Published:Updated:

`சடங்கு, சம்பிரதாயம்; பெண் மந்திரவாதி!’ - கந்தவர்வகோட்டை சிறுமி கொலையில் சிக்கிய தந்தை


கொல்லப்பட்ட சிறுமி மற்றும் தந்தை பன்னீர்செல்வம்
கொல்லப்பட்ட சிறுமி மற்றும் தந்தை பன்னீர்செல்வம்

சிறுமியின் தந்தை பன்னீர்செல்வம், ஊர்க்காரர்களிடம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துதான் கொல்லப்பட்டுள்ளார் என்று தொடர்ந்து திட்டவட்டமாகக் கூறி வந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே நொடியூரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு மூன்று மகள்கள். இதில் மூன்றாவது மகள் 13வயதுச் சிறுமி. கடந்த 18ம் தேதி வீட்டிற்குச் சற்று தொலைவில் உள்ள குடிநீர் குளத்திற்குத் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, தைலமரக்காட்டிற்குள் உடலில் காயங்களுடன் கழுத்து நெறிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்தார். சிறுமியை மீட்ட அவரின் உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தன் மகளை யாரோ பாலியல் வன்கொடுமை செய்து தைலமரக்காட்டில் வீசிவிட்டதாகத் தந்தை பன்னீர்செல்வம் கண்ணீர் மல்க போலீஸில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கந்தர்வக்கோட்டை போலீஸார், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினர்.

சம்பவ இடத்தில் விசாரணை
சம்பவ இடத்தில் விசாரணை

இதற்கிடையே, சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை. அதற்கான காயங்கள் ஏதும் இல்லை. கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரியவந்தது. இதையடுத்து, வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிறுமி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து துரிதமாக விசாரித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தனிப்படையினருக்கு எஸ்பி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த 19ம் தேதி முதல், தனிப்படை போலீஸார் சிறுமியின் உறவினர்கள் தொடங்கி, ஊர்க்காரர்கள் வரையிலும் பலரிடமும் விசாரணை நடத்தினர். ஆனாலும், வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

தனிப்படை போலீஸாருக்கு சவாலான வழக்காக மாறவே, விசாரணையை முடுக்கிவிட்டனர். இந்த நிலையில்தான், சிறுமியின் தந்தை பன்னீர், ஊர்க்காரர்களிடம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துதான் கொல்லப்பட்டுள்ளார் என்று தொடர்ந்து, திட்டவட்டமாகக் கூறிவந்துள்ளார். இதனால், பன்னீரின் நடவடிக்கைகளில் போலீஸாருக்கு சந்தேகம் வரவே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பன்னீர் பல திடுக்கிடும் தகவல்களை போலீஸாரிடம் கூறியுள்ளார்.

``சில சடங்குகள் செய்து செய்து 13 வயதுச் சிறுமியான தன் மகளைக் கொன்றுவிட்டால், பணம், அந்தஸ்து பெருகி உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று மந்திரவாதி பெண் ஒருவர் கூறியதாகவும், அவரின் பேச்சைக் கேட்டு சில சடங்குகளைச் செய்து உறவினர் ஒருவருடன் சேர்ந்து மகளைக் கழுத்தை நெறித்துக் கொன்றதாகவும், தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நல்லவன் போல நாடகமாடியதாகவும் கூறியுள்ளார்.

பன்னீர்செல்வம்
பன்னீர்செல்வம்

இதையடுத்து, பன்னீர், அவரது உறவினர் குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடையவர்களை வலை வீசித் தேடி வருகின்றனர். தற்போது மந்திரவாதி பெண்ணிடம் தொடர்ந்து போலீஸார் விசராணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பன்னீர்செல்வத்திற்கு மூக்காயி என்ற மற்றுமொரு மனைவி இருந்துள்ளார்.அவரும் இந்தக் கொலைச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மூக்காயியும் மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்த வழக்கில் பல மர்ம முடிச்சுகள் இருப்பதால், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மூட நம்பிக்கையால், பெற்ற மகளையே தந்தை திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவம் கந்தர்வக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு