Published:Updated:

`என் மனைவி கன்னத்தில் ஏன் அறைந்தாய்?!' - மருமகனைத் துரத்திக் கொலை செய்த மாமனார்

குருபிரசாத்

கோவையில் மாமியாரைக் கன்னத்தில் அறைந்த மருமகனை, மாமனார் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajendran
Rajendran

கோவை, இடையர்பாளையத்தை அடுத்த சோப்பு கம்பெனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். பெயின்டராகப் பணிபுரிந்து வந்தார். இவர் கவுண்டம்பாளையம் சக்தி நகரைச் சேரந்த தங்கமணி என்பவரின் மகள் ஷாலினியை ஒரு வருடத்துக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். நிறைமாத கர்ப்பிணியான ஷாலினி பிரசவத்துக்காகக் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், போதிய அளவு ரத்தம் இல்லாததால், `சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க முடியாது' என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.

thangamani
thangamani

மேலும், கடந்த சில மாதங்களாக ராஜேந்திரன் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து திரும்பிய ஷாலினி, கவுண்டம்பாளையம் பகுதியிலுள்ள தன் சகோதரி வீட்டுக்குச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து, ஷாலினியைத் தேடிச் சென்ற ராஜேந்திரன், தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அப்போது ஷாலினியின் தாய் மீனா, `சரியாக வேலைக்குப் போகாதவனுடன் என் மகளை அனுப்ப முடியாது' என மறுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், மாமியாரின் கன்னத்தில் அறைந்துவிட்டு அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து தன் கணவர் தங்கமணி குமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்திருக்கிறார் மீனா.

இதனால் ஆத்திரமடைந்து ராஜேந்திரனிடம் விசாரித்திருக்கிறார் தங்கமணி. அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ராஜேந்திரனின் முதுகில், கத்தியால் குத்தியுள்ளார் தங்கமணி. உயிருக்குப் பயந்து ஓடிய ராஜேந்திரனை துரத்திச் சென்ற தங்கமணி, வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த ராஜேந்திரனை அப்பகுதி மக்கள், கோவை அரசு மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தனர்.

rajendran
rajendran

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த துடியலூர் போலீஸார், கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். மருமகனைக் கொலை செய்து, தப்பியோடிய தங்கமணியை, போலீஸார் தேடிவருகின்றனர். இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட ஷாலினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.