Published:Updated:

மின்சாரம் பாய்ந்து யானை பலி; உடலை புதைத்த தந்தை, இரண்டு மகன்கள் கைது!

மின்சாரம் பாய்ந்து யானை பலி

இறந்த யானையைக் கண்ட எல்லப்பன் வனத்துறையிடமிருந்து தப்புவதற்காக, தன் மகன்களான முனிராஜ் (38) மற்றும் சுப்ரமணி (28) ஆகியோருடன் இணைந்து, யானை இறந்துகிடந்த இடத்துக்கு அருகே குழி தோண்டி, யானையின் உடலை மண்ணில் புதைத்துள்ளார்.

மின்சாரம் பாய்ந்து யானை பலி; உடலை புதைத்த தந்தை, இரண்டு மகன்கள் கைது!

இறந்த யானையைக் கண்ட எல்லப்பன் வனத்துறையிடமிருந்து தப்புவதற்காக, தன் மகன்களான முனிராஜ் (38) மற்றும் சுப்ரமணி (28) ஆகியோருடன் இணைந்து, யானை இறந்துகிடந்த இடத்துக்கு அருகே குழி தோண்டி, யானையின் உடலை மண்ணில் புதைத்துள்ளார்.

Published:Updated:
மின்சாரம் பாய்ந்து யானை பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காப்புக்காடு உள்ளது. இந்த அடர்வனத்தில் யானைகள் ஏராளமாக உள்ளன. இந்தக் காப்புக்காட்டையொட்டிய பகுதியில் கடூர் கிராமத்தையொட்டி அக்குபாய் கொட்டாய் உள்ளது. இந்த ஊரை சேர்ந்த விவசாயி எல்லப்பன் (63). இவர் தனது நிலத்தில் நெல் பயிரிட்டு, வனவிலங்குகளால் சேதம் ஏற்படுவதைத் தடுக்க, சட்ட விரோதமாக மின் வேலி அமைத்துள்ளார்.

கைதான குற்றவாளிகள்.
கைதான குற்றவாளிகள்.

கடந்த, 14-ம் தேதி, அந்த விளைநிலத்துக்கு வந்த காட்டு யானைக்கூட்டம் மின் வேலியைக் கடக்க முயன்றபோது, குட்டியானை மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக மரணித்தது. இறந்த யானையைக் கண்ட எல்லப்பன் வனத்துறையிடமிருந்து தப்புவதற்காக, தன் மகன்களான முனிராஜ் (38) மற்றும் சுப்ரமணி (28) ஆகியோருடன் இணைந்து, யானை இறந்துகிடந்த இடத்துக்கு அருகே குழி தோண்டி, யானையின் உடலை மண்ணில் புதைத்துள்ளார்.

இது குறித்து ரகசிய தகவலறிந்த, வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மூவரையும் கைது செய்து விசாரித்ததில், யானை புதைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. நேற்று (22-ம் தேதி) மதியம் ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான வனத்துறையினர், யானையின் உடலை ஜே.சி.பி இயந்திர உதவியுடன் தோண்டி எடுத்தனர்.

யானையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
யானையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

கோவை வனக்கால்நடை டாக்டர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்ததில் இறந்தது, ஐந்து வயதான ஆண் யானை எனத் தெரியவந்துள்ளது. எல்லப்பன் நிலத்துக்கு அருகேயுள்ள புறம்போக்கு நிலத்தில் யானையின் சடலத்தைப் புதைத்தனர். குற்றத்தில் ஈடுபட்ட மூவர் மீதும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளனர். குற்றத்தை மறைக்க, ஒரு யானையையே மண்ணில் புதைத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், கிருஷ்ணகிரியில் பேசுபொருளாகியுள்ளது.

விழித்துக்கொள்ளுமா அரசு?

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்திடம், ஆர்.டி.ஐ, வாயிலாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, 2010 ஜனவரி முதல் 2020 டிசம்பர் வரையிலான, கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதிலும், மின்சாரம் தாக்கியது, மனித – வனவிலங்கு மோதல் உள்ளிட்ட பல செயற்கை காரணங்களால், 1,160 யானைகள் இறந்துள்ளன என அமைச்சகம் பதிலளித்துள்ளது. இதில், மின்வேலிகளில் சிக்கி மட்டுமே, 741 யானைகள் பரிதாபமாக மரணித்துள்ளன.

இறந்த குட்டி ஆண் யானை.
இறந்த குட்டி ஆண் யானை.

சட்ட விரோதமாக மின் வேலி அமைப்பது, வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிக `வோல்ட்’ திறனில் மின் வேலி அமைப்பதென, அத்துமீறல்கள் அனுதினமும் அதிகரித்து வருவதால், யானைகள் மரணிக்கும் எண்ணிக்கைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வனத்துறையினர் முறையாகக் கண்காணிப்பு மேற்கொண்டால், சட்ட விரோத மின் வேலிகள் கணிசமாகக் குறையும், யானைகள் மரணிப்பது தவிர்க்கப்படும்.

யானைகள் இல்லையேல் காடுகள் இல்லை, காடுகள் இல்லையேல் எந்த உயிரும் இல்லை என்பதே நிதர்சனம். காட்டின் காவலர்களான யானைகளைக் காக்க, கிருஷ்ணகிரி, தர்மபுரி மட்டுமன்றி, அனைத்து மாவட்டங்களிலும், சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின் வேலிகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.