காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள படைப்பை, அண்ணாநகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ஜெயா (27) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (31) என்பவருக்கும் ஜெயாவுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் ஆனது. திருமண சமயத்தில் பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக 40 சவரன் நகை உட்பட 18 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான சீர்வரிசை வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்லபடுகிறது.

இந்தச் சூழலில், திருமணம் ஆன சில தினங்களிலேயே ஜெயாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் நச்சரிக்கத் தொடங்கியுள்ளனர் எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஜெயாவின் மாமனார் நடராஜனும் மாமியார் சாந்தகுமாரியும் அவர்களோடு, சதீஷின் சகோதரர் ராஜேஷும் வரதட்சணை கேட்டு அவரைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் வரதட்சணை கேட்டு ஜெயாவுக்கு சூடு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதுமட்டுமின்றி, ஜெயாவிடம் நடராஜனும் ராஜேஷும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. நாளுக்கு நாள் கணவர் வீட்டாரின் கொடுமை அதிகரித்த சூழலில் அங்கிருந்து தப்பித்து தனது பெற்றோரின் வீட்டுக்கு வந்துவிட்டார். ஜெயா தனக்கு ஏற்பட்ட வரதட்சணைக் கொடுமை மற்றும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த தாம்பரம் போலீஸார் ஜெயஸ்ரீயின் மாமனார் நடராஜனைக் கைதுசெய்துள்ளனர். இவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள நடராஜனின் மகன்கள் மற்றும் மனைவியை போலீஸார் தேடிவருகிறார்கள். 18 லட்சத்துக்கும் மேல் வரதட்சணை கொடுத்திருந்த நிலையிலும், அந்தப் பெண்ணுக்கு மேலும் வரதட்சணைக் கொடுமை மற்றும் பாலியல் அத்துமீறல் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.