Published:Updated:

`குழந்தைகள் அநாதையாகிவிடுவார்கள்’ - மனைவி இறந்த துக்கத்தில் விபரீத முடிவெடுத்த ராணிப்பேட்டை இளைஞர்

சம்பவம் நடைபெற்ற ரயில் நிலையம்
சம்பவம் நடைபெற்ற ரயில் நிலையம்

மனைவி இறந்த துக்கம் தாளாமல், 2 குழந்தைகளுடன் இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரின் மனைவி நிர்மலா (23). இவர்களுக்குத் திருமணமாகி நான்கரை ஆண்டுகள் ஆகின்றன. சஞ்சனாஸ்ரீ (3), ரித்திகாஸ்ரீ (1) என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். வெங்கடேசன் பெங்களூரில் தங்கி முதியவர் ஒருவருக்குச் செவிலியராக வேலை செய்துவந்தார்.

தற்கொலை செய்துகொண்ட வெங்கடேசன்
தற்கொலை செய்துகொண்ட வெங்கடேசன்

நிர்மலா தன் குழந்தைகளுடன் மாமனார், மாமியார் உடன் கொடைக்கல்லில் வசித்துவந்தார். இந்த நிலையில், நிர்மலாவுக்கும் அவரின் மாமனார், மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மன வேதனையில் இருந்த நிர்மலா நேற்று வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து கொண்டபாளையம் போலீஸார் வழக்கு பதிந்து சப்-கலெக்டர் விசாரணைக்குப் பரிந்துரை செய்திருந்தனர். மனைவி இறந்த செய்தியை அறிந்து பெங்களூரிலிருந்து வெங்கடேசன் கொடைக்கல் கிராமத்துக்கு வந்தார். மனைவியின் சடலத்தைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுதார். இந்த மரணம் தொடர்பாக, வெங்கடேசனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

உயிரிழந்த நிர்மலா மற்றும் அவரின் 2 குழந்தைகள்
உயிரிழந்த நிர்மலா மற்றும் அவரின் 2 குழந்தைகள்

மனைவி இறந்த துக்கத்தில் இருந்த அவர், போலீஸார் தன்னைக் கைதுசெய்துவிட்டால் குழந்தைகள் அநாதையாகிவிடுமோ என்று அச்சப்பட்டு நண்பர்களிடம் கூறியிருக்கிறார். அதைத்தொடர்ந்து, தன்னுடைய 2 குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வாலாஜாபேட்டை ரோடு ரயில் நிலையத்துக்கு வந்தார்.

Vikatan

ரயில் நிலையத்திலிருந்து சற்று தூரத்தில் சென்ற வெங்கடேசன், அந்த வழியாக வந்த சென்னை-பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்முன் குழந்தைகளுடன் பாய்ந்தார். மனதைப் பதைபதைக்கச் செய்த இந்தச் சம்பவத்தில் வெங்கடேசனும் அவரின் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.

சம்பவம் நடைபெற்ற ரயில் நிலையம்
சம்பவம் நடைபெற்ற ரயில் நிலையம்

ராணிப்பேட்டை போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் நேரில் வந்து உடல்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஒரேநாளில் ஒரு குடும்பமே சிதைந்த சம்பவம், ராணிப்பேட்டையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு