
மகளைக் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி நாடகமாடிய தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நாடார் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 42). அந்தப் பகுதியில் ஐஸ் கம்பெனி நடத்திவரும் முருகனின் மகள் தவமணி, தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். தவமணி, தான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் முருகனுக்குத் தெரியவர, தவமணியைக் கண்டித்திருக்கிறார். ஆனால், தொடர்ந்து அந்த நபருடன் தவமணி பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த முருகன், தவமணிக்கு திருமண ஏற்பாடு செய்திருக்கிறார். திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த தவமணி, குடும்ப உறுப்பினர்களுடன் சண்டையிட்டிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகன், தவமணியை அடித்து, துப்பட்டாவால் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி, வீட்டிலேயே உயிரிழந்தார் தவமணி. இதைத் தொடர்ந்து, தனது மகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்களுக்குத் தெரியப்படுத்தி, தவமணியின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார் முருகன். முருகனின் நாடகம் குறித்து அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்க, விசாரணையில் இறங்கிய தனிப்பிரிவு போலீஸார், முருகனின் நாடகத்தைக் கண்டுபிடுத்தனர். முருகனும், தவமணியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி விசாரணை நடத்தினார். தவமணியின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக கானாவிலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முருகன் கைது செய்யப்பட்டார்.
பெற்ற மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த தந்தை, அதை மறைத்து `தற்கொலை’ என நாடகமாடியது அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.