆணையர் சரவணன்

இந்த நிலையில் சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திலேயே கொலையாளிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாளான இன்று பட்டப்பகலில் இருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மேலப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு